கும்ப ராசியில், ராகுவின் ஆதிக்கத்தில் வரும் வலுவான நட்சத்திரம் சதயம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே எளிதில் நம்ப மாட்டார்கள். பள்ளியை விட வாழ்க்கை அனுபவங்களில் அதிகம் படிப்பார்கள்.
முதல் பாதத்தின் அதிபதியாக தனுசு குரு வருகிறார். நட்சத்திர நாயகனான ராகுவும், கும்ப ராசியின் அதிபதியான சனியும் இவர்களை ஆட்சி செய்வார்கள். ஏறக்குறைய 15 வயது வரை ராகு தசை நடக்கும். எதையும் நுணுக்கமாகத் தெரிந்து கொள்வார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்காது. படித்ததற்கு வித்தியாசமாக பதில் எழுதுவார்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைவிட, யாருக்கும் தெரியாத விஷயத்தில்தான் ஆர்வம் காட்டுவார்கள். எட்டாம் வகுப்பு வரை சுமாராகப் படிப்பார்கள். அதன்பிறகுதான் இவர்களின் பலம் இவர்களுக்கே புரிய வரும். ஓட்டப்பந்தயம், கால்பந்து என மைதானங்களிலும் முதன்மை பெறுவார்கள். 16 வயதிலிருந்து 31 வரை குரு தசை வரும்போது இன்னும் வலிமையாக இருப்பார்கள். தொழிலுக்கு ஒரு கல்வி, ஆர்வத்திற்கு ஒரு படிப்பு என்று பிரித்து வைத்துக் கொண்டு படிப்பார்கள். ஆங்கில இலக்கியம், உலக மொழிகளை அறிந்து கொள்ளுதல் என்றிருப்பார்கள். ராகுவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் ஆராய்ச்சிக் கல்வியை விரும்புவார்கள். சட்டம், ஆசிரியர் கல்வி, சி.ஏ., அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவை ஏற்றம் தருவதாக அமையும்.
இரண்டாம் பாதத்தை மகரச் சனி ஆட்சி செய்யும். என்ன தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்துவார்கள். ஏறக்குறைய 12 வயது வரை ராகு தசை நடைபெறும். 4 வயது வரை மெல்லிய தேகத்தோடு இருப்பார்கள். அதன்பிறகுதான் முகம் தெளியும். மொழிப் பாடத்திலும், கணக்கிலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். புரியவில்லை என்றால் ஆசிரியரைக் கேட்கத் தயங்க மாட்டார்கள். சனியினுடைய முழு ஆதிக்கமும் இவர்களிடத்தில் செயல்படும். ஐந்தாம் வகுப்பிலிருந்து வரலாற்றுப் பாடத்தின் மீது தனிக் கவனம் செலுத்துவார்கள். வகுப்பறை ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். 13 வயதிலிருந்து 27 வரை குரு தசை வரும்போது எது முக்கியம், எதை முதலில் செய்ய வேண்டும் என்கிற தெளிவு தோன்றும். பொதுவாகவே குரு தசையில் நன்றாகப் படித்து விடுவார்கள். நல்ல நேரமே கிட்டத்தட்ட அப்போதுதான் துவங்கும். எரி நட்சத்திரம், செயற்கைக்கோள் என்று ஆர்வமாகப் படிப்பார்கள். விண்வெளித் துறை, கனிம வளங்கள், மண்ணியல், புவியியல், மருத்துவத்தில் ஆர்த்தோ, சரும நோய் போன்ற துறைகள் எனில் சிறப்பாக வருவார்கள்.
மூன்றாம் பாத அன்பர்களின் அதிபதியாக கும்பச் சனி வருகிறார். இந்த பாதத்தில் மட்டும் கும்பச் சனியின் சக்தி இரட்டிப்பாக செயல்படும். ஏறக்குறைய 7 வயது வரை ராகு தசை நடக்கும். ஏதேனும் ஒரு காரணத்தினால் தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து படிக்க வேண்டியிருக்கும். 8 வயதிலிருந்து 23 வரை குரு தசை நடைபெறும். குரு லாபாதிபதியாகவும், குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் வருவதால் பிரிந்த குடும்பம், சொந்த பந்தங்கள் ஒன்று சேருவார்கள். கூடா நட்புகள் வந்தால் உடனே விலக்கவும். இல்லையெனில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் வரும். கொஞ்சம் மறதியால் அவஸ்தைப்படுவார்கள். பெற்றோர் கொஞ்சம் கூடுதலாகக் கண்காணிப்பது நல்லது. இந்த தசையில் முதல் வருஷ கல்லூரிப் படிப்பில் அரியர்ஸ் வைத்து மூன்றாம் வருடத்தில் முடிப்பார்கள். 24 வயதிலிருந்து 42 வரை சனிமகா தசை நடக்கும்போது சட்டென்று தவறுகளிலிருந்து வெளியே வருவார்கள். கால்நடை மருத்துவம், விலங்கியல், தாவரவியல், மருத்துவத்தில் எலும்பு, மயக்க மருந்து நிபுணர் போன்றவை எனில் நல்லது. தமிழ் அல்லது ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள்.
நான்காம் பாதத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். 1ம் பாதத்தை விட அதிர்ஷ்டக் காற்று கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கும். மரபு சார்ந்த விஷயங்கள், வேத வேதாந்தங்களில் ஆராய்ச்சி செய்வார்கள். 4 வயது வரை ராகு தசை நடக்கும். ராகு இவர்களுக்கு யோக ராகுவாக மாறுவார். 5 வயதிலிருந்து 20 வரை குரு தசை வரும்போது கல்லூரி வாழ்க்கை ரம்மியமாக நகரும். பெரும்பாலும் இந்த பாதத்தில் பிறந்தவர்களின் பெற்றோர் செல்வ வளத்திலும் சிறந்து விளங்குவர். பள்ளியிறுதியிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்று இலக்கை நிர்ணயித்துக்கொண்டு படிப்பார்கள். 21 வயதிலிருந்து 39 வரை சனி தசை நடக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். அலுவலக நிர்வாக சார்ந்த படிப்புகள், எஞ்சினியரிங்கில் ஐ.டி., கெமிக்கல் போன்றவை ஏற்றது. மருத்துவத்தில் வயிறு, சிறுநீரகம் சம்பந்தமான துறைகளில் நிபுணராக விளங்கும் வாய்ப்பு அதிகமுண்டு. குருவின் பூரண ஆதிக்கம் இருப்பதால் தத்துவம், உளவியல் எடுத்துப் படிக்கும்போது சமூகத்தில் அடையாளம் காணப்படும் அளவுக்கு சாதிப்பார்கள்.