அவர்கள் உடையில் வெளியே எங்கு பார்த்தாலும் ரத்தம். என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது என்னால் டாக்டர்கள் என்னுடைய உடலில்தான் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் அதுபற்றிய கவலையும் அப்போது எனக்கில்லை; நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்; அருமையான நேரம் அது. அவர்களிடம், 'எனக்கு ஒன்றுமில்லை, என்னைப்பற்றிக்கவலைப் படாதீர்கள், நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொல்ல நினைத்தேன். உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நான் வேறு உலகத்தில் பிரவேசிக்கிறேன். அங்கு அமைதி- பூரண அமைதி- உடலில் எந்தவிதமான வலியுமில்லை. ஆனால் ஒரு சுகானுபவம் இருந்தது; இருட்டான, ஒரு மகிழ்ச்சி ததும்பும் ஒரு இடம்; அன்பும் ஆதரவும் என்னைச் சுற்றிப் பரவியிருப்பதை உணர்ந்தேன். அந்த சுகமான இருட்டு வழி தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது.
இதுவரை பூமியில் அனுபவிக்காத ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம் அது- இருட்டுவழியின் எல்லையில் ஒரு மஞ்சள் நிறம் கலந்த வெண்மையான ஒளியைக் காண்கிறேன். அந்த அமைதியை அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெண்மை கலந்த ஜோதியை நான் அடைவதற்கு முன்னால், எனது வலதுபுறம் யாரோ இருப்பதை உணரமுடிந்தது-
அதுவேறுயாருமில்லை- ஏழு மாதங்களுக்கு முன்னால் இறந்த என் மனைவியின் சகோதரன்தான். என்னுடைய கண்களாலும் காதுகளாலும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும் அது எனது மனைவியின் சகோதரன்தான் என்பதை உணரமுடிந்தது. அவனுக்கு உருவமில்லை; ஆனால் அவனை உணர முடிந்தது- அவனது சிரிப்பை அவனது நகைச்சுவை உணர்வை என்னால் அறிய முடிந்தது- அவன் என்னை வரவேற்கக் காத்திருந்தான்" - கென்னத் ரிங் கின் Lessons from the Light".
இதுபோன்ற அனுபவங்கள், இவைகளை வெறும் மனப் பிரமையென்றோ, கட்டுக்கதைகள் என்றோ ஒதுக்கிவிட முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. இந்த அனுபவங்கள் ஏற்பட்டவர்கள் இந்த பூமியை விட்டு வேகமாகத் தாங்கள் செல்வதை உணர்கிறார்கள். பிறகு ஒரு ஒளிநிறைந்த அன்புமயமான இடத்தை அடைகிறார்கள். அங்கு முன்னமே இறந்த அவர்களது உறவினர்கள் அவர்களை 'நீங்கள் இங்கே வருவதற்கு நேரம் இன்னும் வரவில்லை, இன்னும் பூமியில் நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது", எனக் கூறித் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த உலகிற்குத் திரும்பி வந்தவுடன் எப்படி தனது இறப்பு அனுபவம் ஒரு ஆனந்தத்தை அளித்தது என உணர்கிறார்கள். ஆனால், அந்த அனுபவத்தைப்பற்றி மற்றவர்களிடம் விளக்க சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இந்த அனுபவம் அவர்களது வாழ்க்கையையே மாற்றுகிறது. அவர்கள் அதற்குப்பிறகு சாவைக்கண்டு அஞ்சுவதில்லை. இந்த பூதவுடல் மறைந்தபிறகும் 'நான்'- 'எனது ஆன்மா' உயிர்வாழ்கிறது என அறிகிறார்கள் .
அதற்குப்பிறகு அவர்களது அணுகுமுறையில், மற்றவர்களை மன்னிப்பதில், அன்புகாட்டுவதில், உதவி செய்வதில் ஆன்மிகத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகிறார்கள்- இந்த அனுபவம் அவர்கள் வாழ்ந்த வாழ்வை, செய்த நன்மைகளையும் தீமைகளையும் ஒரு சில நொடிகளில் அவர்கள் கண்முன்னே கொண்டுநிறுத்தி அவர்களைப் பண்பட்டவர்களாக்குகிறது.
Comments