எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களைமுட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார்.
அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.