ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
கன்னி ராசியில் இருக்கும் மூன்று நட்சத்திரக்காரர்களில், எதையுமே எளிதாக எடுத்துக் கொள்பவர்கள் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்தான். இவர்களுக்கு சிறிய வயதிலிருந்தே நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கும். ஹஸ்தம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தை செவ்வாய் ஆள்கிறார். ராசிக்கு அதிபதியாக புதன் வருகிறார். ஆனால், இவர்கள் இருவரும் பகைவர்கள். அதனால் ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டில் நூற்றுக்கு நூறு எடுத்துவிட்டு, இன்னொரு சப்ஜெக்ட்டில் பார்டரில் பாஸ் செய்வார்கள். 10 வயதிலிருந்து 16 வரை செவ்வாய் தசை வருவதால், கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது திடீரென்று பள்ளி மாற வேண்டி வரும். செவ்வாய் தசை தொடங்குவதால் சிறிய வயதிலேயே ராணுவம், காவல்துறையில் சேர ஆசை இருக்கும். ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுப்பார்கள். பள்ளி வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், 17 வயதிலிருந்து 35 வரை ராகு தசை நடைபெறப் போகிறது. 17 வயது என்பது பள்ளியிலிருந்து கல்லூரிக்கு நகரும் தருணம். பிளஸ் 2வில் படித்ததற்கு சம்பந்தமில்லாது வேறொரு சப்ஜெக்ட்டை எடுத்துப் படிப்பார்கள். எப்போதுமே ஷார்ட் டைம் கோர்ஸில் படித்து ஜெயிப்பார்கள். ராகு தசையில் பல மொழிகளில் வல்லமை வரும். கெமிக்கல், எலெக்ட்ரிகல், விவசாயம், சிவில், அஸ்ட்ரானமி என்று படிப்பது பலன் தரும். மருத்துவத்தில் மூச்சுக்குழல், நுரையீரல், எலும்பு, பல் சம்பந்தமான துறை கிடைத்தால் உடனே சேரலாம்.
இரண்டாம் பாதத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வழிநடத்துகிறார். ஏற்கனவே ராசியாதிபதியான புதனும், நட்சத்திரத்திற்கு தலைவரான சந்திரனும் கலவையாக இவர்கள் வாழ்வை செலுத்துவார்கள். ஏறக்குறைய 6 வயது வரை சந்திர தசை நடக்கும். 7 வயதிலிருந்து 13 வரை நடக்கும் செவ்வாய் தசையில் அதிர்ஷ்டக் காற்று பெற்றோர் மீது வீசும். சுக்கிரன் பாதத்திற்கு அதிபதியாக இருப்பதாலும், செவ்வாயும் பூமிக்குரியவராக இருப்பதாலும், நல்ல பள்ளியில் இடம் கிடைத்து நன்றாகப் படிப்பார்கள். 14 வயதிலிருந்து 31 வரை ராகு தசை நடைபெறும்போது, ‘‘நல்லா படிப்பானே... இப்போ ஏன் இப்படி ஆகிட்டான்’’ என்று விசாரிக்கும் அளவுக்கு தடுமாறுவார்கள். சந்திரனுடைய நட்சத்திரத்தில் ராகு தசை வருகிறது. இது ஒரு கிரகணச் சேர்க்கை. புத்தியில் சூட்சுமம் இருந்தாலும் அந்த நேரத்திற்குண்டான விஷயங்களில் ஜெயிக்க முடியாது போகும். பொதுவாகவே ராகு தசையில் பிள்ளைகள் கொஞ்சம் பேலன்ஸ் செய்துதான் செல்ல வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ், விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, பிரின்டிங் டெக்னாலஜி போன்றவை ஏற்றது. மருத்துவத் துறையில் நியூராலஜிஸ்ட், தண்டுவடம் சார்ந்த துறைகளில் வெகு எளிதாக நிபுணராகும் வாய்ப்பு உண்டு. நிறைய மொழியறிவு இருப்பதால் சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைப் படித்தால் நல்ல அங்கீகாரமுள்ள வேலை கிடைக்கும்.
