ந த்வேவாஹம் ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம:ஸர்வே வயம் அத: பரம்
"நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை." (பகவத் கீதை 2.12)
ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஷாஷ்வதோ ’யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே
"ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன். உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை."
இந்த ஸ்லோகங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரின் உண்மையான நிலையையும் மிகத் தெளிவாக விளக்குகிறார். அதாவது, மனிதர்களாக இருந்தாலும் சரி, வேறெந்த உடலில் வாழ்ந்தாலும் சரி, உண்மையில் நாம் எவரும் ஒருபோதும் அழிவதில்லை. எல்லா காலத்திலும் நிரந்தரமாக வெவ்வேறு உடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவே நமது உண்மையான நிலை. இதனை ஸ்ரீ கிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைக் கொண்டு பகவத் கீதையில் (2.22) நன்கு விளக்குகிறார்:
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ ’பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-
யன்யானி ஸ்ம்யாதி நவானி தேஹி
"பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது." ஆத்மாவை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. ஆத்மா நிரந்தரமானது. எங்கும் உள்ளது. நிலையானதாய், அசைவற்றதாய் எப்பொழுதும் உள்ளது.
எந்தவொரு ஜீவனுக்கும் அழிவே இல்லை என்னும் பட்சத்தில், மரணம் உண்டாகும்பொழுது அழிவது என்ன? மரணத்தின்போது, ஜடவுடல் மட்டும் அழிவிற்கு உட்படுவதாக கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு மாற்றமடைவதையும் அவர் விளக்குகின்றார்.
இவ்வாறாக, ஓர் உடலை விட்டு வேறு உடலை ஆத்மா ஏற்கும்போது, அவன் தன்னுடைய தாய் தந்தையரையோ மதத்தையோ தேர்ந்தெடுப்பதில்லை. தனது பாவ புண்ணியத்திற்கு ஏற்றாற் போல, தாய்தந்தை, பிறப்பிடம், உடல் அழகு, செல்வம், அறிவு போன்றவை தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகின்றன, கர்மணா தைவ நேத்ரேண. எனவே, நாம் தனித்தன்மை வாய்ந்த ஆத்மாக்களே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தவரல்ல. இன்று ஒரு மதத்தில் இருப்பவர்கள் மறுபிறவியில் வேறு மதத்தில் பிறக்க நேரிடலாம். இதனால் உடலை அடிப்படையாகக் கொண்டு, மதத்தின் அடிப்படையில் நாம் எதையும் நிர்ணயிக்க முடியாது. ஆத்மா என்னும் உண்மையான நிலையில், நாம் அனைவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள், அதுவே ஸநாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது.