பைரவர் பற்றி
சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். தீயோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும், அத்தீயோரால் பயம் கண்டோரின் பயத்தைப் போக்கவும் வெளிப்பட்டது பைரவர் அவதாரம். சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரும், சிவகணங்களுக்கு தலைவருமானவர் பைரவர். பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமானின் ஆணைப்படி ருத்திர், உருக்கொண்டு பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தவர். அறுபத்து நான்கு திருவடிவங்களாகக் கூறப்பட்டுள்ள பைரவரின் தலை மீது தீ ஜுவாலை, திருவடிகளில் சிலம்பு, மார்பில் கபால மாலை துலங்குவதைக் காணலாம். இவர் முக்கண் கொண்டவர். திரிசூலம், கபாலம், நாகபாசம், உடுக்கை, டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர். ஆடை அணியா அழகராகக் காட்சி தருபவர். சிவன்கோயில்களில் வடகிழக்கு மூலையில் அருள்பாலிப்பவர்.
காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் பூட்டிய திருச்சன்னிதிகளின் அனைத்து சாவிகளையும் பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்த பின்னரே கோயிலைச் சாத்துவது மரபு. கோயிலில் காவலராக இருந்து எந்த இடையூறோ, இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை க்ஷேத்ரபாலகர் என்று பக்தர்கள் வணங்குகின்றனர்.
பைரவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, தேன், அவல் பாயசம், தயிர்சாதம், செவ்வாழை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட, மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும், திருமணம், வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, வியாபார முன்னேற்றமும் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பைரவருக்கு உகந்தது வெள்ளை வஸ்திரம். தயிர் அன்னம், தேங்காய் போன்ற வெண்ணிற உணவுகள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறந்தது.
* பைரவர் என்பது வடமொழிச்சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளும் பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு “பைரவர்’ என்பது பெயராயிற்று.
* பைரவருக்கு சேஷத்திர பாலகமூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. சேஷத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
* பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஞ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.
* காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன.
* தாராசுரம் மற்றும் திருப்போரூரில் பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
* பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.
* அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன.
* பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.
பைரவர் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை