திருவாதிரை/ஆதிரை பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்:
கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்கொவ்வைத் துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசுஆகுவர் அலராள் பிரியாளே!
பாடல் விளக்கம்:
ஓசையையுடைய கடல், முழக்கம் செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்ற வரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர்; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள்அவர் களை விட்டு நீங்காள்.
*திருச்சுழி திருமேனிநாதர் கோயில் (திருச்சுழியல் - விருதுநகர்)
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற மொத்தம் 274 சிவாலயங்களுக்குள் இது 202–வது திருத்தலமென்பதும் பாண்டிய நாட்டு சிவாலயங்களில் இது 12வது என்பதும் பெருமைப்படத்தக்கது
அமைவிடம்:
விருதுநகருக்குத் தெற்கே 32 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
*இத்தலத்தின் வேறு பெயர்கள்*: வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி
சிறப்பு:
இது ரமண மகரிஷி அவதரித்த அரிய தலம்.
சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை திரிசூலத்தினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் *திருச்சுழியல்* என்று அழைக்கப்பட்டது.
அருச்சுனன் தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்டுப் பாண்டிய நாடு வந்து, சித்திராங்கதையை மணந்து அவளுடன் திருச்சுழியல் வந்து இறைவனை வணங்கித் தன் காண்டீவத்தின் முனையால் கல்லி உண்டாக்கிய *கோடி தீர்த்தமும்* (அம்மன் சந்நிதி முன்புறம் கிணறு) உள்ளன.
கௌதம் முனிவருக்கும், அகலிகைக்கும் *ஆனந்த தாண்டவ கோலத்தைக்* காட்டியருளிய தலம்.
*மற்ற எந்தக் கோவிலிலும் இல்லாத பெருமை இந்தக் கோவிலுக்கு உள்ளது என்பார்கள். அதாவது இறந்தவர்களுக்கு இந்த ஒரு கோவிலில் மட்டுமே அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவார்கள். அப்படி இறந்த நம் உறவுகளுக்கு அர்ச்சனை செய்வித்து மோட்ச தீபம் ஏற்றினால் உடனே அவரது பாவங்கள் கழிக்கப்பட்டு 21 பிறவியை அவர்கள் கடந்து விடுவார்களாம். யார் அவர்களுக்காக அர்ச்சனை செய்கிறாரோ அவர் முதலில் தனக்கு வேண்டப்பட்ட இறந்தவர்களுக்கு முதலில் அர்ச்சனை செய்து வணங்கி விட்டு, அதன் பிறகு மீண்டும் இன்னொரு முறை சென்று தனது பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்*.
இறைவி பெயர்: அருள்மிகு துணைமாலையம்மை (அருள்மிகு சகாயவல்லி, அருள்மிகு சொர்ணமாலை, அருள்மிகு முத்துமாலையுமையாள், அருள்மிகு மாணிக்கமாலை).
இறைவன் பெயர்: அருள்மிகு திருமேனிநாதர், (அருள்மிகு சுழிகேசர், அருள்மிகு பிரளயவிடங்கர், அருள்மிகு தனுநாதர், மணக்கோலநாதர், அருள்மிகு கல்யாணசுந்தரர், அருள்மிகு புவனேஸ்வரர், அருள்மிகு பூமீஸ்வரர்).
Similar Posts : திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, கேட்டை நட்சத்திர பரிகாரங்கள், ரோகிணி நட்சத்திர பலன்கள், திருவாதிரை நட்சத்திர பலன்கள், விருட்ச சாஸ்திரம், 27 நட்சத்திரங்கள், See Also:திருவாதிரை ஆதிரை நட்சத்திரம்