பத்திரகிரியார் அரச குலத்தில் தோன்றினவர்; சிவ பத்தி சிவனடியார் பத்தியிற் சிறந்தவர்; அறநெறி வழாது உஞ்சேனை மாகாளம் என்னும் பதியை யாண்டவர். அவரது அரசாட்சி காலத்தில் ஒருநாள் திருடர் பலர் ஒன்றுகூடி நகர்ப்புறத்திலே யுள்ள ஒரு குறுங்காட்டிலே திருக்கோயில் கொண்டு வீற்றிருந் தருளும் விநாயகக் கடவுள் திருச்சந்நிதியடைந்து "பெருமானே! யாங்கள் இன்றிரவு அரசமாளிகை புகுந்து களவிடப் போகிறோம். தேவரீர் திருவருள் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்து, ஊரை யடைந்து, நள்ளிரவில் அரண்மனை புகுந்து, தாம் விரும்பியவாறு பட்டாடைகளையும், பொன்னாபரணங்களை யும், மாணிக்கப் பதக்கங்களையும், பிறபொருள்களையும் திருடிக்கொண்டு சென்றார். அன்னார் செல்லுங்கால் தமக்குத் திருவருள் புரிந்த கணபதி ஆலயமடைந்து ஒரு மாணிக்க மாலையை அக்கடவுளுக்குச் சூட்டி வழியே போய்விட்டனர். அதுபோழ்து அர்த்த ராத்திரியாகையால்அம்மாணிக்கமாலை விநாயகர் திருக்கழுத்தில் விழாமல் அங்கு நிஷ்டைகூடியிருந்த பட்டினத்தடிகள் திருக்கழுத்தில் விழுந்தது. பொழுது விடிந்ததும் அரசமாளிகையில் களவு நிகழ்ந்த செய்தி ஊரெங்கணும் பரவிற்று. அரசன் ஆணைப்படி வேவு காரர்கள் திருடர்களைத் தேடத் தொடங்கினார்கள். ஊர்ப் புறத்தேயுள்ள குறுங் காட்டுவழிச் சென்ற வேவுக்காரர்களிற் சிலர் விநாயகராலயத்தினுள் நிஷ்டை செய்து கொண்டிருந்த பட்டினத்தடிகள் கழுத்தில் வேந்தன் மாணிக்கமாலை பொலிதலைக் கண்டு அவரைப் பற்றிப் பலவாறு துன்புறுத்தி னார்.
சுவாமிகள் நிஷ்டை கலைந்து வேவுகாரர்களைத் திருநோக்கஞ் செய்தருளினார். அவர்கள் அடிகளைப் பிடித்துத் தள்ளிக் கொண்டுபோய் அரசன் முன்னிலையில் நிறுத்தி னார்கள். பத்திரகிரி மன்னர் தீர விசாரியாது பட்டினத்தாரைக் கழுவேற்றுமாறு கட்டளையிடத் தண்டவினைஞர்கள் சுவாமி களைக் கழுமரத்தருகே அழைத்துச் சென்றார்கள். பெருமான் கழுமரத்தைத் திருநோக்கஞ் செய்தருளி "என்செயலாவ தொன்று மில்லை" என்னுந் திருப்பாசுரத்தைத் திருவாய் மலர்ந்தருளினார். உடனே கழுமரம் அக்கினியால் எரியுண்டு சாம்பராயிற்று. இச்செய்தி கேள்வியுற்ற அரசர்பெருமான் விரைந்து ஓடிவந்து சுவாமிகள் திருவடிக்கமலங்களில் அடியற்ற பனைபோல் விழுந்து தங்குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார். பட்டினத்தடிகள் ஞானதிருஷ்டியால் பத்திகிரி யாரது சத்திநிபாதநிலையை யுணர்ந்து "நாய்க்கொரு சூலும்" என்னுந் திருச்செய்யுளையருளிச்செய்து ஞானதீட்சை செய்தருளினார். பத்திரகிரியாரும் உள்ளத் துறவடைந்து ஞானாசிரியராகிய பட்டினத்தார் ஆணைவழி நிற்பாராயினர். பட்டினத்துச் சுவாமிகள் பத்திரகிரியாரை நோக்கி "திருவிடை மருதூருக்குச் செல்க" என்று கட்டளையிட்டுத் தாம் கேத்திர யாத்திரை செய்யச் சென்றுவிட்டார். பத்திரகிரியார் குருவாணைப்படி திருவிடைமருதூரை யடைந்து சிவயோகத்தி லமர்ந்திருந்தனர். பட்டினத்தார் பல தலங்களைத் தரிசித்துப் பலவகைப் பாக்களைப் பாடித் திருவிடைமருதூர் சேர்ந்தனர். பத்திரகிரியார் வீடுகடோறுஞ் சென்று பிச்சையேற்றுக் குருராயனை உண்பித்துச் சேடத்தைத் தாமுண்டு குருவின் திருவுள்ளக் குறிப்பின்படி மேலைக்கோபுர வாயிலிலிருந்து குருநாதனை வழிபட்டு வந்தனர். வருநாளில் ஒருநாள் பத்திரகிரியார் பிச்சையேற்று ஆசாரியாருக்கு நிவேதித்துத் தாஞ்சேடத்தை யுண்ணப்புகுங்கால், ஒரு பெட்டைநாய் பசியால் மெலிவுற்று வாலைக் குழைத்துக் கொண்டு வந்தது.
அதனைக் கண்டதும் பத்திரகிரியார் இரக்க முற்று அதற்குச் சிறிது அமுதிட்டனர். அன்று தொட்டு அந்நாய் அவரை விட்டுப் பிரியாமல் அவ்விடத்திலேயே தங்கிவிட்டது. அந்நாய் முற்பிறப்பிலே அங்கதேயத்திலே விலைமாது வடிவந்தாங்கி யிருந்தது. அவ்விலைமாது இளையர், முதியர் என்னும் வேற்றுமையின்றிக் கூடிக் கலந்து பொருளீட்டி மது உண்டு தீயொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினாள். ஒருநாள் ஒரு பிரமசாரி குருவாணைப்படி அமுதுநாடி அத்தாசி இல்லம் போந்தான். அவள் தான் தூர்த்தர்களோடு உண்டு மிகுந்த சேடத்தை அப் பிரம்சாரிக்கு அன்பின்றி விளையாட்டாகத் தந்தாள். பிரமசாரி அதையுண்டு சென்றான். அவ்விலைமாது தான்புரிந்த பாவச்செயல்களின் காரணமாகப் பெட்டை நாயாகப் பிறந்தாள். அவள் பிரமசாரிக்குச் சேடமீந்ததன் பயனாகப் பத்திரகிரியார்பா லுறைந்து அவர் அளிக்குஞ் சேடத்தை யுண்ணும் பேறுபெற்றாள். பத்திரகிரியார் அந்நாயைப் பாதுகாத்து வந்தனர். வருங் கால் ஒருதினம் மருதவாணர் ஒரேழை வடிவந்தாங்கிப் பட்டினத்தடிகளிடஞ் சென்று "ஐயா! பசியால் வருந்துகிறேன்; அன்னமிடும்" என்று கேட்டார். அதற்குச் சுவாமிகள் "மேலைக் கோபுர வாயிலில் ஒரு குடும்பி யிருக்கின்றான்; அங்குச் செல்க" என்றார். ஏழைக் கோலந் தாங்கிவந்த ஏழை பங்காளன் அங்ஙனே மேலைக் கோபுர வாயிலை யடைந்து அங்கிருந்த பத்திரகிரியாரைக் கண்டு "ஐயா! கீழைக் கோபுர வாயிலில் ஒருவரிருக்கின்றார். அவரை யென் பசிக்கு அன்னமிடுமாறு கேட்டேன். அவர் 'மேலைக் கோபுர வாயிலில் ஒரு குடும்பி யிருக்கின்றான்; அங்கே செல்க' என்று சொன்னார். அவர் சொற்படி யான் இங்கு வந்தேன். என் பசியை யாற்றும் என்றார். அது கேட்ட பத்திரகிரியார் "அந்தோ! பிச்சையேற்கும் இந்த வோடும், எச்சில் தின்னும் இந்த நாயுமோ என்னைக் குடும்பி யாக்கின" என்று கையிலிருந்த ஓட்டையெறிந்தார். அது நாயின் தலையிற்பட்டது. படவே ஓடுமுடைந்தது. நாயு மாண்டது. மருதவாணரும் மறைந்தனர். மாண்டநாய் ஞானி யெச்சிலுண்ட விசேடத்தால் காசி மகாராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்தது. அரசன் பேரன்போடு ஞானவல்லியென்று நாமஞ்சூட்டி வளர்த்து வந்தான்.
ஞானவல்லி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து திருமணப்பருவம் அடைந்தாள். அரசன் ஞான வல்லியின் அறிவு குணஞ் செயலுக் கேற்ற ஒரு நாயகனைத் தேட முயற்சி செய்து கொண்டிருந்தான். அதனை யறிந்த ஞானவல்லி ஒருநாள் தந்தைபால் சென்று "ஐயனே! யான் யாருடைய வாழ்க்கைக்கும் உரியவளல்ல; திருவிடைமருதூரிலே மேலைக் கோபுர வாயிலிலே எழுந்தருளியுள்ள தவசிரேஷ்டருக்கே யுரியவள்" என்று கூறினள். மன்னவன் பெண்ணின் மன உறுதியைக்கண்டு தெளிந்து அவள் விரும்பியவாறே அவளைத் திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஞான வல்லி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கி "அடிநாய் மீண்டுந் திருவடி நாடி வந்தது" என்றாள். பத்திரகிரியார் அவளது பக்குவநிலையை யறிந்து அவளது கையைப் பற்றிக் கொண்டு சென்று கீழைக்கோபுர வாயிலில் வீற்றிருந்தருளுந் தமது ஞான குருவள்ளல் திருமுன் நிறுத்தி "சுவாமி! தேவரீர் எச்சிலுண்ட நாயினுக்கு இவ்விழி "பிறவி யெய்தலாமோ" என்று விண்ணப்பித்தார்.
பட்டினத்தடிகள் "எல்லாஞ் சிவன் செயல்" என்று திருவருளைத் தியானஞ் செய்ய, ஆண்டு ஒரு பெருஞ் சோதி தோன்றிற்று.
அதில் பத்திரகிரியார் அப் பெண்ணுடன் புகுந்து இரண்டறக் கலந்தார்.
பத்திரகிரியார் திருநக்ஷத்திர தினம்
பத்ர கிரிமன்னன் பால்வண்ண னாயதினஞ்
சித்திரை மாமகமாஞ் செப்பு.
திருவிடைமருதூர் திருத் தலச்சிறப்பு மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றானும் சிறப்புடைய திருத்தலம் திருவிடைமருதூர் ஆகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மயிலாடுதுறை வழித்தடத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்திற்குப் பேருந்து மூலமாக அல்லது புகைவண்டி மூலமாக வரலாம்.
திருவிடைமருதூர் திருத்தலத்தை
திருஞானசம்பந்தர்
அப்பர் சுந்தரர்
மாணிக்கவாசகர்
கருவூர்தேவர்
பட்டினதடிகள்
அருணகிரிநாதர்
கவிகாளமேகம்
ஆகியோர் அருந்தமிழ்ப்பாக்களால் பாடிப் பரவி உள்ளனர். இத்தலம் பாடல்பெற்ற திருத்தலமாகும்.
இத்தலத்தில் வரகுண பாண்டியன் பத்திரகிரியார் ஸ்ரீதர் ஐயாவாள் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் நான்கு தேரோடும் வீதி நான்கு மடவிளாகம் கொண்டு அழகிய ஊராக விளங்குகிறது. தேரோடும் வீதிகளில் கீழைவீதியில் அருள்மிகு விஸ்வநாதர் ஆலயமும் தெற்கு வீதியில் அருள்மிகு ஆத்மநாதர் ஆலயமும் மேலை வீதியில் அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் ஆலயமும் வடக்கு வீதியில் அருள்மிகு சொக்கநாதர் ஆலயமும் அமைய நடுநாயகமாக அருள்மிகு மகாலிங்கப் பெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆதலால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்று போற்றப்பெறுகிறது.மேலும் நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்கள் அமைய நடுநாயகமாக திருவிடைமருதூர்த் திருத்தலம் அமைந்துள்ளது. கிழக்கே பாணாபுரமும் அருள்மிகு பாணாபுரீஸ்வரர் திருக்கோயில் தெற்ககே திருநீலக்குடி அருள்மிகு மனோக்கிய நாத சுவாமி திருக்கோயில் மேற்கே திருபுவனம் அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோயில் வடக்கே இடங்கொண்டீச்சுரம் (கல்யாணபுரம்) அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில் ஆகிய தலங்கள் நான்கு திக்கிலும் அமைந்துள்ளது.
சித்தர்கள் அனைவருமே எளிமையான பின்புலங்களில் இருந்தே வந்திருக்கின்றனர். சமூகத்தின் எளிய ஒடுக்கப் பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளாகவே சித்தர்களை தமிழ் சமூகம் ஆணவப் படுத்தியிருக்கிறது. எதிலும் விதி விலக்கு உண்டே! இந்த கருத்தியலுக்கு விதிவிலக்கானவர்கள் இரண்டு பேர் ஒருவர் வணிகக் குடும்பத்தில் பிறந்து பெரும் செல்வம் ஈட்டி அதில் திளைத்த பட்டினத்தார். அரசராக இருந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. பட்டினத்தாரை தனது குருவாகக் கொண்டு அரச சுகபோகங்களைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டவர். "வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்?" "நவசூத்திர வீட்டை நான்என்று அலையாமல் சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்?" "புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?" - பத்திரகிரியார் - பட்டினத்தார் வடமாநிலங்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவரை கள்வன் என்று பழிசுமத்தி கழுவிலேற்ற உத்தரவிட்ட அதே பத்திரகிரி மன்னன் தான் இந்த பத்திரகிரியார். அரசனாக இருந்த இவர் சுக போகங்களை துறந்து சித்தரானவர்.
ஒருநாள் அவர் அருகில் வந்த பெண் நாய்க்குட்டி ஒன்றிற்கு சிறிது உணவிட்டாராம், அன்றிலிருந்து அந்த நாய் அவரை பின்தொடர்ந்து அவர் பார்வை பட்டு விமோசனம் அடைந்து, பின்னர் அது காசி மன்னனின் மகளாக பிறந்து முற்பிறவி நினைவுடனேயே இருந்து பத்திரகிரியாரையே மணந்ததாக சொல்வர். பத்திரகிரியார் பாடல்கள் பெரும்பாலும் "எக்காலம்?" என்ற கேள்வியுடன் முடிவதாக அமைகின்றன. இவர் திருச்செட்டாங்குடியில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் முக்தி அடைந்ததாக கருதப்படும் பத்திரகிரியார் எழுதிய அருட்புலம்பல் எனப்படும் மெய்ஞான புலம்பல் என்கிற நூல் சித்தர் நூல்களில் தனித்துவம் வாய்ந்தது. அருட் புலம்பல் என அறியப் படும் இந்த பாடல்கள் எளிய தமிழில்,முதல் வாசிப்பில் எளிதாய் பொருள் உணரும் வகையில் எழுதப் பட்டிருப்பது சிறப்பு. எனினும் மீள் வாசிப்புகளில் மட்டுமே இந்த எளிய சொல்லாடல்களின் பின்னிருக்கும் விரிவான தத்துவத்தினை அருமைகளை உணர்ந்திட இயலும்.
உதாரணத்திற்கு இந்த பாடலை பார்ப்போம்...
