பெயர் | : | மச்சமுனி |
பிறந்த மாதம் | : | ஆடி |
பிறந்த நட்சத்திரம் | : | ரோகிணி |
குரு | : | அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர் |
சீடர்கள் | : | கோரக்கர் |
சமாதி | : | இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன, திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது. |
வாழ்நாள் | : | 300 வருடம் 62 நாட்கள் |
மரபு | : | செம்படவர் |
சித்தர்கள் யுகங்கள் பல கடந்து தம்முடைய தேகத்தை கல்பதேகமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவார்கள். திரேதாயுகத்தில் அப்படி அபூர்வமாக வாழ்ந்த சித்தர்களில் மச்சரிஷியும் ஒருவர். மச்சமுனி, மச்சேந்திரர், மச்சேந்திரநாதர் என்ற பெயர்களெல்லாம் கொண்ட சித்தர் ஒருவரே. ஓர் இடத்தை விட்டு வேறு ஓர் இடத்துக்குச் செல்லும் போதும், ஒரு காலட்டத்தைக் கடந்து வாழும் போதும் பெயர்கள் வேறுபடுகின்றன. தலையில் சடைமுடியுடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, கையில் ஒரு பிரம்புத்தடியுடன் ஒரு சாமியார் இருந்தால், அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள், அவரை சடைசாமி என்று அழைப்பார்கள். ஒரு சிலர் அவரை விபூதி சாமி என்ற சொல்வார்கள். சிலர், பிரம்பு சாமி என்பார்கள். இதேபோல ஊர்ப் பெயரை வைத்து பூண்டிமகான், திருவலச்சித்தர் என்ற பெயர்களும் உண்டு. சித்தர்களுக்கு, உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன் என்பது கொள்கையாகும். சித்தர்களுடைய பெயர்கள் எல்லாம் அவர்களாக வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் அதில் அக்கறை காட்டுவதுமில்லை. தூல உடம்புக்கு எந்தப் பெயர் வைத்தால் என்ன என்று இருப்பார்கள். மச்சமுனி, அகத்தியர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மச்சமுனியின் அவதார வரலாறு மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காது?அதற்கு ஏது மொழியறிவு? அதனால் எப்படிக் கேட்க முடியும்? _ என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள் மூட்டுபவை. ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம் பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன. எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோ தான் கருதினார்கள். அவர்கள் வரையில் அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம் இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்... அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த மீன். கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது! இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற மச்சமுனி. பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. அவர் நீண்ட நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டார். அட்டமா சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது. . குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். அதில் ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டாள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும் அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார். மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் ‘எனக்கு மேலும் வடை தேவை’ என்றார். கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். ‘சுட்டுத்தாருங்கள் தாயே’ என்று மன்றாடினார். ‘‘ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..’’ என்றாள், அவள். ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’ என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில் பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியொருமுறை வடைபொரிக்கும் போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்?’’ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள். கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ‘‘கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்?’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?’’ என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். கோரக்கரும் பார்வை பெற்றார். அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார். காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது. அல்லமத்தேவர் ஓர் அபூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும். மொத்தத்தில் இயற்கையின் பல பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர். அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது. கோரக்கரே இவரை வெட்டியவர். தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார். மச்சமுனியைக் குருவாகக் கொண்ட கோரக்கரும் சித்திகள் பல அடைந்து சிறப்பு பெற்றவர். இவரும் வடநாட்டில் கோரக்கநாதர் என்ற பெயருடன் குறிக்கப்படுகிறார். இந்தியாவில் உள்ள கோரக்பூர் என்னும் நகரப் பகுதியில் இவர் வாழ்ந்ததாகவும், இவர் பெயராலேயே அந்த நகரம் குறிக்கப்படுகிறது என்றும் ஒரு செய்தி உண்டு. சீனா, நேபாளம் ஆகிய இடங்களில் கோரக்கர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இலட்சுமி நரசிம்மன் என்னும் பெயர் கொண்ட மன்னன், நேபாளத்தை ஆட்சி செய்தான். மரப்பலகைகளால் கோரக்கநாதருக்கு அவன் ஒரு கோயில் கட்டியதாகவும், அக்கோயிலுக்கு கஸ்தமண்டபம் என்ற பெயர் இருந்ததாகவும், இப்பெயரே நாளடைவில் காட்மண்டு என்று மருவியதாகவும் நம்பப்படுகிறது. காட்மண்டுவில், கோரக்கர் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் ஆலயம் ஒன்று உள்ளது தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது.கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது. கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள பொய்கை நல்லூரில், சமாதி நிலை எய்தினார் என்ற செய்தி பெரும்பான்மையாக உறுதி செய்யப்படுகிறது மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் தற்போது திருப்பரங்குன்றம் வரை பெயர் கொண்ட தலத்தில், முக்தி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றம், முருகப்பெருமானின் அருள் கூடிய அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பெருமை பெற்றது .