புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
புனர்பூசம்தான் மிதுன ராசியில் இடம்பெற்றுள்ள சாத்வீகமான நட்சத்திரம். நட்சத்திர அதிபதியாக குருவும், ராசியாதிபதியாக புதனும், முதல் பாதத்தின் அதிபதியாக செவ்வாயும் வருகிறார்கள். பொதுவாகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்றல், கற்பித்தல் என்றுதான் இருப்பார்கள். பள்ளியில் படிக்கும்போதே நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவும் செய்வார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 14 வயதுவரை குரு தசை இருக்கும். அதனால் கூச்ச சுபாவத்தோடு இருப்பார்கள். எட்டாம் வகுப்பு வரை படிப்பிலும், ஒழுக்கத்திலும் உதாரண மாணவராக விளங்குவார்கள். 15லிருந்து 33 வயது வரை சனி தசை நடக்கும். பொதுவாக இந்த ராசிக்கே சனி யோககாரகன்தான். அப்படியிருந்தும் பாதகாதிபதியாக செவ்வாய் வருவதால், படிப்பில் கவனம் சிதறும். பள்ளிப் பருவத்திலிருந்தே காவல்துறை, ராணுவம், விமானப்படை என்று பல்வேறு விதமான துறைகளை சுட்டிக்காட்டி நம்பிக்கை கொடுங்கள். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் போன்றவை முன்னேற்றத்தைக் கொடுக்கும். கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஜெனிடிக் எஞ்சினியரிங் போன்றவையும் சிறப்பே.
இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வசீகரமாக இருப்பார்கள். முதல் பத்து வருடங்கள் குரு தசை நடக்கும். விளையாட்டும் இருக்கும்; விஷயமும் இருக்கும் என்பதாகத்தான் வலம் வருவார்கள். பள்ளியில் பாட்டு, நடிப்பு என வெளுத்து வாங்குவார்கள். ஏதேனும் போட்டிக்கு பெயரைக் கொடுத்தபடி இருப்பார்கள். 11 வயதிலிருந்து 29 வரை சனி தசை நடைபெறும். சனியும், இவர்களது பாதத்தின் அதிபதியான சுக்கிரனும் நெருங்கிய சிநேகிதர்கள். அதனால் மிகுந்த சுறுசுறுப்புடன் திகழ்வார்கள். கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள். பள்ளி முடித்ததும் திரைத்துறை சார்பான தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை தாராளமாகப் படிக்கலாம். விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் போன்றவையும் சிறந்தது. இசைக் கல்லூரியில் சேர்ந்து படித்தால், பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மூன்றாம் பாதத்தின் அதிபதியாக புதன் வருகிறார். ராசியாதிபதியாகவும் அவரே இருக்கிறார். நட்சத்திரத் தலைவர் குரு என்பதைப் பார்த்தோம். ஏறக்குறைய 6 வயது வரை குரு தசை நடப்பதால் சிறுவயதில் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கும். கிட்டத்தட்ட மூன்றாம் வகுப்பிலேயே பள்ளி மாறி படிக்கும் சூழல் உருவாகும். ஆனால், அது நல்லதாகவே அமையும். கணக்கு பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். அறிவியல்தான் கொஞ்சம் அலைக்கழிக்க வைக்கும். கிட்டத்தட்ட கல்லூரி முடியும் வரை சனி தசை நடைபெறுவதால் சிறப்பாகவே இருக்கும். புள்ளியியல், சட்டம், அக்கவுன்ட்ஸ், பொலிட்டிகல் சயின்ஸ், சி.ஏ. போன்ற படிப்புகள் சிறப்பு தரும். ஆர்க்கிடெக்ட், கம்ப்யூட்டர் அனிமேஷன், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவை கிடைத்தால் விடாது படியுங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.
புனர்பூசத்தின் நான்காம் பாதத்தை சந்திரன் ஆள்கிறார். சந்திரனின் இரட்டிப்புச் சக்தி இவர்களிடம் இணைந்து இருக்கும். இதனால் சவாலான வாழ்க்கையை விரும்புவார்கள். மிதமிஞ்சிய கற்பனை வளம் இருக்கும். சிறுவயதில் தந்தை மற்றும் தாயாரை விட்டுப் பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால் இந்த நேரத்தில் ஆரண்யம், காடு என்று முடியும் தலத்திற்குச் சென்று ஈசனை வணங்க வேண்டும். உதாரணமாக வேதாரண்யம், திருவெண்காடு, திருவாலங்காடு போன்ற தலங்களில் வணங்கலாம். ஏறக்குறைய 3 வயதுவரை குரு தசை இருக்கும். பிறகு 22 வயது வரை சனி தசை நடைபெறும். 8 வயதில் கல்வியில் தடை ஏற்பட்டு, வேறு பள்ளி அல்லது ஊருக்கு செல்ல நேரும். பொருளாதார நெருக்கடியை சிறிய வயதிலேயே பார்த்து விடுவதால், கல்லூரிப் பருவத்தில் வேலைக்கும் செல்வார்கள். இவர்களுக்கு எப்போதும் மேஷம், ரிஷபம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மெரைன் எஞ்சினியரிங், ஐ.டி., மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்ற துறைகளில் ஏற்றம் உண்டு. ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. படிப்பில் பைனான்ஸ் போன்றவை ஏற்றது. தமிழ் இலக்கியம் படித்தால், சமூக அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
புனர்பூசம் குருவின் நட்சத்திரமாக வருவதாலும், செவ்வாயும் புதனும் இவர்களை திணறடிப்பதாக இருப்பதாலும் திருப்புலிவனம் எனும் தலத்திலுள்ள வியாக்ரபுரீஸ்வரரையும் சிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் தரிசித்தால் கல்வியில் மேன்மை பெறலாம். வியாக்ரபுரீஸ்வரர் எனும் குருவே புலி வடிவம் கொண்டு இத்தல ஈசனை பூஜித்திருக்கிறார். உத்திரமேரூர் - காஞ்சிபுரம் பாதையில் உத்திரமேரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
Similar Posts :
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
புனர்பூசம்