நைமிசாரணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி சிவஞானச் செல்வரே! தாங்கள் கூறிய சிவராத்திரி மகிமையைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தோம். மேலும் இந்த விரதத்தின் பயனை விரிவாகச் சொல்லியருள வேண்டும் அஞ்ஞானத்தோடு இந்த விரதத்தை கடைப்பிடித்தால் ஏதாவது பயனுண்டாகுமா? என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! சிவராத்திரி மகிமையில் ஒரு வேடனின் பாபங்களையெல்லாம் ஒழித்துள்ளதான பூர்விகமான கதை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது அதைச் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு வனத்தில் மகாப்பலசாலியும் பெருங்குடும்பஸ்தனுமான வேடன் ஒருவன் இருந்தான் அவன் மிருகங்களை வேட்டையாடுவதோடு வழிப்பறி செய்தும் பிழைத்து வந்தான். அவன் இளம் பருவ முதல் ஒரு போதும் நற்கருமம் எதையுஞ் செய்யாதவனாக இருந்தான் அவன் பெயர் குருத்ருஹன். அவன் இவ்வாறிருக்க ஒரு சமயம் சுபகரமான சிவராத்திரி சம்பவித்தது. அது அந்தத் துராத்மாவுக்குத் தெரியாது அந்த மஹாசிவராத்திரி தினத்தன்று அந்த வேடனின் தந்தை தாய் மனைவி முதலியோர் அவனை நோக்கி, எந்த வகையிலாவது ஜீவஹிம்சை செய்து தங்களுக்கு உணவு வகைகளை கொண்டு வந்து கொடுக்கும்படிக் கேட்டார்கள். உடனே வேடன் தன் வில்லை எடுத்துக்கொண்ட காட்டுக்குச் சென்று மிருகங்களைத் தேடியலைந்தான். ஒரு மிருகமும் அவன் பார்வையில் படவில்லை பறவைகளுங்கூடக் கிடைக்கவில்லை, தெய்வயோகம் அவனுக்கு அப்படியிருந்தது. மாலைப்பொழுதும் நெருங்கியது சூரியனும் அஸ்தமித்தது வேடன், தன் வீட்டில் தன் குழந்தைகளும் தாய் தந்தையரும் மனைவியும் ஆகாரமின்றி வருந்துவார்களே என்று எண்ணி வருந்தினான். எனவே எந்த வகையிலாவது சிறிதேனும் ஆகாரந்தேடிக்கொண்டு தான் வீட்டிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அருகிலிருந்த தடாகத்தில் சிறிது தண்ணீர் பருகி ஒரு பாத்திரத்தில் சிறிது ஜலங்கொண்டு தடாக கரையில் தழைத்திருந்த வில்வமரம் ஒன்றில் ஏறி மறைந்து கொண்டான். தாகத்தை தணித்துக் கொள்ள தடாகத்திற்கு ஏதேனும் மிருகங்கள் வரக்கூடும் அப்படி வந்தால் அவற்றைக் கொன்று விடலாம்! என்று எண்ணினான் மிருகங்கள் எப்போது வரும்? நான் எப்போது அவற்றை எய்வேன்? என்று வேடன் நினைத்து பசியுடன் வருந்தி இன்று நமக்கு இரையில்லையே உபவாசமிருக்க நேர்ந்ததே என்று சிந்தை நொந்து வருந்திக் கண் விழித்துக் கொண்டிருந்தான், முதல் ஜாமத்தில் பெருந்தாகத்தோடும் பயத்தோடும் பெண்மான் ஒன்று அங்கே வந்தது அதைக் கண்டதும் வேடன் மனம் மகிழ்ந்து அம்மை வில்லில் பூட்டினான். அவனது உடலசைவால் அவன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் வில்வ மரத்திலிருந்து சிறு வில்வதளங்களும் அந்த மரத்தடியிலிருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதனாலேயே அந்த வேடன் அந்தச் சிவராத்திரியின் முதற்கால பூஜையைச் செய்தவனானான் அத்தகைய பூஜையின் பயனாக அவனது மாபாதகங்கள் நசித்தன.
