நிறம் | சிவப்பு |
மனைவி | சக்தி தேவி |
கிரஹத் தன்மை | சரக் கிரஹங்கள் |
பஞ்சபூத கிரஹங்கள் | பிருதிவிக் கிரஹம் |
இரத்தினம் | பவளம் |
மலர் | செண்பகம் |
குணம் | குரூரன் |
தேவதை | முருகன் |
பிரித்யதி தேவதை | பிருத்வி |
ஆசன வடிவம் | முக்கோணம் |
தேசம் | அவந்தி |
சமித்து | கருங்காலி |
திக்கு | தெற்கு |
சுவை | துவர்ப்பு |
உலோகம் | செம்பு |
வாகனம் | அன்னம் |
பிணி | பித்தம் |
தானியம் | துவரை |
நாடி | பித்த நாடி |
காரகன் | சகோதரன், பூமி, வீடு, வாகனம் |
ஆட்சி | மேஷம், விருச்சகம் |
நீசம் | கடகம் |
உச்சம் | மகரம் |
மூலத்திரிகோணம் | மேஷம் |
உறுப்பு | தலை, மச்சை |
நட்சத்திரங்கள் | மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் |
பால் | ஆண் |
திசை காலம் | ஏழு ஆண்டுகள் |
கோசார காலம் | 11/2 மாதம் |
உபகிரகம் | தூமன் |
நட்பு | சூரியன், சந்திரன், வியாழன் |
பகை | புதன், ராகு, கேதுசுக்கிரன், சனி |
சமம் | சுக்கிரன், சனி |
ஷேத்தரம் | வைத்தீஸ்வரன் கோவில் |
வைணவ திவ்யதேசம் | திருக்கோளூர், மங்கள்நாத் கோயில் |
திருமால் அவதாரம் | நரசிம்மர் |
பலன்கள் | பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம் |
தமிழ் மாதம் | *** |
உணவு | *** |
பருவம் | *** |
கிழமை | செவ்வாய் |
தேதிகள் | 9, 18, 27 |
ஸ்வரம் | ரி |
குறியீடு | |
ஜோதி | அரசர் |
அதிகாரம் | படைத் தலைமை |
பூதாதிபத்யம் | தீ |
காராகாதிபத்யம் | உடன் பிறந்தார் |
பாஷைகள் | மந்திர சாஸ்திரம் |
கோத்திரம் | பரத்வாஜ் கோத்திரம் |
ராகங்கள் | ஷண்முகப்ரியா |
பிறப்பு
செவ்வாயின் பிறப்பு பற்றி வெவ் வேறு கருத்துக்கள் நிலவுகிறது.
கதை 1
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்.
என்ற பாடல் - பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன்; மின்னலைப் போன்ற ஒளியினன்; குமாரன்; சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனும் செவ்வாயைப் பணிகிறேன், என்று விளக்குகிறது.
கதை 2
அந்தகாசூரன் எனும் அசுரன் சிவனிடம் வரத்தைப் பெற்றான். அவனுடைய ரத்தத் துளிகள் கீழே விழுந்தால் ஒவ்வொன்றும் ஒரு அசுரனாக ஆகும் என்பது அவன் பெற்ற வரமாகும். மரணமற்ற இந்த வரத்தைப் பெற்ற அந்தகாசூரன், அவந்திகா நகரை நாசம் செய்யத் துவங்கினான். அவனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை காப்பாற்றுமாறு சிவனை வேண்டினர். அவர்களைக் காப்பாற்ற சிவனே அந்தாசூரனுடன் போராடினார். கடுமையான யுத்தம் நடந்தது. போரில் சிவனிற்கு வேர்வை பெருக்கெடுத்தது.
ருத்ரனின் வெப்பமான வேர்வைத் துளிகள் தரையில் விழுந்ததும் உஜ்ஜைன் இரண்டாகப் பிளந்தது. அப்பொழுது செவ்வாய் கிரகம் பிறந்தது. அந்தகாசூரனை சிவன் கொன்றார். அப்பொழுது அந்தகாசூரனிடம் இருந்து வெளியேறிய ரத்தத்தை புதன் கிரகம் தன்னுள் கிரகித்துக் கொண்டது. இதனால்தான் செவ்வாய் கிரகம் சிவந்தே காணப்படுவதாகக் கூறப்படுகிறது என்று ஸ்கந்த புராணத்தில் அவந்திகா கண்டம் பகர்கிறது.