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?" 1) மூன்று வளையம் என்பது சக்தி எனப்படும் மூலாதாரம், வெளி அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம்.காலம் இல்லையேல் எதுவும் நகராதே. இந்த மூன்று வளையங்களும் இட்டதில் முளைத்து எழுந்த முக்கோணத்தில் தோன்றும் உருத்திரன் [கடவுள் சிவன் அல்லது அவரது ஒரு அம்சம்] இந்த முக்கோணமே முக்காலமும் அறிய உதவும் திறவுகோல். அதாவது சுழுமுனை. அறிவியல் ரீதியாக 1) நமது இந்த உலகம், பால் வெளி, அண்டம் அனைத்துமே மூன்று அடிப்படை உள்பொருட்களால் ஆனது. அவை காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space] (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Universe) 2) நமது அண்டத்தில் இருக்கும் அனைத்துமே உருண்டை தேற்றத்தின் படி உருண்டை வடிவானவைதான். எனினும் அறிவியல் ரீதியாக நமது அண்டம் மூன்று வடிவங்களில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் உருண்டை தேற்றத்தின் படி இவை மூன்றும் உருண்டையாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம். 3) இவை மூன்றும் இல்லையெனில் இந்த உலகம், பெருவெளி, அண்டம் எவையும் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இவை மூன்றும் இணைந்ததுதான் நமது உலகம் மற்றும் அனைத்தும் 4) கணிதத்தில் போரோமியன் வளையங்கள் என்று ஒன்று உள்ளது. இது என்னவெனில் மூன்று வளையங்கள் ஒன்றையொன்று உள்வழியாக இணைத்து இருப்பது. இதில் ஒரு வளையத்தை நாம் பிரித்தேடுத்தாலும் மற்ற இரு வளையங்கள் சேர்ந்து இருக்காது 5) இந்த மூன்று வளையங்களும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ஒரு முக்கோணம் உருவாகும் அந்த முக்கோணம்தான் நமது அண்டம், வெளி மற்றும் காலம் சங்கமிக்கும் ஒரு பகுதி. அதாவது மூன்றும் இணையும் போதுதான் வெளிகள் உருவாகின்றன, உலகங்கள் உருவாகின்றன இது எவ்வாறு நமது சித்தர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பார்கள். நாம் நமது தமிழை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். சித்தர்கள் சைவ மதத்தவராக கருதப்பட்டாலும், தொல்காப்பியர் மரபான சாங்கிய மரபினர், பத்திரகிரியார் பின்வருமாறு கூறுகிறார். ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் இவ்வரிகள் மூலம் சித்தர்களை ஆதிகபிலர் சொன்ன சாங்கிய மெய்யியலை பின்பற்ற விளைபவர்களாகக் காணலாம். சமயக் கோட்பாடுகளுக்கும், சமூக ஒப்பனைகளுக்கும் நூலறிவுக்கும் அப்பாற்பட்டு உண்மையை அறிவதற்கு வாழ்க்கையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டவரே சித்தர். இவர் தம் உணமையறிவதற்கான தேடலானது புறத் தேவைகளுக்கான தேடலாக அமையாது தம்மை அறிவதற்கான ஆன்மத் தேடலாக அமைந்தது இவ்வான்மத் தேடலையும் வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் வழியாகக் கருதாது தடுமாறாமல் பயணம் செய்யப் பயன்படும் திசைகாட்டியாகவே கருதினர். அவ்வழி உண்மையறிதற்குரிய வாயிலாக உடம்பைக் கருதினர் அதனால் நிலையற்றதாக துன்பம் தருவதாக அருவருக்கத்தக்கதாக, இழிந்துரைக்கப்பட்ட உடம்பினை அழியாத வாய்மை உடம்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அவ்வாறு உடலை ஓம்பி உண்மையறிதற்குரிய நெறியாகச் சித்தர்கள் முன்வைத்தது யோக நெறியாகும் இந்த யோக நெறியைக் கோட்பாட்டளவில் விளக்குவதே சித்தர் மெய்யறிவியல். கி.பி. 4-6 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிற திருமூலர் தொடங்கி வைத்த சித்தர் மரபு, இடையில் இடைவெளி விழுந்து 12 ஆம் நூற்றாண்டு சிவவாக்கியர் முதல் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் வரை தொடர்ந்து வருகிறது. இன்றும் தொடர்கிறது.
Similar Posts : ராமதேவர், தேனி ஸ்ரீசச்சிதானந்த சாமி, ஸ்ரீ முத்துக் கிருஷ்ண சுவாமிகள், கண்ணப்ப சுவாமிகள், திருவள்ளுவர், See Also:பத்திரக்கிரியார் சித்தர்கள்
பெயர் : பத்திரகிரியார் சமாதி : திருச்செட்டாங்குடி மரபு :