மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
வாழ்க்கை என்பது என்ன... கடவுள் இருக்கிறாரா இல்லையா...’ போன்ற கேள்விகளை உருவாக்கி, தேடலைத் துவக்கும் ஞானகாரகனான கேதுதான் மகம் நட்சத்திரத்தை ஆள்கிறார். சிம்ம ராசிக் கூட்டினில் இருப்பதால் சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் கேதுவும் வலிமையோடு இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறார்கள். இதனால் சூட்சுமமான புத்தியோடு சேர்ந்த ஆளுமையும் இருக்கும். எதையுமே தைரியமாக அணுகுவார்கள்.
மகம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் அதிபதி செவ்வாய். இவரோடு ராசியாதிபதி சூரியனும், நட்சத்திரத் தலைவராக கேதுவும் ஆள்கிறார்கள். இப்படி இரண்டு ராஜகிரகங்கள் ஒன்றாக இருப்பதால், கல்வியில் நல்ல அடித்தளம் அமையும். மிகச் சிறந்த பள்ளியில் படிக்க முடியும். 6 வயது வரை கேது தசை நடைபெறும். அப்போது மட்டும் கொஞ்சம் உடம்பு படுத்தியெடுக்கும். 7 வயதிலிருந்து 26 வரை சுக்கிர தசை நடைபெறும். தோற்றப் பொலிவு அப்படியே மாறி விடும். படிப்பில் கவனம் இருந்தாலும், கலைகளுக்கும் இடம் தருவார்கள்.
இந்த நல்ல மாற்றங்கள் 13 வயதுக்குப் பிறகுதான் வரும். அதுவரையிலும் கூச்சமும் தடுமாற்றமும் இருக்கும். பள்ளியில் எந்தப் போட்டி நடந்தாலும் பங்கேற்பார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல், கெமிக்கல் எடுத்தால் நல்லது. விலங்கியல், தத்துவம், வரலாற்றுத்துறை ஆழமாக ஈர்க்கும். பி.காம். படிப்பதை விட இவர்கள் பி.பி.ஏ. படிப்பது நல்லது. மருத்துவத்தில் டென்டல் சர்ஜன், ஆர்த்தோ என்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மிகச் சிறந்த நிபுணராக வருவர். தாய்மொழியில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
இரண்டாம் பாதத்தின் அதிபதியாக ரிஷப சுக்கிரன் வருகிறார். பொதுவாகவே கேது சொந்த ஜாதகத்தில் நன்றாக இல்லாத பட்சத்தில், பிறக்கும்போது வரும் கேது தசை ஏதேனும் சிறுசிறு தொந்தரவுகள் கொடுக்கும். 4 வயது வரை இப்படித்தான் இருக்கும். 5லிருந்து 24 வயது வரை சுக்கிர தசை நடைபெறும். முதல் பாதத்தை விட பெரிய அளவிலான நன்மைகளை சுக்கிரன் செய்வார். பாட்டு, நடனம், இசை என ஏதேனும் ஒரு கலையைக் கற்றுக் கொள்வார்கள். 25லிருந்து 30 வயது வரை சூரிய தசை வரும். அதற்கு முன்னதாகவே கல்வியில் பெரும் பகுதியை முடித்துவிடுவது நல்லது. கல்லூரியில் தாவரவியல், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். பொறியியல் என்றால் ஆர்க்கிடெக்ட், சிவில் சேரலாம். பி.காம். படிக்கலாம். ஏரோநாட்டிகல்தான் லட்சியம் என்று சிலர் படிப்பார்கள்.
மூன்றாம் பாதத்தை புதன் ஆள்வதால் சூட்சும புத்தி நிரம்பியிருக்கும். அண்டமே சிதறினாலும் அசராத மனநிலை கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு வருடங்கள் கேது தசை வழக்கம்போல் உடல் உபாதையைக் கொடுக்கும். 3 வயதிலிருந்து 22 வரை சுக்கிர தசை நடைபெறும்போது அறிவுக்கூர்மை கூடும். பிளஸ் 2 படிக்கும்போது பள்ளியில் முதல் மதிப்பெண்ணுக்கு முயற்சிப்பார்கள். வாழ்க்கை பற்றிய தேடல் கிட்டத்தட்ட 15 வயதில் தொடங்கும். எழுத்தாளர்கள், பத்திரிகை ஆர்வம் என்று இறங்குவார்கள். படிப்பில் படு சுட்டியாக இருந்து, விருப்பப்பட்ட கல்லூரியில் படிப்பார்கள். 23 வயதிலிருந்து 28 வரை சூரிய தசை வரும்போது தர்க்கம் செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார்கள். இந்த பாதத்தில் பிறந்த பலர் ஆங்கில இலக்கியம் படித்து விட்டு, பிறகு தொழிலுக்காக வேறு ஏதேனும் படிப்பார்கள். இயற்பியல், தாவரவியல் படிப்பில் தனி கவனம் செலுத்துவார்கள். புதன் ஆள்வதால் டிசைனிங், ஆர்க்கிடெக்ட் என்று படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.
நான்காம் பாதத்தின் அதிபதி சந்திரன். இவர்களுக்கு மொழியறிவு அதிகம் இருக்கும். பிறக்கும்போதே கேது தசை சில மாதங்கள் இருக்கலாம். 2 வயதிலிருந்து 20 வரை சுக்கிர தசை நடைபெறும்போது, எத்தனை வசதி இருந்தாலும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல வாடுவார்கள். என்னதான் சுக்கிர தசை நடந்தாலும், பள்ளி வாழ்க்கை எப்போது முடியும் என்று அலுப்பு வரும். சிலர் குடும்பச் சூழ்நிலை காரணமாக விடுதியில் தங்கி படிப்பார்கள். 21 வயதிலிருந்து 26 வரை நடக்கும் சூரிய தசை வாழ்க்கையை சட்டென்று மேலேற்றும். சுக்கிர தசையை விட இந்த சூரிய தசைதான் நன்றாக இருக்கும். பொறியியலில் எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்ட், ஆட்டோமொபைல் படிக்கலாம். விஸ்காம் படித்தால் எதிர்காலம் உண்டு. சி.ஏ. படிப்பை எளிதாகத் தாண்டுவார்கள். மருத்துவத்தில் இ.என்.டி, ரேடியாலஜி, அனஸ்தீஸியா போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக கேது இருப்பதால், ஞானியர்களையும் மகான்களையும் வணங்குவது நலம். ஜீவ சமாதிகள் இருக்கும் பழமையான தலங்களை தரிசிக்கும்போது கல்வியில் முன்னேற்றம் காணலாம். அப்படிப்பட்ட தலமே நெரூர் ஆகும். இங்குள்ள சிவாலயத்துக்கு பின்புறத்தில்தான் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகாஞானி ஜீவ சமாதி அடைந்தார். கரூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது நெரூர்.
Similar Posts :
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
மகம்