இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.
இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார்.
கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள். அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே?
சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.
தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல.
கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவனை சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம்,
இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.
இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.
சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது.
சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-
அடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதி
நடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதி
மேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி
என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.