இந்நிலையில் வேடன் அம்பை வில்லிற் பூட்டிய சத்தத்தைக் கேட்ட பெண்மான் ஐயோ! எங்கே போவேன்? என்ன செய்வேன்? இந்த வேடன் என்னை எப்படியும் பாணத்தால் கொன்று விடுவானே ஆயினும் ஓர் உபாயம் செய்ய வேண்டும் என்று யோசித்து வேடனை நோக்கி, வேடா நீ என்ன செய்ய நினைத்திருக்கிறாய்? என்று கேட்டது. அதற்கு அந்த வேடன், மானே! நான் ஒரு பெரிய குடும்பஸ்தன் என் குடும்பம் முழுவதும் ஆகார மில்லாமல் பெரிதுங் கஷ்டப்படுகிறது. ஆகையால் உன்னைக் கொன்று அவர்களுக்கும் எனக்கும் ஆகாரமாக்கப் போகிறேன் என்று கூறினான். அதற்கு பெண்மான், பாபாத்மாவாகிய அந்த வேடனை நோக்கி அப்படியானால் நான் தன்யையானேன் பயனற்ற இந்த உடலின் இறைச்சியால் உனக்கு உன் குடும்பத்திற்கும் சுகம் உண்டாகுமேயானால் பரோபகாரத்தால் உனக்கும் உண்டாகும் புண்ணியத்தை நானும் அடைவேன். இந்தப் புண்ணியப் பயனை பல வருஷங்கள் சொன்னாலும் சொல்லி முடியாது. பயனற்ற என் தேகத்திற்கும் சாபல்லியங் கிடைக்கும். ஆனால் எனக்குச் சில குட்டிகள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்கும் படி என்னுடன் பிறந்த ஒரு பெண்மானை நியமித்து விட்டு, என் கணவனுக்கு அந்த மானையே மனைவியாக இருக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் இங்கே வருகிறேன். என் இறைச்சியாலேயே நீங்கள் திருப்தியடைவதாயின் எனக்கு மிகவும் சுபமே என்று கூறியதும் அதைக்கேட்ட வேடன் அதைச்சிறிதும் நம்பாமல் ஆபத்துக் காலத்தில் யாவரும் சமயோசிதமாகப் பொய் பேசுதல் வழக்கம் என்றான். ஆனால் பெண்மானோ வனசார சத்தியத்தாலேயே சூரியன் முதலிய தேவர்கள் யாவரும் பிரகாசிக்கின்றார்களென்றும் சத்தியத்தாலேயே சமுத்திரம் அணையின்றிருக்கின்றனதென்றும் சத்தியத்தாலேயே இந்திரன், மழை பெய்விக்கிறான் என்றும் சத்தியத்தாலேயே யாவும் நிலைத்திருக்கின்றன என்றும் அறிவாயாக ஜீவஹிம்சை செய்கின்ற நீ என் சொல்லை பெய்யெனக் கொள்ள வேண்டாம் என்றது வேடன் அதையும் நம்பாமலிருக்க பெண்மான் மேலும் சொல்லியது.
வேடனே, நான் சொல்வதைக் கேள் நான் சொல்லியபடி மீண்டும் உன்னிடம் வந்து உனக்கு இரையாகத் தவறுவேனாகில் நான் பெரும் பாபத்தை அடைவேன். எப்படி என்றால் வேதவிக்கிரயம் செய்த பிராமணன் பெறும் பாபத்திலும் திரிகால சந்தியா வந்தனங்களைச் செய்யாதவன் போகும் பாபத்திலும் கணவன் கட்டளையை நிராகரித்த மனைவி அழுந்தும் பாபத்திலும் செய் நன்றி மறந்து தனக்கு நன்மை செய்தவனுக்குத் தீமை செய்தவன் அடையும் பாபத்திலும் சிவத்துரோகியும் விஷ்ணுத் துரோகியுமடையும் பாபத்திலும் குருத்துரோகி பெறும் பாபத்திலும் வேத விருத்தமான ஆசாரத்தில் நடப்பவன் அடையும் பாவத்திலும் போவேன் என்று பலவாறாகவும் கூறியது வேடன் அதன் வார்த்தைகளைகேட்டு நம்பிக்கையுடையவனாய்! மானே! நீ இனி உன்னிடத்திற்கு விரைவிற் சென்று திரும்பி வருக என்று விடை கொடுத்தான் பெண்மான் பெருங்களிப்படைந்து தாகந்தணிந்துக் கொண்டு தன்னிடத்தையடைந்தது அதுவரையில் முதல் ஜாம முற்றும் வேடனுக்கு நித்திரையின்றிச் சென்றது.
