கோரக்கர்
கோரக்கர் மூல மந்திரம்... “ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
பெயர்
|
:
|
கோரக்கர்
|
பிறந்த மாதம்
|
:
|
கார்த்திகை
|
பிறந்த நட்சத்திரம்
|
:
|
ஆயில்யம்
|
உத்தேச காலம்
|
:
|
|
குரு
|
:
|
மச்சமுனி
|
சீடர்கள்
|
:
|
|
சமாதி
|
:
|
. பொதிய மலை 2. ஆனை மலை 3. கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு) 4. வடக்கு பொய்கை நல்லூர் 5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு) 6. கோரக்கர் குண்டா (சதுரகிரி) 7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்) 8. கோரக்பூர் (வட நாடு)
|
வாழ்நாள்
|
:
|
880 வருடம் 11 நாட்கள்
|
மரபு
|
:
|
மராட்டியர் / கள்ளர்
|
மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள்!. கோரக்கர் வசிட்டரின் மகன் என்று போகர் தனது போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார். கோரக்கரை கொல்லிமலையின் அதிபதி என்றும் கூறுவர். கோரக்கரின் அவதார வரலாறு மச்சமுனி ஊர் ஊராக சஞ்சாரம் செய்து வரும்போது ஓர் ஊரில், ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு காரணம் உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு காரணம் உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’ மச்சமுனி கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்? சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளர உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, சாம்பல் குப்பையிலிருந்து, சித்தர் விபூதி கொடுத்த காலம் முதல், பிள்ளையை அழைத்த காலம் வரை உள்ள ஆண்டுகள் நிரம்பிய வயது கொண்ட கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர். அந்தச் சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் சித்தர். சிறுவனோ தான் மச்சமுனியையே குருவாகக் கொண்டு அவரைத் தொடர்ந்து வர விரும்புவதாகக் கூறினான். அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சமுனி. இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். நீண்ட நெடுங்காலம் பாரதக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தவம் செய்தனர். ஆனால் போகரோ கோரக்கரின் பிறப்பைப் பற்றி வேறு விதமாக கூறுகிறார். வசிஷ்ட மகரிஷிக்கும் கண்ணியமான குறப்பெண் ஒருத்திக்கும் புதல்வனாக கோரக்கர் பிறந்தவர். அதனால் இவரை அனுலோமன் என்று கூறலாம். இதை அவர் பாடலில் கீழ் கண்டவாறு பாடுகிறார். சொல்லவே கோரக்கர் பிறந்தநேர்மை சந்திரனார் வசிஷ்டமகாரிஷியாருக்கு புல்லவே கானகுற ஜாதியப்பா புகழான கன்னியவள் பெற்றபிள்ளை வெல்லவே அனுலோமன் என்னலாகும் வேதாந்த கோரக்கர் சித்துதாமும் நல்லதொரு பிரகாசமானசித்து நாதாந்த சித்தொளிவும் என்னலாமே அனுமலோமன் என்றால் உயர்ந்த குலத்துத் தந்தைக்கும் தாழ்ந்த குலத்துப் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளை என்று பொருள் படும். மேலும் போகர் கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று கீழ்க்கண்ட பாடல் மூலம் விவரிக்கிறார். புத்தியுள்ள கோரக்கர் பிறந்தநேர்மை பண்பான கார்த்திகையாமென்னலாகும் சித்திபெற அயலிடமாம் இரண்டாங்கால்தான் சிறப்பான நாளென்றே சொல்லலாமே கோரக்கர் பிராமனாரகப் பிறந்து பின் சேனியனாக இருந்தார். கற்ப தேகத்தோடு அவர் வாழ்ந்து வரும் நாளில் ஓர் இடையன் பாம்பு கடித்து இறக்கக் கண்டு அவனது உடம்பில் புகுந்து மாடு மேய்க்கும் இடையனாகி இடைச்சியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தார் என்று கருவூரார் தம் பாடலில் கீழே உள்ளவாறு கூறுகிறார். அப்பனே கோரக்கர்தான் ஆதி விப்பிரராய்ப் பின்பு ஒப்பவே சேனியனாம் உயர்குலம் தனிலிருந்து எப்பவும் அழியாத் தேகத்து இயல்புடன் வாழும் நாளில் கெப்பமாய் இடையன் மாடு திறனாக மேய்க்கக் கண்டார் மேலும் கருவூரார் தம் வாத காவியத்தில் வேட்டைக்கு வந்த மன்னன் ஒருவன் மலைக் குகையில் கோரக்கரது உயரற்ற உடலைக் கண்டான். அது அனாதைப் பிணமென கருதியவன், அதனை எரித்துவிட்டுச் சென்றான். இடையன் தேகத்தில் இருந்த கோரக்கர் அவ்வுடம்பை விட்டு நீங்கித் தம் உடலைத் தேடி வந்தார். தன் உடம்பு எரிந்து சாம்பலாகி இருக்கக் கண்ட கோரக்கர் மீண்டும் இடையன் உடலில் புகுந்து