"ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை : யாருக்கு பாதிப்பும் என்ன பரிகாரமும்
ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை பெருவதென்பதொன்றும் நல்ல நிலை அல்ல என்பது சான்றோர் வாக்கு.
ஏனெனில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரே வீட்டில் இருப்பது ஒரே உறையில் இரண்டு கத்திகளை சொருகுவது போலாகும், அப்போது ஒன்று உறையில் போனாலும் மற்றொன்று நம் வயிற்றை கிழித்துவிடும்.
இயற்கையாகவே செவ்வாய் சனி இரண்டு கிரகங்களும் சுபர்கள் அல்ல அசுபர்களாகும்.
செவ்வாய் சனி இரண்டு கிரகங்களும் ஒருவருக்கொருவர் பகை பெற்ற கிரகங்களாகும்.
அடிதடி விபத்து, சண்டை, ரத்தம், நிலம் (பூகம்பம்), தீ விபத்து, அறுபை சிகிச்சை ஆகியவற்றிற்கு காரணமான யுத்த கிரகம் என்று கூறப்படும் செவ்வாயும் அதற்கு பகை கிரகமான சனியும் மற்ற இரண்டு அசுபர்கள் இணைவதைக்காட்டிலும் செவ்வாயும் சனியும் இணைவதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். மேற்கத்திய நாடுகளில் செவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் உண்டு, அதற்கு காரணம், மார்ஸ் என்பது போர்க் கடவுளின் பெயர்.
பெரு மழையும், வெள்ளமும், தீ விபத்தும் நில நடுக்கமும், பூகம்பமும் விபத்துகளும் நிகழ்வதில் கிரகங்களின் சேர்க்கை பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் செவ்வாய் சஞ்சாரம் பற்றியும், செவ்வாய் சனி சேர்க்கை பற்றியும் ஜோதிடர்கள் அதிகம் பேசினர்.
பொதுவாக ஜாதகத்தில் செவ்வாய் சனி இருவரும் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருப்பின் அந்த ஜாதகர் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் தான், காதலுக்காக எதிர்மறை எண்ணங்களை தூண்டுவதும் கூட ஜாதகத்தில் செவ்வாய் சனி ஆதிக்கத்தால் தான், மேலும் இருவருடன் சுக்கிரன், சந்திரன் தொடர்பு பெற்றாலும் இதே நிலைதான் (லக்கினத்தை பொறுத்து பலன் மாறுபடும்).
சனி பகவான் பற்றி தனியாக கூறத்தேவையில்லை,ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான். பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறது.
இனி ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருக்கும் பாவத்தைபொருத்து ஏற்படும் பலன்களை ஆராய்வோம்.
(1ம் பாவம்/வீடு) லக்கினத்தில் செவ்வாய் சனி:
லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல் நலனில் கவனம் தேவை. லக்கினத்தில் செவ்வாய் தனித்திருந்தாலும் சனியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சரி வாகன ஓட்டிகள் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் உரிய பாதுப்புடன் வாகனத்தை இயக்க வேண்டும். செவ்வாய் லக்கினத்தில் உள்ளவர்களுக்கு தலையில் அடிபட்டு காயம் உண்டாகும். குறிப்பாக செவ்வாய் திசை அல்லது செவ்வாய் புத்தி நடைபெறும்போது அல்லது எட்டாம் அதிபர் திசை அல்லது மாரகதிபதி திசை நடைபெறும்போது அல்லது ஏழரைச்சனி , அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி நடைபெறும்போது கவனமாக இருக்க வேண்டும். எலெக்ட்ரீசியன்கள் மின்சாரத்தை பயன் படுத்தும்போது கவனம் தேவை. தென்னை மரத்தடியில் செல்லும்போது தேங்காய் தலையில் விழ வாய்ப்புள்ளது. இடி இடிக்கும்போது மழைக்காக மரத்தடியில் நிற்க வேண்டாம். (மேலே சொன்னவை அனைத்தும் பொதுவான பலன்களாகும் யாரும் பயப்பட வேண்டாம், சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்கினத்திற்கு சுபராக இருக்கலாம் அல்லது செவ்வாய் பலம் குறைந்து பகை அல்லது நீசம் பெற்றோ அல்லது குரு பார்வை பெற்றோ, அல்லது பலம் பெற்ற லக்கினாதிபதி பார்வை இருப்பின் பாதிப்புகள் குறையும். அல்லது செவ்வாய் திசையேகூட வாழ் நாள் முழுவதும் வராமலும் போகலாம்)
(2ம் பாவம்/வீடு) குடும்ப/தன/வாக்கு ஸ்தானம்:
குடும்பஸ்தானமான லக்கினத்திற்கு 2ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் கீரியும் பாம்பு போல எந்நேரமும் சண்டையிட்டுகொண்டே இருப்பர்கள். வாக்குஸ்தானமான 2ஆம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் வாயில் எந்நேரமும் அதிரடியாகவும் தவறான வார்த்தைகள் மூலம் தனது துணையை அல்லது குடும்பத்தாரை இழிவாக பேசுவார்கள். தனஸ்தானமான 2ஆம் வீட்டில் சனி இருப்பதால் பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டேயிருக்கும். திருமணமும் சற்றே தாமதமாகவே நடை பெறும்
(3ம் பாவம்/வீடு) (இளைய) சகோதர்களுடன் சச்சரவு:
லக்கினத்திற்கு 3ஆம் பாவம் இளைய சகோதர்களை குறிப்பாதாகும். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை இளைய சகோதர்களுக்குள் சச்சரவை ஏற்படுத்தி சகோதர பாவத்தை பாதிக்கிறது. சகோதரர்களுடன் வேற்றுமையை தூண்டி கருத்து வேறுபாடுகளை உருவாக்கி ஒற்றுமை குறைக்கிறது. புகழ், குடும்ப கௌரவம் பாதிக்கும்.
