கோவைக்காய் :
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.
மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
ஆனால் நிறையப் பேர் பாகற்காயை ஒதுக்குவதுபோல் கோவைக்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பமுடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.
கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்குமே. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரவையில் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது. பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.