தன் சீடர்களான நாகார்ச்சுனர், சாணக்கிய முனிவர்களுடன் சதுரகிரியில் வாழ்ந்த முனிவர்களின் ஒவ்வொரு ஆசிரமாகச் சென்று ஆங்காங்கே சிலகாலம் வாழ்ந்தபடியே கற்ப மூலிகைகளை உண்டு தாம் இருந்த இடையனது உடலைக் கற்ப தேகமாகச் செய்துக் கொண்டார் என்று கூறுகிறார். இது பற்றி கருவூரார் தம் பாடலில் என்று கோரக்கர் சீடனியல்நாகார்சசுனர் தன்னோடு அன்று சாணாக்கியரும் அன்புடன் மூன்று பேரும் சென்றுமே வனங்கள் தோறும் சித்தர்கிளிடித்தில் ஏகி அன்று ஒவ்வோர் வருடமாக அருமையாய் இருந்து வந்தார் - கரு. வாத 514 தீர்த்திடும் குளிகை செய்து இடைத்திருமேனி தன்னை ஆர்த்திடச் சித்தி செய்து அழியாத சடலமாக்கி பார்த்தபின் மூவருந்தான் பகல் சதுரா சலத்தில் மூர்த்தியாய் பக்தி தன்னில் முயன்றனர் குகைக்குள்ளே - கரு. வாத 577 எனக் கூறியுள்ளார். இதிலிருந்து சித்தர் பெருமக்கள் கற்ப மூலிகைகளைக் உண்டு தங்கள் உடம்பை அழியாத கற்ப உடலாக்கிக் கொள்வதை தம் கடமையாகக் கொண்டிருந்தார்கள் என்பதையும், கோரக்கர் தம் சீடர்களுடன் சதுரகிரியில் வாழ்ந்து வந்தார் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம். கோரக்கரின் குரு விசுவாசம் பற்றி மச்சமுனி சித்தர் கட்டுரையை படிக்கவும். பதினெண் சித்தர்களில் மிகப் பெருமை பெற்ற கோரக்கர் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்ட மிக உயர்ந்த உயிர் மருந்துக்களைத் தயாரித்தவர். கோரக்கர் மகானிடம் ஒரு வணிகர் சென்று, '' வாழ்க்கையின் நிலையை தாங்கள் எனக்கு தெளிவு படுத்தவேண்டும் என்றார்.அதற்கு மகான்,"சிறிது நேரம் இங்கு நடப்பதை பார் என்றார். அப்போது ஒரு இளைஞர் அங்கு வந்தார். வந்தவர் இவரை போலி சித்தர் என காட்ட வேண்டும் என எண்ணி கையில் ஒரு பட்டுபூச்சி கொண்டுவந்து,'' இது உயிருடன் தான் உள்ளதா அல்லது இறந்து விட்டதா என கையை மூடிக்கொண்டு கேட்டார். பூச்சி உயிருடன் உள்ளது என்றால் அதை கசக்கி விடலாம் என்றும் இறந்தது என்றால் அதை அப்படியே விட்டு விடலாம் என எண்ணினார் அந்த வாலிபர் .அதற்கு கோரக்கர் சிரித்து கொண்டே அது இறப்பதும் பிழைப்பதும் உன் கையில் தான் உள்ளது என்றார் அதிர்ந்து போனார் அந்த இளைஞர் .பின் அந்த வணிகரை அழைத்து இது போலத்தான் வாழ்க்கையின் நிலை அதை இருகபிடித்தால் வலிக்கும் பொது நலமாக விட்டால் இனிக்கும் எல்லாம் உன் கையில் தான் உள்ளது என்றார் ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார். இவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார். மச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள் நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம் என்று அழைத்தார். இவர்களுக்கு வழிசெலவிற்கு வேண்டும் என்று பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு கல்லை வைத்தார். மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார். “அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார். பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம் நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு அவர் இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்ல தக்கது ஒன்றுமில்லை என்றார். கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார். வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன் என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் ‘கிண்’ என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார். அல்லமர் கோரக்கரை நோக்கி “சரி, உன் திறமையை நிருபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு” என்று கூறினார். கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர். இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் “கோரக்கர் வைப்பு” என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர். இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன. கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிலையும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள். யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள். ‘கோரக்கர் மூலிகை’ (கஞ்சா), ‘பிரம்மபத்திரம்’ (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, “இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார். கோரக்கர் கஞ்சா என்னும் மூலிகையை அடிப்படை குரு மூலிகையாகக் கொண்டு மிக உயர்ந்த மருந்துக்களைத் தயாரித்து வைத்தியம், வாதம், யோகம், மற்றும் ஞானம் போன்ற வழிகளை உலகிற்குப் பூரணமாக உணர்த்தியவர். கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள். இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள். கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை: 1. கோரக்கர் சந்திர ரேகை 2. கோரக்கர் நமநாசத் திறவுகோல் 3. கோரக்கர் ரக்ஷமேகலை 4. கோரக்கர் முத்தாரம் 5. கோரக்கர் மலைவாக்கம் 6. கோரக்கர் கற்பம் 7. கோரக்கர் முத்தி நெறி 8. கோரக்கர் அட்டகர்மம் 9. கோரக்கர் சூத்திரம் 10. கோரக்கர் வசார சூத்திரம் 11. கோரக்கர் மூலிகை 12. கோரக்கர் தண்டகம் 13. கோரக்கர் கற்ப சூத்திரம் 14. கோரக்கர் பிரம்ம ஞானம் இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் கோரக்கர் சதுரகிரியில் சித்தி அடைந்ததாகக் கூறுவர். கோரக்கர் சித்தர் தியானச் செய்யுள் சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே சாம்பலில் தோன்றிய தவமணியே விடை தெரியா பாதையில் வீறாப்பாய் நடைபோடும் எம்மை கைப்பிடித்து கரை சேர்ப்பாய் கோரக்க சித்த பெருமானே. கோரக்கர் சித்தரின் பூசை முறை தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையை மஞ்சளிட்டு மெழுகி கோலமிட்டு, மஞ்சள், குங்குமம், மலர்களால் அலங்கரித்த குத்துவிளக்கை வைத்து தாமரைத் தண்டு அல்லது வாழைத்தண்டு திரி போட்டு ஐந்தெண்ணை ஊற்றி ஐந்து முக விளக்கேற்ற வேண்டும். பலகையின் மேல் சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து படத்திற்கு பல வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லி, தாமரைப்பூ, சம்பங்கி அழகிய மலர்களால் பின்வருமாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்து வணங்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. முருகக் கடவுளின் பிரியரே போற்றி! 2. வாக்கில் சுத்தமுடையவரே போற்றி! 3. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி! 4. கஷ்டங்களை போக்குபவரே போற்றி! 5. அடுப்புச் சாம்பலில் தோன்றியவரே போற்றி! 6. ஆசைகளற்ற அருளே போற்றி! 7. மாயைகளை களைபவரே போற்றி! 8. பூலோகச் சூரியனே போற்றி! 9. மாசற்ற மனமே போற்றி! 10. புகழும், அருளும் நிறைந்தவரே போற்றி! 11. ஞான வழி காட்டுபவரே போற்றி! 12. ஞானஸ்கந்தரே போற்றி! 13. ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி! 14. காவி வஸ்திரம் தரிப்பவரே போற்றி! 15. உலக மக்களில் நண்பரே போற்றி! 16. உறுதியான மனதிடம் உள்ள கோரக்க சித்தரே போற்றி! போற்றி! என கூறி வணங்க வேண்டும். பிறகு மூலமந்திராமான “ஓம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை சொல்லி வழிபடவேண்டும். நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பொறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுச் சக்கரை கலவை வைத்து வழிபடவேண்டும். மனமுருக வேண்டி நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும். கோரக்கரின் ஜீவசமாதி இடங்களில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருளும் பேரருளாளர். கோரக்கர் சித்தர் பூசை பலன்கள் 1. ஜாதகத்திலுள்ள சனி தோஷங்கள் வலகி நன்மை உண்டாகும். 2. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சனைகள் தீரும். 3. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். 4. எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். 5. படிப்பில் உள்ள மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். 6. நன்மக்கட் பேறு கிடைக்கும். 7. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். 8. பிரம்மஹத்தி தோசம் நீங்கும். 9. வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும். பூசைக்கு ஏற்ற நாள் கார்த்திகை நட்சத்திர நாள், நல்ல பலன் தரும்.
Similar Posts :
புலஸ்தியர்,
பத்திரக்கிரியார்,
அகத்தியர்,
திருவள்ளுவர்,
அரிசியை பற்றி கிருபானந்தவாரியார், See Also:
கோரக்கர் சித்தர்கள்