சிவபெருமான் பக்தர்களான புஷ்பதண்தா மற்றும் மல்யவா என்ற இருவர் சாபம் காரணமாக வெள்ளை யானையாகவும் சிலந்தியாகவும் இந்த காட்டில் பிறந்தனர். யானை சந்திரதீர்த்த குளத்திலிருந்து சிவபெருமானுக்கு நீரும் மலரும் கொண்டுவந்து பூஜை செய்தது. சிலந்தியோ சிவலிங்கத்தின் மீது மர இலைகள் விழாமல் இருக்க, வலை பின்னியது. பூஜைக்கு வந்த யானை சிலந்தி வலையை அசிங்கமாகக் கருதி வலையை துடைத்தெறிந்தது. இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு சண்டையில் இரண்டுமே மாய்ந்தன. சிவபெருமான் இருவருக்குமே மோட்சம் அளித்தார். பிற்காலத்தில் சிலந்தி சோழ மன்னர்கள் குடும்பத்தில், கோச்செங்கட்டனாக பிறந்தது. இந்த மன்னர் பிற்காலத்தில் சிவபெருமானுக்கு சுமார் எழுபது கோவில்கள் கட்டிய பெருமை கொண்டவர்.
திருவானைக்காவல் கோவிலும் மிக பிரம்மாண்டமாக இந்த மன்னராலேயே கட்டப்பட்டது. அவரது பூர்வ ஜென்ம நினைவுகள் காரணமாக இந்த திருக்கோவிலில் யானைகள் நுழையாதபடி வடிவமைத்துள்ளார். கோவிலுக்குள் யானை வந்தாலும் சிவபெருமான் சன்னதி அருகே வரமுடியாதபடி கருவறை அமைந்துள்ளது.
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் கருவறைக்குள் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
உள் பிரகாரத்தில் வாயிலில் இருந்து பார்த்தால் கருவறை தெரியாது. கருவறை வாயில் அமைந்திருக்க வேண்டிய இடத்தில் 9 துளைகளைக் கொண்ட ஜன்னல் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. இது மட்டும் அல்லாமல், மிகவும் குறுகிய வாயில் ஒன்றும் அமைந்துள்ளது. அதற்குள் 4 அல்லது 5 பேர் மட்டுமே சென்று சுவாமியை தரிசிக்க இயலும்