(4ம் பாவம்/வீடு) தாய்/கல்வி/சுகஸ்தானம்:
லக்கினத்திற்கு 4ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்படும். தாய் மகன் உறவில் விரிசல் அல்லது தாய்க்கு உடல்நலமின்றி அறுவை சிகச்சை செய்தல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். கல்விஸ்தானமான 4ஆம் பாவத்தில் செவ்வாய் சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். சுகஸ்தானமான நன்காம் பாவம் நன்றாக இருந்தால்தான் வண்டி, வாகனம், வீடு எல்லம் அமையும். 4ஆம் பாவத்தில் செவ்வாய் சனி இருந்தால் வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை.
(5ம் பாவம்/வீடு) பிள்ளைகளிடம் கவனம் தேவை :
லக்கினத்திற்கு 5ஆம் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறக்கும். குழந்தைகள் சொல்பேச்சு கேட்கமாட்டர்கள், பிள்ளைகளிடம் பேசும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயத்தில் கவனம் தேவை வம்பு வழக்கு ஏற்படும் முடிந்தவரை நீதிமன்றம் செல்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளவும். உணவுப்பழக்கத்தை முறையாக கையாள வேண்டும், இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
(6ம் பாவம்/வீடு) நோய், கடன் பெருகும், தாய்மாமன் உறவில் விரிசல்:
லக்கினத்திற்கு 6ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவையற்ற கடன் அதிகரிக்கும். எதிரிகளால் ஆபத்து ஏற்படும். நோய் பிரச்சினைகள் அதிகரித்து மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், அறுவைசிகிச்சை வரை செல்லும்.தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்படும்.
(7ம் பாவம்/வீடு) : கணவன் மனைவியிடையே பிரச்சினை:
களத்திரஸ்தானமான லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கி மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். ஒருவேளை திருமணம் நடந்தாலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையச் செய்து பிரச்சினைகளை வளர்த்துவிடும். கணவன் மனைவி உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களோடு கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு விரோதம் வளர்த்துவிடும்.
(8ம் பாவம்/வீடு) ஆயுள்ஸ்தானம்:
லக்கினத்திற்கு 8ஆம் வீடானது ஆண்களுக்கு ஆயுளைப்பற்றி கூறும் ஆயுள்ஸ்தானமானகவும், பெண்ணிற்கு அவளது திருமாங்கல்யத்தை பற்றி கூறும் மாங்கல்யஸ்தானமானகவும் இருக்கும். பெண்ணின் ஜாதகத்தில் 8ல் செவ்வாய்-சனி இருந்தால் கணவருக்கு எதாவது கண்டம் ஏற்பட வாய்ப்புள்ளது (எல்லாருக்கும் பொருந்தாது கவலை வேண்டாம்). இந்த அமைப்பு உள்ள பெண்கள் கணவர்களை வார்த்தைகளால் புரட்டி போட்டுவிடுவார்கள். ஏனெனில் செவ்வாய்-சனி 8ம் வீட்டிலிருந்து 7ம் பார்வையாக வாக்குஸ்தானமான 2ம் வீட்டை பார்ப்பதால்தான். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம். வாகன ஓட்டிகள் கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும்
(9ம் பாவம்/வீடு) தந்தைஸ்தானம்:
பாக்கியஸ்தானம் எனப்படும் 9ல் செவ்வாய்+சனி இருந்தால் தந்தை மகன் உறவானது கெடும், எனவே தந்தையுடன் தேவையற்ற வாக்குவாதத்தை குறைத்துக் கொள்வது நல்லது. லக்கினத்திற்கு 9ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இணைந்தால் வீடு, நிலம், சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். வில்லங்கம் ஏதேனும் உண்டா என கவனமாகப்பார்த்து வாங்க வேண்டும். 9 மற்றும் 12 ஆகிய இடங்கள் வெளிநாடு மற்றும் கடல் கடந்து செல்லும் யோகத்தைப் பற்றி கூறுவதாகும். ஆகவே வெளிநாடு சென்றால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஆகவே முறையான நபர்கள் மூலமோ, அல்லது பணிபுரியும் நிறுவனத்தின் மூலமோகவோ, அல்லது உங்களை பணிக்கு தேர்ந்தெடுத்த வெளி நாட்டு நிறுவனத்தால் நேரிடையாகவோ (போலி நிறுவனம் இல்லையென்று உறுதி செய்க) சென்றால் நன்று. சனி 9ல் இருக்க பிதுர் தோஷம் உண்டு. விரோதிகளை வெற்றி காண்பான். அரசு மூலம் லாபம் அடைந்து பேரும் புகழும் விளங்க வாழ்வான். அதிக லாபம் உண்டாகும்.
(10ம் பாவம்/வீடு) உத்தியோகம், சுயதொழில்:
செய்யும் தொழிலைப்பற்றி கூறும் தொழில்ஸ்தானம் எனப்படும் லக்கினத்திற்கு 10ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தனது உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்காது. தொழில்துறையில் போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். நிரந்தரமான தொழில் அமையாது. ஆனால் தொழில்காரனான சனிபகவான் தனியாக நின்று நல்ல நிலையில் இருந்தோ, லக்கினத்திற்கு சுபர் அல்லது லக்கினாதிபதியென்றாலோ அல்லது குரு பார்வை அல்லது சேர்க்கை பெற்றாலோ தொழில் வளர்ச்சி அளிப்பார், நற்பலன்களையே தருவான். வாகன யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் முன்னேறி புகழ் அடைவான். சிலருக்கு வக்கீல் தொழில் புரியும்படி அமைத்துக்கொடுப்பார்.
(11ம் பாவம்/வீடு) லாபஸ்தானம்:
உங்களது வருமானம் என்ன என்பதை பற்றி கூறும் 11ல் இருந்தால் செவ்வாய்+சனி தொழிலில் நஷ்டம், லாபம் கிட்டாது. சனிபகவான் 3ம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் சிந்தித்து செயல்படுவதில் சில சிக்கல்களை கொடுப்பார். சனி பகவான் 11ல் இருக்க குரு பகவான் 7ம் இடத்திலும் ராகு 4ம் இடத்திலும் செவ்வாய், சூரியன் இவர்கள் 3ம் இடத்திலும் நிற்க சனி ஜாதகனுக்கு சில தொல்லைகள் கொடுத்தாலும் ஆயுள் தீர்க்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
11ம் பாவம்/வீடு) லாபஸ்தானம்,மூத்த சகோதரஸ்தானம்:
லக்கினத்திற்கு 11ஆம் பாவம் மூத்த சகோதர்களை குறிப்பாதாகும். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை மூத்த சகோதர்களுக்குள் சச்சரவை ஏற்படுத்தி சகோதர பாவத்தை பாதிக்கிறது.
(12ம் பாவம்/வீடு) விரையஸ்தானம் :
விரையஸ்தானம் எனப்படும் லக்கினத்திற்கு 12ல் செவ்வாய்-சனி இணைந்தால் கட்டில் உறவு இனிக்காது. வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது. லக்கினத்திற்கு 12ஆம் வீட்டில் சனி இருந்தால் வருமானம் பாதிப்படையும். ஏனெனில் அவர் தனஸ்தானமான இரண்டாம் வீட்டை மூன்றாம் பார்வையாக பார்ப்பதால்.9 மற்றும் 12 ஆகிய இடங்கள் வெளிநாடு மற்றும் கடல் கடந்து செல்லும் யோகத்தைப் பற்றி கூறுவதாகும். ஆகவே வெளிநாடு சென்றால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
பரிகாரம்
செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு செவ்வாய்க்கு முருகப்பெருமானையும், சனிக்கு விநாயகரையும், மகா விஷ்ணுவையும் வணங்கினால் தீமைகள் குறையும்.
செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானின் ஆலயம் சென்று அவருக்கு பாலபிஷேகம் செய்து வணங்கினால் அல்லது கந்த சஷ்டி கவசம் படித்தால் தோஷம் விலகும், செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.
ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முருகப் பெருமானையும், பெருமாளையும் வணங்கி வந்தால் எந்த பாதிப்பும் வராது
"
Similar Posts :
செவ்வாய் சனி சேர்க்கை, See Also:
செவ்வாய் சனி சேர்க்கை செவ்வாய் சனி சேர்