“உள்ளம் பெருங்கோயில் ஊன்உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காள மணிவிளக்கே.”
நம்முடைய மனமே பெருங்கோயிலாக இருக்கிறது. தசையாலான நமது உடலினுள் அந்தக் கோயில் இருப்பதால், நமது உடம்பு ஓரு ஆலயமாகத் திகழ்கிறது. இறைவன் நம்முடைய மனதின் தேவைகளை அறிந்து அனைத்தையும் வழங்குவதால் வள்ளலாக இருக்கிறார். அந்த வள்ளலை அடைவதற்காக எந்நேரமும் அவனது ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பதால், நமது வாய், நமது உடலென்னும் ஆலயத்தின் கோபுரவாசலாக நிற்கிறது. இறைவனை அடைவதற்கான வழிகளை அறிந்து தெளிந்தவருக்கு அவரது ஆன்மாவே சிவரூபமாக, அதாவது சிவலிங்கமாக இருக்கிறது. அவர்களால் தம்மைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள முடியும். அவர்களுக்கு அந்தக் கள்ளப் புலன்கள் அழகிய விளக்காக மட்டுமே தெரியும்.
உடம்பினில் குடியிருக்கும் உத்தமனைக் காணும் வழி என்னவென்று சென்னையில் உள்ள கிண்டியில் ஜீவசமாதியில் வீற்றிருக்கும் மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார் கூறுகிறார். அவரது ஜீவசமாதியில் நுழையுமுன் நம் கண்ணில்படுவது, தமது மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரைதான்.
“உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி”
இதுவே நம்முடைய வினாவிற்கான பதிலுமாக இருக்கிறது.
அந்தண மரபைச் சேர்ந்த சிவலிங்க நாயனார், 1835-ல் சென்னைக்கு அருகிலுள்ள பரங்கிமலையில் அரங்கையா, குள்ளம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் நூல்களையும் கற்றுப் பெரும் பண்டிதராகவும் இருந்தார்.
ஏட்டுக் கல்வி தமக்கு உதவாது என்று மெய்யறிவைக் கற்றுக் கொடுக்க வல்ல குருவினைத் தேடியலைந்தார். அவருக்கு ‘ஓழிவிலொடுக்கம்’ என்ற நூல்தான் குருவைக் காட்டிக்கொடுத்தது. ‘தன்னைத் தான் உணரத் தீருந்தகையறு பிறவி’ என்ற மையக் கருத்தினைக் கொண்ட அந்த நூலை இயற்றியவர், ‘கண்ணுடைய வள்ளலார்’ என்று அறிந்து அவரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்டார்.
சிவலிங்க நாயனார் ‘பூரணாநந்தோதயம்’ என்ற பெயரில் ஏராளமான பாடல்களைக் கொண்ட நூல் ஒன்றையும் இயற்றியுள்ளார்.
“காடான ஐம்புலக்காட்டி னிலிருந்துஉன் ஊர்
கரைசேர திருவருள் புரி
கருணைவழி பரவை நிகரறிவிலறிவாய் முளைக்
கண்ணுடைய வள்ளல் குருவே”.
என்று தமக்கு வழிகாட்டுமாறு வேண்டிக்கொள்கிறார். நாயனாரின் குருவான கண்ணுடைய வள்ளலார், திருஞானசம்பந்தரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயனார், தமது இடைவிடாத யோகப் பயிற்சிகளின் மூலம் அனைத்து சித்திகளையும் பெற்றார். யோகப் பயிற்சியின்போது தரையிலிருந்து சில அடிதூரம் உயரே எழும்பிச் சென்று தியானம் செய்வாராம். நவகண்ட யோகமும் கூடுவிட்டுக் கூடு பாய்வதும் இவரை உலகறியச் செய்தது. ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் தோற்றமளித்த அதிசயமும் நடந்துள்ளது.
ஒரு காலகட்டத்தில், நாயனார், பென்னி அண்ட் கம்பெனியின் இயக்குநராக இருந்த சிம்சன் துரையிடம் பணியாளராகச் சேர்ந்தார். ஒருநாள் இரவு சிம்சன் துரை தமது படுக்கையறையில் படுக்கச் சென்றபோது நாயனார், அவரை அங்கு படுக்க வேண்டாம் என்று தடுத்தார். சிம்சன் துரை அவரைக் கோபித்துவிட்டுப் படுக்கையறையினுள் சென்று படுத்து உறங்கிவிட்டார். நாயனார் அங்கிருந்த பணியாட்களின் உதவியுடன், துரையைக் கட்டிலுடன் அந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தினார். சிறிது நேரத்தில் படுக்கையறையின் மேல்தளம் பெரும் சப்தத்துடன் இடிந்து விழுந்தது. சிம்சன் துரை நாயனாரிடம் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்துகொண்டார். அதன் பிறகு அனைத்து விஷயங்களிலும் நாயனாரிடம் ஆலோசனை கேட்டுச் செய்வதை வழக்கமாகக் கொண்டார்.
சிம்சன் துரை தம்முடைய தாய்நாட்டிற்குச் செல்வதற்கு முன், சிவலிங்க நாயனாருக்குக் கிண்டியில் 22 ஏக்கர் நிலத்தை (இப்போது ஜீவசாமதி இருக்கும் இடம்) வாங்கி நன்கொடையாக அளித்துவிட்டுச் சென்றார். அவரது கப்பற்பயணத்தின்போது, இடையில் பெரும் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டது. உயிருக்குப் பயந்து கப்பலிலிருந்தவர்கள் கூக்குரலிட்டுக்கொண்டிருந்தபோது சிம்சன் துரை, நாயனாரை மனதில் நினைத்தார். நாயனார் அங்கு தோன்றி அவருக்குத் துணையாக இருந்தாராம். சிறிது நேரத்தில் கடல் கொந்தளிப்பு அடங்கியதும் நாயனார் அங்கிருந்து மறைந்துவிட்டாராம்.
அதன் பிறகு நாயனார் தமக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் ஞானசம்பந்தர் பெயரில், ஒரு மடாலயத்தை நிறுவி, தாம் பெற்ற ஞானத்தைத் தமது மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதித்துவந்தார். தாம் சமாதியடையும் காலம் வந்ததும் அதனை முன்னதாகவே அறிவித்தார்.
அவா; அறிவித்தபடி 1900-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி, மூலநட்சத்திரம் கூடிய பெளர்ணமி திதியில் நிர்விகற்ப சமாதியடைந்தார்.
நாயனாரின் ஜீவசமாதியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பிருங்குசைலம் என்று அழைக்கப்பட்டது . பின்னர் பிருங்குமாநகர் ஆயிற்று.
மகான் சாங்கு சித்தரின் ஜீவசமாதியைத் தரிசிக்க
கிண்டியில் தாம்பரம் மெயின்ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் எம்.கே.என். சாலையில் சிறிது தூரத்தில் மாங்குளம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள தெருவிற்குள் ஜீவசமாதி அமைந்துள்ளது.