பரமகுரு சுவாமிகள் ஈழத்து சித்தர் வகையைச் சேர்ந்தவராவார்.
சித்தானைக்குட்டி, பெரியானைக்குட்டி, நவநாத சித்தர் ஆகிய மூவரும் ஒரே காலத்தில் பாரத நாட்டிலிருந்து வந்தது போன்றதொரு செய்தியை வேறு மூன்று மகான்களும் பாரதத்திலிருந்து ஈழம் வந்ததாக கர்ண பரம்பரைச் செய்தி கூறுகின்றது. அவர்கள் சுவாமி சின்மயானந்தர், சுவாமி முக்தியானந்தர், சுவாமி நிரஞ்சனாந்தர் என்று அழைக்கப்பெற்றனர். அவருள் முதியானந்தரே கடையிற்சுவாமிகள் எனப் பெயர் பெற்றார். சுவாமி சின்மயானந்தர் பரம்பரையில் வந்தவர்கள் சார்ஜன் சுவாமி பரம்பரையினர். இப்பரம்பரையில் வந்தவர்களே கந்தர் மடத்து வேதாந்த மடத்தைச் சேர்ந்தவர்கள். சுவாமி நிரஞ்சனானந்தர் பரமகுரு சுவாமிகள் என்ற பெயரைத் தாங்கி நின்றவர்.
தேயிலைத் தோட்ட மக்கள் மத்தியில் யாரவது ஒரு மகான் தோன்றவில்லையா என்ற வினாவிற்கு விடையாகத்தான் பரமகுரு சுவாமிகள் வரலாறு விடை அளிக்கின்றது. சுவாமிகள் ஈழத்தின் மத்திய மலை நாட்டுப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாக அவதரித்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை வளர்ந்து வந்தது. இயல்பிலேயே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையில் இருந்து திருக்கோணமலைக்குச் செல்லும் வீதியில் உள்ள காடுகளில் தனிமையை நாடி மூன்றாண்டுகள் தவம் செய்தார். தேயிலைத் தோட்டத்திற்குத் தொழிலாளராக கொண்டு வரப்பட்டவர்கள் மாத்தனை வழியாகவே கொண்டு வரப்பட்டார்கள்.மாத்தளை மலையகத்தின் நுழைவாயில் என்று கூறலாம். மாத்தளை மாரியம்மன் கோயிலின் தோற்றத்திற்கும் இப்பாதையாக வந்த தொழிலாளரே காரணமாயினர்.
சுவாமிகள் கண்டோரைக் காந்தமென இழுக்கும் கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர். சுவாமிகளுடைய பூர்வாச்சிரம உறவினர்கள் சுவாமிகளைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு இலௌசிக வாழ்க்கையில் ஈடுபடுத்துவதற்குப் பெரும்பாடுபட்டனர். வறியவர், செல்வர், ஆடவர்,பெண்டிர், பாலர், விருத்தர் என்ற பாகுபாடின்றி யாரும் வந்து எளிதிலே தரிசிக்கக்கூடிய தன்மை உள்ளவர். கோவண உடை தரித்துப் பச்சை நிறப் போர்வை ஒன்றைப் போர்த்திருப்பார். படிப்பறிவற்ற சூழ்நிலையிற் பிறந்தவரானாலும் மற்றவர்கள் மெச்சச் தகுந்த ஞான அறிவைப் பெற்றிருந்தார்.
சுவாமிகள் இந்தியாவிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்கள். இந்தியாவில் கிடாரிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவஞ் செய்திருந்தார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இவரது உததம சீடரான குழந்தைவேற் சுவாமிகள் தாம் பாடிய குருதோத்திரப் பாடல்களில் “கிடாரிப் பருப்பதம் மேய பிரானே” என்று பரமகுரு சுவாமிகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பெரியானைக்குட்டி சுவாமிகள் கண்டியிலே பிறந்து வளர்ந்து பின் பாரத நாடு சென்று ஞானநிலை அடைந்து மூவராக வந்தது போன்றே, இவரும் தேயிலைத்தோட்டத்திலே பிறந்து வளர்ந்து, பாரதநாடு சென்று ஞானியாகி நிரஞ்சனாந்தர் என்ற பெயரைப் பெற்று மூவராகி வந்துள்ளனர்.
குழந்தைவேற் சுவாமிகளுக்கு உபதேசம் செய்விப்பதற்காகவே கடையிற் சுவாமிகள் தம்மருளால் பரமகுரு சுவாமிகளைக் கீரிமலைக்கு எழுந்தருளச் செய்திருந்தார். குழந்தைவேற் சுவாமிகள் ஒரு காலத்தில் கடையிற்சுவாமிகளுக்கும் பரமகுரு சுவாமிகளுக்கும் பணிவிடை புரிந்து வந்தார். பரமகுரு சுவாமிகளுக்கும் பணிவிடை புரிந்து வந்தார். பரமகுரு சுவாமிகள் மாத்தளை, கீரிமலை, கிடாரிப்பட்டி, மருதனாமடம் என்ற நான்கு பகுதிகளிலும் சஞ்சாரஞ் செய்துள்ளார் என்பதற்குத் தகுந்த சான்றுகள் இருக்கின்றன.
