சதயத்தில் பிறந்தவர்களின் ராசியாதிபதியாக கும்பச் சனியும், நட்சத்திர அதிபதியாக ராகுவும் வருகிறார்கள். பொதுவாகவே இவர்கள் பெருமாளை வணங்குவது நல்லது. அதிலும் உபதேசப் பெருமாளாக இருப்பின் நல்லது. அப்படிப்பட்டவரே நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆவார். இத்தலத்தில்தான் திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் எனும் தீட்சைகளைக் கொடுத்தார். இங்கு வழிபட, நிச்சயம் கல்வித் திறன் கூடும். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியில் அடங்குகின்றன. நான்காவது பாதம் மீன ராசியில் இடம் பெறுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். அதனால், ஆழமாக இருப்பார்கள். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
முதல் பாதத்தின் அதிபதியாக மேஷச் செவ்வாயும், நட்சத்திர அதிபதியாக குருவும், ராசியாதிபதியாக சனியும் வருகிறார்கள். ஏறக்குறைய 14 வயது வரை குரு தசை இருக்கும். நட்சத்திர நாதனான குருவும், பாதத்தின் அதிபதியான செவ்வாயும் நண்பர்கள். எனவே சிறிய வயதிலேயே பொறுப்பாக இருப்பார்கள். சில மகான்களின் பார்வை படும். எட்டாம் வகுப்பு வரையிலும் நன்றாக நகரும் வாழ்க்கை, அதன்பிறகு கொஞ்சம் தடுமாறும். 15 வயதிலிருந்து 32 வரை சனி தசை நடக்கும். ராசிநாதனின் தசையாக இருப்பதால், ஓரளவு நன்றாக ஓடும். எதிலும் தொடக்கச் சிரமங்கள் அதிகமிருக்கும். இந்த தசை பாதி கொடுக்கும்; பாதி கெடுக்கும்படியாக அமையும். அரியர்ஸ் வைத்துத்தான் பாஸ் செய்யும்படியாக இருக்கும். 25 வயதிலிருந்து ஏற்றம்தான். காவல்துறை, ராணுவம், விமானப்படை என சிலர் போவார்கள். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்டானிக்ஸ், கெமிக்கல் படிப்புகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். பி.பார்ம், கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஜெனடிக் எஞ்சினியரிங் போன்றவையும் எதிர்காலம் தரும்.
இரண்டாம் பாதத்தை சுக்கிரன் ஆள்வதால் வசீகரமும், கண்களில் காந்தப் பார்வையும் இருக்கும். ஏறக்குறைய 10 வருடம் குரு தசை நடக்கும். குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் மந்திரமும் தெரியும்; தந்திரமும் தெரியும். 10 வயது வரை குரு தசை நடக்கும். சனியும், பாதத்தின் அதிபதியான சுக்கிரனும் நெருங்கிய நண்பர்கள். கும்பச் சனியின் மந்த புத்தி, காலம் தாழ்த்துதல் இவற்றை சுக்கிரன் அழித்து விடுவார். அதனால், முதல் பாதம் போல் இரண்டாம் பாதம் இருக்காது. அழகும் அறிவும் பொருந்தியவராக இருப்பார்கள். படிப்பில் படு சுட்டியாக விளங்குவார்கள். எந்தப் படிப்பிற்கு எதிர்காலம் என புரிந்து படிப்பார்கள். 