கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், ""யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார்.
லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார்.லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.
தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு "பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு "பத்மாவதி என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார். சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவை:
1. விருஷபாத்ரி - எருதுமலை
2. நீலாத்ரி - கருமலை
3. அஞ்சனாத்ரி - மைமலை
4. சேஷாத்ரி - பாம்பு மலை
5. கருடாத்ரி - கருடமலை
6. நாராயணாத்ரி - நாராயண மலை
7. வேங்கடாத்ரி - வேங்கட மலை.
திருப்பதி அரிய தகவல்
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!!
வேங்கடாசலம் - பெயர் காரணம் (புராணக்கதை):
ஆந்திர மாநிலத்தில், சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசைலத்தின் மேற்குப் பகுதியில் நந்தனபுரம் என்ற நகரம் இருந்தது. அந்த நகரத்தை நந்தன் என்ற அரசன் சிறப்பாக ஆண்டு வந்தான். அந்த நகரத்தில் நான்கு வேதங்களும் கற்றறிந்த புரந்தரன் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவருக்கு குழந்தைப்பேறு கிட்டாததால், பல தவங்களும் யாகங்களும் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தவமிருந்து பிறந்ததால் அவனுக்கு மாதவன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். மாதவன் தந்தையைப் போலவே நான்கு வேதங்களையும் கற்றதுடன், சகல சாஸ்திரங்களையும் கற்று சிறந்த அறிஞனாக விளங்கினான். அதனால் பிரம்மதேஜஸ் (ஒளிபொருந்திய உடலழகு) அவனை வந்தடைந்தது. திருமண வயது வந்தவுடன் சந்திரரேகை என்ற பெண்ணை மாதவனுக்கு மணம் முடித்து வைத்தார் தந்தை புரந்தரன். அவன் தன் அழகிய மனைவியுடன் பல இடங்களுக்கும் சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தான். இல்லற இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்தனர் மாதவனும் சந்திரரேகையும்.
ஒருநாள், ஒரு தாமரைத் தடாகத்தின் கரையில் இருவரும் களித்து இன்புற்றிருந்தனர். அப்போது அங்கு விதியின் காரணமாக, ஒரு புலைப்பெண் நிர்வாணமாக வந்து நின்றாள். அவளைக் கண்ட மாதவன் அவள்மீது மையல் கொண்டான். பக்கத்தில் தன் மனைவி இருப்பதையும் மறந்து அந்தப் புலைப் பெண்ணோடு கூடிக்குலாவினான். காமத்தால் மதிமயங்கியிருந்த மாதவனை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, அவனுக்கு மது, மாமிசம் தந்து மூர்க்கனாகவும் முரடனாகவும் மாற்றிவிட்டாள் அந்தப் பெண். மதியிழந்த மாதவன் அவளுடைய அன்பைப் பெறுவதற்காகவும், அவளோடு இன்பம் துய்ப்பதற்காகவும், அவளைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தனி வழியே செல்லும் மக்களைத் தாக்கி, அவர்களிடமிருந்து பொன்னையும் பொருளையும் வழிப்பறி செய்து, அவற்றை புலைப்பெண்ணுக்குக் கொடுத்து வாழ்ந்து வந்தான். நாளாக நாளாக மாதவனுக்கு பல நோய்கள் வர ஆரம்பித்தன. இறுதியில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அந்தப் பெண்ணுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்க அவனால் முடியவில்லை. பயனற்ற அவனை தனியாக விட்டுவிட்டு அவள் வெளியேறி விட்டாள்.
அவள் அவனை விட்டுச் சென்றதாலும். கொடிய பாவங்களைச் செய்ததாலும் மாதவன் மேலும் பித்தனாகி, பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் சேஷகிரியின் பக்கம் வந்து சேர்ந்தான். அனந்தன் வடிவாகிய சேஷகிரியின்மீது அவனையறியாமல் நடக்கத் தொடங்கினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னி தேவன் ஓடிவந்து அவன் கால்களில் பற்றியிருந்த பாவங்களைப் பற்றி எரியச் செய்தான். அதனால் சுயநினைவைப் பெற்றான் மாதவன். சிறந்த வேத விற்பன்னனான மாதவனுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்தன. தன் நிலை உணர்ந்தான். சேஷகிரி வாசனை தலைநிமிர்ந்து பார்த்து பக்தியுடன் பாடித் துதித்தான். அவனது நோய்கள் அனைத்தும் நீங்கி, புடமிட்ட பொன்போல் பழைய பிரம்மதேஜஸ் பெற்றான். இக்காட்சிகளை வானிலிருந்து பார்த்து அதிசயித்த தேவர்கள், கீழே இறங்கி வந்து மாதவனின் வரலாற்றைக் கேட்டனர். அவன் தன் பிறப்பு முதல் நடந்தவற்றையெல்லாம் கூறினான்.
மாதவன் என்ற மறையவன் இம்மலையின் மீது கால் வைத்த மாத்திரத்திலேயே அவனது பாவங்கள் தொலைந்ததைக் கண்ட வானவர்களும் முனிவர்களும் இம்மலைக்கு வேங்கடாசலம் என்று பெயர் வைத்தனர். வே என்ற எழுத்து, தொகுதியாகிய (மொத்த) பாவத்தைக் குறிக்கும். கட என்ற இரண்டாம் பதம் கொளுத்தப்படும். (போக்கும்) என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். அசலம் என்றால் மலை. அதாவது அனைத்துப் பாவங்களையும் சாம்பலாக்கும் மலை என்று பொருள். பிரம்மதேஜஸ் பெற்ற மாதவன் அம்மலை மீது அமர்ந்து இந்திரியங்களை அடக்கி பல காலம் கடுந்தவம் செய்து, திருமகள் கொழுநன் (ஸ்ரீனிவாசன்) அருள்பெற்று பரமபதம் சேர்ந்தான். இக்கதையை நாரதர் பிருகு முனிவருக்குக் கூறியதாகவும்; அதை சூத முனிவர் மற்ற முனிவர்களுக்குக் கூறினார் என்றும் வராக புராணம் கூறுகிறது.
ராஜ கோபுரம் : இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. "படிகாவலி மஹா துவாரம் என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.
மூன்று பிரகாரம்: கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை "சம்பங்கி பிரதட்சிணம் என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.
கிருஷ்ண தேவராய மண்டபம்: கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.
ரங்க மண்டபம்: சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்க பட்டுள்ளது.
திருமலை ராய மண்டபம்: ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.
ஜனா மண்டபம்: திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.
துவஜஸ்தம்ப மண்டபம்: வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங் களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.
நடிமி படி காவிலி: இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள் ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. "வெண்டிவாகிலி என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.
திருமாமணி மண்டபம்: பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர், இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு சீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் 2 மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்கு, "திருமாமணி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. "முக மண்டபம் என்றும் இதைச் சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சன்னதியும், வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது.
பங்காரு வகிலி: திருமாமணி மண்டபத்தைக் கடந்து "பங்காரு வகிலி எனப்படும், தங்க நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கி றோம். இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ளமரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடு களில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.
கருவறை: வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை "ராமர் மேடை என்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர்.இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு "குலசேகர படி என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது,
""செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே!
நெடியானே! வேங்கடவா!
நின் கோயில் வாசல்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன்
பவளவாய் காண்பேனே!
என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்
ரீவேங்கடேச சுப்ரபாதத்தில் மொத் தம் 70 ஸ்லோகங்கள் உள்ளன. இவை நான்கு பகுதிகளாக அமைந்துள்ளன.
முதல் பகுதியான சுப்ரபாதம், யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
இரண்டாம் பகுதியான ஸ்தோத்திரம், ஸ்ரீவேங்கடவனை துதி செய்தல் - அதாவது போற்றி வணங்கும் பகுதியாகும். இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.
மூன்றாம் பகுதியான பிரபத்தி, திருமகளின் பெருமை குறித்தும், ஸ்ரீவேங்கடவன் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.
நான்காவது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், விழாக்காலங்களில் திருமால் மேளதாளம் இல்லாமல் பவனி வருவது ஏன்?
திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.
"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.
அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.
உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.
இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.
அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக.
"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!
மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.
பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!
பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!
இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்.