மருதனாமடத்தில் இப்பொழுது இராமநாதன் கல்லூரியிருக்குங் காணி அக்காலத்தில் வெறும் பனங்காடாக இருந்தது. சுவாமிகள் கௌபீனமும் பச்சைப் போர்வையுந் தரித்த கோலத்துடன் சில காலம் அப்பனங்காட்டில் தனிமையாக இருந்து வந்தார். பாசிப் பயற்றை அவித்துக் கண்சியாகப் பருகிவந்தார்.
தென்னிந்தியாவில் தஞ்சாவூரில் சிவஞானி ஒருவர் இருந்ததார். அவரை இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என அழைப்பர். அவர் சேர் அருணாச்சலம் அவர்கள் ஒரு முறை தமது குருநாதருக்கு எழுதிய கடிதத்தில், அப்போது கிடாரிப்பட்டியில் இருந்த பரமகுரு சுவாமிகளின் சுகம் பற்றி விசாரித்து எழுதி இருந்தார். இதிலிருந்து பரமகுரு சுவாமிகள் மீது சேர் அருணாச்சலம் அவர்கள் எத்தகைய மதிப்பும், அன்பும் வைத்திருந்தார்கள் என்பது புலப்படுகின்றது.
பரமகுரு சுவாமிகள் பேரால் காங்கேசன் துறையில்ஒன்றும் கீரிமலையில் ஒன்றுமாக இரு மடங்கள் கட்டப்பட்டன. சேனிய தெருவில் சின்னத்தம்பி என்றொரு அன்பர் இருந்தார். இவர் சுவாமிகள் மீது மிக ஈடுபாடு கொண்டவர். தமது குரு பக்தியை விளக்கு முகமாகவே இவ்விரு மடங்களையும் ஸ்தாபித்தார். சுவாமிகள் கிரிமலையில் சமாதி ஆக வேண்டும் என்ற பெருவிருப்பினாலேயே அன்பர் சின்னத் தம்பி அவர்கள் ஆம் மடத்தைத் ஸ்தாபித்தார்கள்.
அனால் திருவுளச் சம்மதம் வேறாக இருந்து விட்டது. சுவாமிகள் தமது சாதனைகளைப் பலப்படுத்தும் முகமாகத் தேச சஞ்சாரம் அடிக்கடி செய்துள்ளார். சுவாமிகள் யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்க விரும்பாதாவர். காற்றைப்போலச் சுதந்திரமாக வாழ விருப்பங் கொண்டவர். காற்றும் மழையும் வெயிலும் யாருடைய கட்டுப் பாட்டுக்கும் அடங்கி இருப்பனவல்ல.
சுவாமிகள் தமது ஆத்மீக சாதனையை முன்னிட்டே இந்தியாவுக்கும் சென்றார். கிடாரிப்பட்டி என்பது மலைகள் சூழ்ந்த ஒரு அமைதியான இடம். சுவாமிகளை அங்குள்ளவர்களிர் பலர் அறியார்கள். ஈழத்தில் எங்கு சென்றாலும் சுவாமிகளை அறிந்தவர்கள் இருப்பார்கள். அறிமுகமானவர்கள் மத்தியில் சாதனைக்குப் பலவிதத்தில் இடையூறுகள் நேரலாம். யாரும் அறியாத இடத்தில் இறைவன் ஒருவனை மாத்திரமே துணையாகக் கொண்டு சாதனை நிகழும். கிடாரிப்பட்டியில் பல மகான்கள் காலத்திற்குக் காலம் இருந்து தவம் செய்துள்ளார்கள். அவர்களுடைய தவ சித்தியினால் அப் பகுதி ஆத்மீக அலை நிர்மபியதாகக் காணப்பட்டது.
சுவாமிகள் இளமையிலேயே தவராஜராக விளங்கிய வாரனப்படியினால் அவரது தோற்றம் முருகப்பெருமானுடைய தோற்றப் பொலிவாக விளங்கியது. பல அன்பர்கள் அவரை முருகப்பெருமானகப் பாவித்து பல குரு வணக்கப் பாடல்கள் பாடி உள்ளனர்.
கூவிய சேவலி னாலும் – குரு
வராகிய கோலத்தினாலும்
தூவிய மஞ்ஞை யினானுந் – துணை
யாகிய பாதத்தினானு
மாவியை யாட்கொள்ளு வானு – மயி
லேறிய வந்தத்தி னானும்
பாவியை மீட்கவல் லானுங் – கிடாரிப்
பருப்பத மேயபி ரானே.
பரமகுரு சுவாமிகளின் சமாதிவைபவம் 1904 ஆம் ஆண்டில் மாத்தளையில் நடைபெற்றது.
இது ஒருசிலருக்கு ஏமாற்றத்தையும் அளித்தது. என்றாலும் குழந்தைவேர் சுவாமிகளின் தனது குருநாதருடைய சமாதி மாத்தளையில் நடைபெற இருக்கிறது என்பதை உள்ளுணர்ந்து பன்னிரண்டு சீடர்களுடன் மாத்தளைக்கு சென்று நாற்ப்பது நாட்கள் தங்கியிருந்து பரமகுரு சுவாமிகளின் சமாதி வைபவத்திற் பங்குபற்றியுள்ளார். சேர்.அருணாசலம் அவர்களே சுவாமிகளின் சமாதித் திருப்பணியை நிறைவேற்றியுள்ளார்கள்.
பெயர் | : | பரமகுரு சுவாமிகள் |
சமாதி | : | மாத்தளை, ஈழம் |