அவ்வாறிருக்கையில் முன் வந்து போன பெண்மான் தன் மூத்தாள் தாகவிடாயுடன் நீர் பருகச் சென்று நெடு நேர மட்டும் வராமையின் அதைத் தேடிக்கொண்டும் இரைச்சலிட்டுக் கொண்டும் அந்தக் குளக்கரையை அடைந்தது. வேடன் அதைக் கண்டு குணத்தொனி செய்தான். அப்பொழுதும் முன்போலவே சிறிது ஜலமும் சில வில்வபத்திரங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானுக்குச் சிவராத்திரி காலத்தில் வேடன் இரண்டாம் ஜாமபூஜை செய்தவனானான். அவ்வேடுவனை அவனது பாணகர் ஷணஞ் செய்யும் ஒலியால் உணர்ந்த இளையமான் ஓ வேடா! என்ன செய்யக்கருதினை? என்று வினவியது வேடன் முன் அதன் தமக்கைக்கு கூறியவாறே கூறினான். அது அவன் வார்த்தையைக் கேட்டுமகா சந்தோனுமடைந்து நான் மகாதன்யை! ஓ வனசர சிரேஷ்டா! அநித்தியமான இத்தேகம் பிறனுக்கு உபகாரமாகுமேயானால் என் தேகம் பலனடையும் ஆயினும் என் வீட்டில் இளம்பிராயமுடைய சில குட்டிகளிருக்கின்றன. அவற்றை என் கணவனுக்கு ஒப்புவித்து விட்டு நான் மீண்டும் சத்தியமாக வருவேன்! என்று கூறியது அதற்கு வேடன், நான் உன் வார்த்தையை நம்பமாட்டேன் தடையின்றி உன்னைக் கொல்லுவேன்! என்றான் ஆனால் பெண்மானே, வியாதனே, நான் திரும்பவும் உன்னிடம் வராவிட்டால் அசத்திய வார்த்தைகள் கூறினோர் தாம் அது காறும் செய்த புண்ணியங்களை இழந்து எவ்வகைய பாபத்திற்போவாரோ அவ்வகைய பாபத்திலும் அடிக்கடி பூமியைக் காலால் உதைப்பவர் உறும்பாபத்திலும் கற்புடைய மனைவியை விலகிப் பிரஷ்டையான ஓர் சோர ஸ்திரீயைப் புணர்ந்தவன் போகும் பாபத்திலும் வேதோக்தமான மார்க்கத்தை விடுத்துக் கல்பிதமான மார்க்கமாக நடப்பவர் அடையும் பாபத்திலும் விஷ்ணுபக்தி செய்து கொண்டு சிவ தூஷணஞ் செய்வோரும் சிவபக்தி செய்து கொண்டு விஷ்ணு தூஷணஞ் செய்வோரும் பெறும் பாபத்திலும் தாய் தந்தையர்களது வருஷாப்திகத்தை விடுத்தவன் செல்லும், பாபத்திலும் முதலில் இதவார்த்தைகள் கூறிப் பரிதாபமுண்டாக்கிப் பின்னர் வஞ்சிப்பவர் அடையும் பாபத்திலும் போகக்கடவேன் என்று கூறியது.
வேடுவன் அதன் வார்த்தைகளைக் கேட்டு அதனிடத்தும் நம்பிக்கை வைத்து ஓ மானே! நீ அப்படியே உன்னிடத்திற்குச் சென்று அதிசீக்கிரத்தில் வருக! என்று விடுவித்தான். அந்த மான் மகிழ்ச்சியுற்றுத் தண்ணீர் பருகித் தன்னிடத்தையடைந்தது அதுவரையில் அவ்வேடுவனுக்கு இரண்டாம் ஜாமமுற்றும் நித்திரையன்றி நீங்கியது. இதற்குள் அவ்விரு பெண்மான்களுக்கும் கணவனாயுள்ள ஆண்மான் அவ்விரண்டு மான்களையும் தேடிக் கொண்டு அந்த நீர்த்துறையை யடைந்தது. பருத்துயர்ந்திருக்கும் அவ்வான் மானை வேடுவன் கண்டு பெருங்களிப்படைந்து ஆ! ஆ! மிக்க மாமிசமுடைய தாயிருத்தலின் நமக்குத் திருப்தியான ஆகாரமாகுமென்று கருதிவில்லை டங்காரம் செய்து அதை எய்ய யத்தனித்தான். அப்போது முன்போலவே அவன் வசமிருந்த ஜல பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் மரத்திலிருந்து சில வில்வதளங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரி காலத்தில் மூன்றாம் ஜாம பூஜைசெய்தவனானான் சவுனகாதி முனிவர்களே! பக்தியின்றி சம்பவித்த செயல்களுக்கும் களிகூர்ந்து பூஜை செய்ததாகக் கருதிய சிவபெருமானுடைய கருணையை என்னவென்று சொல்லக் கூடும் மேலே கதையைக் கேளுங்கள்.
வேடுவனது நாணெறிந்த ஒலியைக் கேட்ட ஆண்மான் அவ்வேடுவனை நோக்கி நீ என்ன செய்யக் கருதினாய்? என்று வினவியது வேடன் முன்போலவே கூறினான். அதைக் கேட்ட ஆண்மான் சந்தோஷித்து நான் இப்பொழுது தான் தன்யனானேன் பூரித்திருக்கும் என் தேக மாமிசத்தினால் உன்னைப் போன்றவர்கள் திருப்தியடைவது பற்றிப் பெரும் பிரயோசனமடைவேன். ஒருவன் தன் தேகத்தைப் பரமார்த்தமாகப் பிறர்க்கு உபகாரஞ் செய்யாவிட்டால் அவன் பெற்றுள்ளயாவும் வீணாகி விடும், சமர்த்தனாயிருந்தும் பிறர்க்கு உதவாதவனின் சவுகரியம் பயன்பெறாது. ஆதலின், என் உடலால் உனக்கும் உன் குடும்பத்திற்குந் தடையின்றி திருப்தியுண்டாகும். ஆயினும் எனக்குச் சில குட்டிகள் இருப்பதால் அவற்றை என் பேடுகளிடம் ஒப்பித்து விட்டு, அவைகட்கு நல்ல வார்த்தைகளால் புத்திகூறி நிச்சயமாக வந்து உனக்கு இரையாகிறேன் என்று கூறியது. ஆனால் வேடுவன் அதன் வார்த்தையைக் கேட்டு ஓ மிருகமே! இதுகாறும் இங்கு வந்த மிருகங்கள் யாவும் உன்னைப்போலவே இதவார்த்தைகள் சொல்லி என்னை வஞ்சித்து விட்டுப் போயின ஒன்றேனும் இதுகாறும் வரவில்லை நீயும் அப்படியே ஆபத்து வேளையில் அபத்தமுரைத்துப் போய் விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வாறு ஜீவனம் நடக்கும்? என்றான்
ஆண்மான் அவன் வார்த்தைகளைக் கேட்டு ஓ வனசரா என்னிடத்தில் பொய் என்பதே கிடையாது சத்தியத்தினாலேயே சராசரப் பிரமாண்ட முழுவதும் விளங்குகின்றது. பொய் பேசுகிறவன் பூர்வத்திற் செய்த புண்ணியம் முழுவதையும் க்ஷணகாலத்திலே நாசப்படுத்துகிறான் இப்பொழுது நீ நம்பாத பக்ஷத்தில் நான் ஒரு பிரதிக்கினைச் செய்கிறேன். அதாவது சந்தியாவந்தன காலத்திலும் இரதிகேளிக்கையிலும் சிவராத்திரி காலத்திலும் போஜனஞ் செய்தவன் பெறும் பாபத்திலும், பொய்சாட்சி சொல்லுவோர் அடையும் பாபத்திலும், வைத்து வைத்திருக்கும் பொருளை அபகரித்தவன் அடையும் பாபத்திலும் சந்தியாவந்தனத்தை விடுத்த பிராமணன் பெறும் பாபத்திலும் லலாடசூனியமாயுள்ளவன் அடையும் பாபத்திலும் பிறர்க்கு உதவி செய்யாத மகா சமர்த்தனாயுள்ளவன் பெறும் பாபத்திலும் பகற்புணர்ச்சி செய்தவன் பெறும் பாபத்திலும் பர்வகாலத்திலும் விரதகாலத்திலும் புசிக்கத்தகாத பதார்த்தங்களைப் புசித்தவன் பெறும் பாபத்திலும் நான் வாராத பக்ஷத்திற் போகக் கடவேன்! என்று கூறியது. அதனால் வேடன் வியாதன் அதன் வார்த்தையின் நம்பிக்கையுடையவனாகி போய் வருக! என்று விடுப்பித்தான். ஆண்மான் அகமகிழ்ச்சியோடு நீர் பருகித் தன் இடத்தை அடைந்தது. அப்பொழுது அம்மூன்றும் சந்தித்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லிக் கொண்டவைகளாய் சத்தியபாசத்தாற் கட்டப்பட்டவைகளாய், அவசியம் அவ்வேடுவனிடம் போக வேண்டுமென நிச்சயித்துக் கொண்டு, குட்டிகளை நல்ல வார்த்தைகளால் இதமாக அவ்விடத்திலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டன.
அப்பொழுது அவற்றுள் மூத்தப் பெண்மான் தன் கணவனை நோக்கி இக்குட்டிகள் அநாதரவாக இருப்பதால் இவை எவ்வாறு ஜீவிக்கும்? நான் முதலில் வருகிறேன் எனப் பிரதிக்கினை செய்து வந்தமையால் நான் மட்டுமே போக வேண்டும். நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என்று கூறியது அதைக் கேட்ட இளைய பெண்மான் நான் உங்களிருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டியவளாயிருக்கிறேன் ஆதலின் நான் இவனுக்கிரையாகப் போகிறேன். நீங்கள் இங்கேயே இருக்கலாம்! என்றது அப்போது ஆண்மான் அவ்விரண்டின் வார்த்தைகளையுங் கேட்டு நான் ஒருவனே அவனிடம் போகிறேன் நீங்கள் இங்கேயே இருக்கலாம்! என்றது. ஆனால் பெண்மான்கள் ஐயோ! நீ இறந்தால் நாங்கள் விதவைத் தன்மையடைந்து ஜீவிப்பதைக் காட்டிலும் கஷ்டம் வேறுண்டா? என்று கூறி, தங்கள் குட்டிகளைத் தக்கபடியே சில மான்களிடம் ஒப்படைத்து விட்டு மூன்றும் ஒன்றுகூடி அவ்வேடுவன் இருக்குமிடத்திற்கு வந்தன. வேடுவனும் அம்மான்கள் மூன்றும் எப்பொழுது வருமோவென்னும் எண்ணத்துடன் வழி பார்த்துக் கொண்டிருந்தான். சத்தியப் பாசத்தாற் கட்டப்பட்டு வருகின்ற அந்த மூன்று மான்களையுங் கண்ட வேடன் சந்தோஷப்பட்டு ஆ, இம் மிருகங்கள் நம்மிடத்தே சொல்லிப் போனதுபோல மீண்டும் வந்தன என்று நினைத்துத் தன் வில்லை டங்காரம் செய்தான். அவ்வாறு டங்காரஞ் செய்கையில் அவன் கையிலிருந்த ஜலபாத்திரங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரிகாலத்தில் நான்காம் ஜாம பூஜை செய்தவனானான். அவ்வேடுவனுடைய பாபங்கள் அப்பொழுதே அவனை விட்டொழிந்தன. இதற்குள் அம்மிருகங்கள் மூன்றும் ஓ வனசரா எங்கள் மாமிசங்களை விரைவில் உனக்கு உணவாக்கிக் கொண்டு எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும்! என்று கூறின.
வேடன் அவற்றின் வார்த்தைகளால் மிக்க வியப்படைந்து தான் அன்றைய தினம் அறியாமற் செய்த சிவபூஜாபலத்தினால் திவ்விய ஞானமடைந்து ஆஹா! அறிவுக்குறையுள்ள இம்மிருகங்கள் தங்கள் தேகத்தால் அன்னியருக்கு உதவி செய்து எவ்வளவு தன்யமாகின்றன? நான் மனுஷ ஜன்மம் எடுத்து என்ன புண்ணியம் சம்பாதித்தேன்? பிறரைத் துன்புறுத்தி என் உடலையும் என் குடும்பத்தையும் போஷித்தேன் பிறரை வருத்தியே உயிர் வாழ்ந்த எனக்கு என்ன கதி கிடைக்குமோ? நான் எவ்வெவ் கஷ்டங்களை அனுபவிபபேனோ? இந்த உடலால் பலவிதமான பாபங்களைச் சம்பாதித்தேனல்லவா? இதுகாறுந் தீவினைகளையே செய்து இப்பொழுது துக்கிக்கிறேன். என் வாழ்க்கை நிந்திக்கத்தக்கது என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் தன் வில்லிலுள்ள அம்பால் இனி கொல்லப்படாதென்னங் கருத்துடன் உடனே வில்லினின்று எடுத்து விட்டு ஓ உத்தமமான மிருகங்களே! நீங்கள் பரோபகாரம் செய்து வந்தமையால் தன்யர்களாக இருக்கிறீர்கள்! உங்களைக் கொல்லமாட்டேன் இனி உங்கள் வாசஸ்தானத்திற்குத் திரும்பிப் போங்கள்! என்று கூறுகையில், கடூரமான முடையவனாயிருந்து திவ்ய ஞானத்தையடைந்த அவ்வேடனாற் பூஜிக்கப்பட்ட சிவபெருமான் அவனது பூஜைக்கும் மனம் பட்ட ஐந்து திருமுகங்களோடும் தமது திவ்ய திருவுருவ தரிசனங் கொடுத்து, தயாசமுத்திரமான சிவபெருமான் என்ன வரம் வேண்டுமோ அதைக் கேட்டுக் கொள் உன் விஷயத்தில் தயையுடையவனாக இருக்கிறேன் என்றார். உடனே வியாதன் திவ்விய ஞானமுடைய ஜீவன் முக்தனாய் சர்வேசுவரனுடைய திருவடிகளில் சாஷ்டாங்காமாகப் பணிந்து எல்லாப் பாபங்களும் என்னாற் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மன்னித்து எளியேனை அனுக்கிரகிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். மகாதேவனாகிய சிவபெருமான் அவனுக்கு குகன் என்னும் பெயரளித்து உன் மனத்திற் கருதிய சுகபோகங்களை அடைவாய் நீயொரு இராஜ தானியையுங் காக்க வல்லவனாவாய், உன் வமிசம் விருத்தியாகும் தேவர்களாலேயும் துதி செய்யத்தக்க திவ்யமான கீர்த்தியை அடைவாய். அயோத்தி மன்னனாகிய தசரதன் குமாரனாக விஷ்ணுவே இராம அவதாரஞ் செய்யும் போது உன்னிடத்தில் வந்து உன்னாற் பூஜிக்கப்பட்டுச் செல்லுவான். தேவர்கட்கும் முனிவர்கட்குங் கிடைத்தற்குத் துர்லபமான செய்யும் விரதத்தை விகித்து மகாபலவான்களாக விளங்குவார்கள் என்று வரங்கொடுத்தருளினார்.
இவ்வாறிருக்கையில் மான்களின் குட்டிகளும் தங்கள் தாய் தந்தை பலருக்கு உண்டாகுங் கதியே தங்களுக்குஞ் சம்பவிக்கட்டுமென்று நினைத்து உடனே அவ்விடம் வந்து சேர்ந்தன. அதனால் அந்த மான்களுக்குங் குட்டிகளுக்குஞ் சிவதரிசனங் கிடைத்தது. சிவதரிசனத்தால் அம்மிருகங்கள் சமுசார விருப்பத்தையும் மிருக தேகத்தையும் ஒழித்துத் திவ்விய தேகம் பெற்று அங்கு வந்திறங்கிய விமானத்தில் ஏறிச்சுவர்க்க லோகத்தை அடைந்தன. சர்வேசுவரனாகிய சிவபெருமான் அவ்விடத்தில் அற்புதாசலத்தில் வியாதனாகிய வேடுவனால் பூஜிக்கப் பட்டமையால் வியாதேசுவரர் என்னும் பெயரையடைந்து எழுந்தருளியிருக்கிறார் அக்குகவேடனும் அதுமுதல் அகண்ட ஐசுவரியமடைந்து இராமமூர்த்தியைத் தரிசித்துப் பல காலங் கழித்து ஆயுள் முடிவிற் சிவசாயுச்சியத்தையடைந்தான். ஆகையால் அறியாமையாலேயே, சிவராத்திரி விரதத்தை அனுசரிப்பவர்கள் சிவசாயுச்சியத்தை அடைவதானால் ஞானவான்களாய் பக்தியோடு அவ்விரதத்தை அனுசரித்தவர்கள் சிவரூபத்தை அடைவார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை எல்லாச்சாஸ்திரங்களும் தருமங்களும் விரதங்களும், தீர்த்த யாத்திரைகளும், தானங்களும் பலன்களும் சிவராத்திரி விரதத்துடன் விசாரிக்கையிற் சமானமாகமாட்டா, ஆகவே மிக்க சுபகரமான இச்சிவராத்திரி விரதத்தை இதத்தை விரும்புவோராகிய நீங்கள் ஆசரிக்க வேண்டும் இந்த விஷயத்தைப்பற்றி இதுகாறுஞ் சொல்லிய தோஷ பாபத்தை ஒழிக்கத் தக்க வேறொரு சரிதமும் உங்கட்குச் சொல்லுகிறேன்.
மூலம் whatsapp
Similar Posts : நவாம்சம் கட்டம் , கேது பலன், சிவராத்திரி, October 11 2018 Venus transition, தனுசு ராசிக்காரர்கள், See Also:சிவராத்திரி பலன்