11 வயதிலிருந்து 29 வயது வரை சனி தசை நடைபெறும். பிறவிக் கலைஞன் என்பதுபோல பெயரெடுப்பார்கள். பாடங்களில் கவனம் குறையும். ஆனாலும், படிப்பை விடமாட்டார்கள். திரைத்துறை சார்பான தொழில்நுட்பக் கல்வியை இவர்கள் தாராளமாகப் படிக்கலாம். விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் போன்றவை சிறந்தது. இசை பயின்றால் நிச்சயம் சமூகத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மூன்றாம் பாதத்தின் அதிபதியாக புதன் வருகிறார். ராசியாதிபதியான சனிக்கு புதன் நட்பாகும். நட்சத்திரத் தலைவர் குரு என்பதைப் பார்த்தோம். இந்தக் கூட்டணியால் இவர்கள் நிறைகுடமாக இருப்பார்கள். ஏறக்குறைய 6 வயது வரை குரு தசை நடப்பதால், ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வந்து நீங்கும். 7 வயதிலிருந்து 25 வரை சனி தசை நடக்கும். சட்டென்று ஒரு மாற்றம் ஏற்படும். சிறிய வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். ஆசிரியருக்கே பல விஷயங்களை விளக்குவார்கள். படிப்பு, படித்ததை சொல்லிக் கொடுப்பது... என்று வாழ்க்கை நகரும். நினைவாற்றல் மிகுதியாக இருக்கும். கல்லூரி முடிந்தவுடன் வெளிநாடுகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்வோர் அதிகமுண்டு. 26 வயதிலிருந்து 42 வரை புதன் தசை நடைபெறும்போது அந்தஸ்து உயரும். புள்ளியியல், சட்டம், அக்கவுன்ட்ஸ், பொலிடிகல் சயின்ஸ், சி.ஏ., ஆர்க்கிடெக்ட், அனிமேஷன், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவை நல்ல எதிர்காலம் தரும்.
கும்ப ராசியில் தனது மூன்று பாதங்களைப் பதித்த பூரட்டாதி நட்சத்திரம், கொஞ்சம் எட்டி தனது பக்கத்து வீடான மீன ராசியில் நான்காம் பாதத்தைப் பதிக்கிறது. மீன ராசியிலேயே குருவினுடைய நட்சத்திரத்தை உடையது இந்த நட்சத்திரம்தான். பாதத்தின் அதிபதியாக சந்திரன் வருவதால் அளவு கடந்த கற்பனை வளம் இருக்கும். ஏறக்குறைய 3 வயது வரை குரு தசை இருக்கும். 4 வயதிலிருந்து 22 வரை சனி தசை நடைபெறும். வியக்க வைக்கும் பொறுப்புணர்வு இவர்களுக்கு இருக்கும். புத்தகத்தின் அட்டையைக்கூட கிழிக்காது பத்திரமாக வைத்துக்கொள்வோர் இந்த பாதத்தில் அதிகம். எல்லாவற்றிலுமே சிஸ்டமேட்டிக்காக நடந்து கொள்வார்கள். முதலிடத்துக்கு நெருக்கமாகவே மதிப்பெண் எடுப்பார்கள். இந்த தசையில் அதிக நேரம் தனிமை, நிறைய படிப்பு என்று வாழ்க்கை நகரும். ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. படிப்பில் பைனான்ஸ், மெரைன் எஞ்சினியரிங், மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்றவை படித்தால் நிச்சயம் ஏற்றம் உண்டு.
சந்திரனின் சக்தியும், குருவின் இரட்டிப்பு அருளும் ஒன்று சேர்ந்த அமைப்பை பூரட்டாதி காட்டுகிறது. வடலூர் ராமலிங்க அடிகளாரின் சத்திய ஞானசபையை தரிசித்தால் இவர்களுக்கு கல்வி வளம் பெருகும். அருட்பெருஞ்ஜோதியாக இறைவன் இருக்கும் தத்துவத்தை வள்ளலார் எடுத்துரைத்தார். மேலும், குரு என்கிற தத்துவமும், சந்திரனின் ஒளி எனும் தத்துவமும் இணைந்திருக்கும் அமைப்பை இது காட்டுகிறது. வள்ளலாரின் சத்திய ஞானசபைக்குச் சென்று திருவருட்பாவை படிக்க, கல்வியில் ஏற்றம் கிடைக்கும். பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் இருக்கிறது வடலூர்.