சிவராத்திரி தோன்றியது எப்படி?
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனாரை வழிபட்ட பார்வதியாள், இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.
பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள் அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும். மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும். இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி. சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, குலதெய்வம் கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நம் மனம் சந்திரனின் இயக்கத்தைப் பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்து விடும்.
நம் மனமும் இப்படித்தான்... ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, 'அது எதற்கு, அதனால் என்ன பயன்...' என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே,'விட்டேனா பார்...' என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.
சிவராத்திரியை ஏன் தேய்பிறையின், 14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர்
மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடைய முடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.
இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றி போய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும், முதலும், முடிவும் இல்லாதவர். மனிதர்களோ அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன.
சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். 'எழுபிறவி' என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம்.
பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது... அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்... அதுதான், 'அன்பே சிவம்!' பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும். அதற்காக நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் நாளே சிவராத்திரி. இந்த விரதத்தை பொருள் உணர்ந்து அனுஷ்டித்து சிவன் அருள் பெறுவோம்!
சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.
ராத்திரி எனப் பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதம் சிவராத்திரியாகும்.
இந்த விரதம் நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகா சிவராத்திரியாகும். சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும்.
அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த 'ராத்திரி' மங்கலான ஒளி சிந்தும் ராத்திரியாகும்.
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங்களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
செல்வம் தரும் சிவராத்திரி: மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன் முனிவரிடம், ஐயனே! நான் சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்.
சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?
பிரம்மாவும், விஷ்ணுவும் இறைவனின் அடியையும் முடியையும் தேடிய இரவே சிவராத்திரி. அப்போது, சிவன் லிங்கோத்பவராக எழுந்தருள தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபட்டனர். உலக உயிர்களின் நன்மைக்காக, அம்பிகை கண்விழித்து இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபெருமானை வழிபட்ட நாள். ஒரு சமயம், பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலகமே இருண்டு போனது. வெகுண்டு எழுந்த சிவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள், அவரை இரவு முழுவதும் வழிபட்ட நாள்.பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை, ஒன்று சேர்த்து சிவன் குடித்தார். அந்த இரவில் தேவர்கள் கண்விழித்து சிவனை பூஜித்தனர். சிவராத்திரி குறித்து புராணக்கதைகள் உள்ளன. ஆனால், ஆகம தகவல்களின் படி, அம்பிகையின் அம்சமான திரயோதசியும், சிவ அம்சமான சதுர்த்தசியும் இணையும் நேரம் சிவபூஜைக்குரிய புண்ணிய காலம் ஆகிறது.
மகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள்
1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.
2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன. வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.
வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக் கொடுத்த கதை
முன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.
அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு ”சிவலிங்கம்” இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் தூய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.