இக் குறளில் வள்ளுவர் ஏழு பிறப்பு என்று கூற வருகிறார். அதாவது மனித ஆன்மாவிற்கு ஏழ் பிறவி என்றும், மரணத்தில் ஆத்மா அழிவதில்லை என்பதும் அவரவர் செய்யும் பாவ, புணியங்களுக்கேற்ப மறுபிறவி உண்டு என்பதும், அப்பிறவிச் சுழற்சியினின்று கட்டறுத்து வீடு பெறுதல் என்பதே மனிதனின் நோக்கம் என்றும் கூற வருகிறார். எனவே உயிர்களின் மறு பிறப்புக்களை அவற்றின் அறிவின் தன்மைக்கேற்ப ஏழு வகை என்று சொல்கின்றார்கள். அதாவது தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்பவை எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். மறுபிறப்புக்கள் மொத்தம் ஏழு என்பதல்ல ஏழு வகை என்பதே சரியானது.
இவை வள்ளுவரின் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதைக் காட்டிலும் சித்தாந்தக் கருத்துக்கள் என்று கொள்வதே சரி. காரணம் இவையே சித்தர்களின் வாழ்வியல் தத்துவங்களும் ஆகும். குறளின் கவிதை நயத்திற்கான வார்த்தைச் சித்து மட்டுமல்ல வாழ்வியலின் கூறுகளை, நளினங்களை அவற்றின் பிறப்பு, இறப்பு அதை மீறிய வாழ்வுத் தொடர் பற்றிய நுணுக்கங்களையும், தெளிவையும் ஒரு சித்தர் போலவே உணர்த்துகிறார்.
"இன்மை யெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும்"
என்ற குறளில் ஒருவன் கற்ற கல்வியானது அவனது அடுத்தடுத்த பிறவிகளிலும் பயன்படும் என்றும், ஒருவனது நல்குரவு அவனது மறுபிறப்பிலும் வரும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். இதனால் திருவள்ளுவர் காலத்திலேயே, தமிழர்கள் இம்மை மறுமை இவற்றில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.