மூன்றாம் பாதத்தை புதன் ஆள்வதால், புத்தியில் தீட்சண்யம் அதிகமாக இருக்கும். சிறு வயதிலிருந்தே மாறுபட்ட சிந்தனையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்கள். கிட்டத்தட்ட 4 வயது வரைதான் சந்திர தசை நடக்கும். 5 வயதிலிருந்து 11 வரை செவ்வாய் தசை இருப்பதால் சுமாராகப் படிப்பார்கள். பெற்றோருக்கு கொஞ்சம் கவலை கொடுப்பார்கள். 12 வயதிலிருந்து 29 வரை ராகு தசை நடக்கும்போது எதற்கெடுத்தாலும் தயங்குவார்கள். ஆனால், இரட்டை புதனின் சக்தியோடு, ராகு தசை நடக்கும்போது அபரிமிதமான படைப்பாற்றல் வெளிப்படும். பள்ளியிலிருந்து கல்லூரிக்கு செல்லும்போது ஆராய்ச்சி படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த பாதத்திற்கு அதிபதியாக புதன் வருவதால், புள்ளியியல், சி.ஏ., சட்டம், எம்.பி.ஏ. கம்பெனி நிர்வாகம் சார்ந்த படிப்புகள் எல்லாமுமே ஏற்றவை. மருத்துவத் துறையில் இ.என்.டி, நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட படிப்புகளில் தனித்துவம் பெற முடியும்.
நான்காம் பாதத்தை சந்திரன் ஆள்கிறார். நட்சத்திர அதிபதியாகவும் சந்திரன் வருவதால், சந்திரனின் இரட்டிப்புத் திறன் இவர்களிடம் செயல்படும். பிறந்த சில மாதங்கள் சந்திர தசை இருக்கும். அதன்பிறகு 1 வயதிலிருந்து 8 வரை செவ்வாய் தசை நடக்கும். மிகச் சிறிய வயதிலிருந்தே கலையுணர்வும், நுண்ணறிவும் இழையோடும். 9 வயதிலிருந்து 24 வயது வரை ராகு தசை நடக்கும். இந்த நேரத்தில், சிறிய விஷயத்திற்கெல்லாம் பெரிதாகக் குழம்புவார்கள். திடீரென்று தொண்ணூறு மார்க் எடுப்பார். அடுத்ததில் ஐம்பதுதான் வரும். தியரியைவிட பிராக்டிகலில் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். கிட்டத்தட்ட ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் அனைவருமே இந்த ராகு தசையில் கொஞ்சம் சிக்குவார்கள். அப்போதெல்லாம் புற்றுள்ள அம்மன் கோயில் அல்லது அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் வழிபட்டால் போதுமானது. மாஸ் கம்யூனிகேஷன், மெரைன், ஆங்கில இலக்கியம், சட்டம் என்று திட்டமிட்டுப் படித்தால் போதும். மனநல மருத்துவமும் பிரகாசமான எதிர்காலம் தரும். ஆர்க்கிடெக்ட், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், புவியியல், மண்ணியல் சார்ந்த படிப்புகள் நல்ல அங்கீகாரம் கொடுக்கும்.
ஹஸ்தம் நட்சத்திரத்தில் கன்னி ராசியில் பிறந்தவர்களின் ராசியாதிபதியான புதனுக்கு அதிபதியே பெருமாள்தான். நான்கு பாதங்களிலும் கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தோடு புதன்தான் ஆட்சி செய்கிறார். எனவே இவர்கள் கல்வியில் சிறப்பு பெற வழிபட வேண்டிய தலம், நாகை சௌந்தரராஜப் பெருமாள் ஆலயமே ஆகும். ஆழ்வார்களால் ஆராதிக்கப்பட்ட மூர்த்தி இவர். தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு வர, அறிவும் ஆற்றலும் கூடும். நாகப்பட்டினம் நகரின் மையத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.
Similar Posts :
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
ஹஸ்தம்