புண்ணியத்தை பல விதங்களில் சம்பாதிக்கலாம். வீட்டிலிருந்தபடியே, அனுஷ்டானங்களைச் செய்வதாலும், அதிதி சத்காரம் போன்றவைகளைச் செய்வதா லும் புண்ணியம் கிடைக்கும். வசதியிருந்தால், வெளியில் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடியும், ஆலய தரிசனம் செய்தும், மகான்கள் வாழும், வாழ்ந்த இடங்களுக்குச் சென்று மகான்களை தரிசித்தும் ஆசி பெறலாம். மகான்களின் சமாதி தரிசனம் செய்து வரலாம்; எல்லாமே புண்ணியம்தான்.
தீர்த்தங்களில் (அதாவது, புண்ணிய நதிகளில்) ஸ்நானம் செய்வது, தீர்த்தக் கரைகளில் பித்ரு காரியங்கள் செய்வது, தான தர்மம் செய்வது எல்லாம் விசேஷ பலன்களைத் தரும். கங்கையில் ஸ்நானம் செய்வதும், காசி விஸ்வநாதர் தரிசனமும் முக்திக்கு வழி.
பிரசித்தி பெற்ற ÷க்ஷத்ரம் பிரயாகை. இது, அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகிறது. இதற்கு தனிப்பெருமை உண்டு. அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது. இந்த இடத்தை, திரிவேணி சங்கமம் என்றும் கூறுவர்.
கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம்.
மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம். இந்தப் பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு.
பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து, தான தர்மங்கள் செய்ய வேண்டும். இந்த இடத்தில் கோ தானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ, அத்தனை வருட காலம் சிவலோக வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எந்த தானம் கொடுத்தாலும், அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்க வேண்டும். தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும்.
கோ தானம் கொடுப்பது என்றால், நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து (இளங்கன்று சிறந்தது) பசுவுக்கு அலங்காரம் செய்து, கொம்பில் கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும்.
கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலனில்லை. நல்ல கறவை மாடு, இளங்கன்று என்றால், ஒரு வருஷத்துக்கு பால் கறந்து சாப்பிடுவர். சிலர் பூஜைக்கும், அபிஷேகத்துக்கும் அதன் பாலை பயன்படுத்துவர். இதனால், பசுவை தானம் செய்த புண்ணியமும், பூஜை அபிஷேகத்துக்குப் பசும்பால் கிடைக்க உதவி செய்த புண்ணியமும் கிடைக்கிறது.
ஒரு தடவை இப்படியொரு கோ தானம் செய்து விட்டால், நிரந்தர புண்ணியம் கிடைக்கும். பாலைக் கறந்து, வேளா வேளைக்கு கெட்டிக் காபியும், கெட்டித் தயிரும், பசும் வெண்ணையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், புண்ணியம் எப்படி கிடைக்கும்? சிவலோக வாசம் எப்படி கிடைக்கும்? எல்லாம் மனசு தான் காரணம். புண்ணியத்தை யாரும் பங்கு கேட்க முடியாது; நாம் செய்யும் புண்ணியம், நமக்கே தான். மறந்து விடக் கூடாது!