கதை 3
மச்சபுராணத்தில் செவ்வாயின் வரலாறு வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. தட்சன் நடத்திய யாகத்தை அழிக்க சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பினார். யாகத்தை அழித்த வீரபத்திரர் ஆவேசம் தணியாமல் இங்கும் அங்கும் அலைந்தார். அவரைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சாந்தமாகும்படி வேண்டினர். வீரபத்திரரும் தன் வடிவை மாற்றிக் கொண்டு சாந்தமானார். அவரே செவ்வாய் என்று கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் நவக்கிரகங்களுள், மூன்றாவது இடத்தைப் பெறுபவன். செவ்வாய் தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது.
மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு, வெட்டுக்காயம், தீ காயம், எதிரிகள், பேராசை, அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது நல்லதல்ல. 2,4,7,8,12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல. இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும்.
முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி. பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு. அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை.
லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.
சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய்.
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம். வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய்.
நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங்கள் உடல் திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும் ரியல் எஸ்டேட் ,பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை.
செவ்வாய்க்கு உண்டான எண்கள், கிழமை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவரது ஆதிக்கம் பெற்று விளங்குவார்கள். லக்னம் அல்லது ராசியில் செவ்வாய் இருப்பது யோகம் தரும்.
பிறந்த லக்னமும் செவ்வாய் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி | தலைமை பதவி, அதிகாரம், ஆட்சிபீடம் |
ரிஷப லக்னம்/ராசி | மனைவி வழியில், கூட்டுத் தொழில் மூலம் யோகம் |
கடக லக்னம்/ராசி | தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு |
சிம்ம லக்னம்/ராசி | நிலபுலன்கள், தந்தை வழியில், பூர்வீக சொத்து மூலம், கல்வி செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம் |
துலா லக்னம்/ராசி | சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம் |
விருச்சிக லக்னம்/ராசி | உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம் |
தனுசு லக்னம்/ராசி | பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம். திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம் |
மகர லக்னம்/ராசி | தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நிலபுலன்கள், கல்வி செல்வத்தால் யோகம் |
மீன லக்னம்/ராசி | பூர்வீக சொத்துகள், தந்தை வழியில், சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம் |
மற்ற லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு | செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். |
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சம், 6, 8, 12 ஆகியஇடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல். உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும்,பெற்றோரிடம் பாசமின்மை,கண் நோய்,
தலையில் காயம்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை , சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம்,தற்புகழ்ச்சி முதலியன. செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும்.
செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும். செவ்வாய் 2ல் இருந்தால் தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம் பொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.தாராளமனசு ,ஊதாரி செலவு ,கபடமற்ற வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன
செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார், சகோதர வகையில் பிரச்சனை இருக்கும். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.
செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை, மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து , கல்வியில் மந்தம் ,உறவினர் சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு ஆனாலும் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன. தாய் வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.
செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்திர பிரச்சனை கர்பம் கலைதல் தத்து புத்திரம் இருக்கும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.
செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் இரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை ஏற்படும். எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.
செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால்மனைவிகளால் பிரச்சனை ஏற்படும் .வாழ்க்கைத் துணை ,திருமணம் , மணவாழ்வு ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படும்.குறுக்கு புத்தி,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் முதலியன. 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும்.
செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருந்தால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும். பாலின உறுப்புகளில் பிரச்சனை ஏற்படு்ம் .ஆயுள் குறைபாடு, மாங்கல்யம் குறைபாடு,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்,உறவினர்களிடம் வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய் முதலியன இருக்கும்.
செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருந்தால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.
செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்தால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருந்தால் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.
செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருந்தால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும். பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை, மனைவி இழப்பு ,சுய நலம், உஷ்ணநோய் , வெறுப்புணர்ச்சி , பணக்கஷ்டம் ,கொடூரகுணம், வீண் செலவுகள்,அறுவை சிகிச்சை, இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன இருக்கும்.
தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள். செவ்வாய் தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும் என்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது.
ஒன்பது கிரகங்களில் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டுமே. ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம். நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். உதாரணத்திற்கு, செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதல் வைத்தால் காரியம் நிச்சயம் நடந்தேறும். செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும்.அங்காரகன் (செவ்வாய்) தோஷம் நிவர்த்தி அடைய கீழே உள்ள மந்திரத்தை ஜபிக்க தோஷம் நிவர்தியடையும்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் ஓம் லோஹிதாங்காய வித்மஹே பூமிபுத்ராய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
செவ்வாய்க்கு கோயில் : தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது வைத்தீஸ்வரன் கோவில. வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார். நமது மனை மங்களம் சிறக்க செவ்வாயின் அருள் வேண்டும். வைத்தீஸ்வரன் கோவில்
திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பதுதிண்ணம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும்.
இத்தலத்திற்கு புள்(ஜடாயு). இருக்கு(ரிக்வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது எனவும், சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும் , அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும், வினைதீர்த்தான் கோயில் எனவும, தையல்நாயகி கோயில் எனவும வைத்தீஸ்வரன்கோயில் எனவும பல பெயர்களும் உண்டு.
கோயில் அமைப்பு: நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய். எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.
தீர்த்தம்: கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது.
இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று. சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர். இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள.
மூர்த்திகள்: சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.
தலப்பெருமை: முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
சடாயு குண்டம்: சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.
திருச்சாந்துருண்டை: இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.
தல விருட்சம்: கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.
திருவிழாக்கள் : நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார். மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னிலையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி.
அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு. ஆண்டுதோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பயணம் கீரணிப்பட்டி முத்து மாரியம்மன் திருவிழா முடிந்து தொடர்ந்து வரும் புதன்கிழமை இரவு 12 மணிக்கு மேல் அதாவது வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. இப்பயணம் கீரணிப்பட்டித் திருவிழா முடிந்தபின் நடைபெறுவதற்குக் காரணம் நகரத்தார்கள் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து பாண்டிய நாடு வரும்போது கீரணி அம்மனையும் தங்களோடு கொண்டு வந்தார்கள் என்பது வரலாறு. இதனைக் கீழ்க்காணும் கும்மிப்பாடல் வழி அறியலாம்.
“காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததொரு
காவலன் மாறனழைத்து வர பூவிரிப்
புலன்மிகும் பாண்டிய நாட்டினிற்
பொங்கத்துடன் வந்தமர்ந்தானே”
திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பதிகம் ஒன்று பாடியுள்ளார். திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். தருமையாதீனம் 10வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி அருளிய செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பாவும் குமரகுருபரர் அருளிய பிள்ளைத் தமிழும் இத்தலம் பற்றிய அழகு தமிழ்ப் பாடல்கள். “தையல்நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான்.
பரிகாரம்
எல்லா முருகன் கோயில்களும் செவ்வாய்க்கு உரிய தலங்கள் தான். பழநியில் செவ்வாயாகவே தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில்முக்கிய பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளுள் திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலம். சென்னை அடுத்த பூந்தமல்லியில் வைத்தீஸ்வரன் சமேத தையல்நாயகி கோயில் உள்ளது. இது செவ்வாய் பரிகார ஸ்தலமாகும்.
‘ஓம் அங்காரகாய வித்மஹே
பூமிபாலாய தீமஹி
தந்நோ குஜப் பிரசோதயாத்’
என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம் சம் சிவய அங்காரக தேவாய நம’
என 108 முறை சொல்லலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம்,திருப்புகழ் மற்றும் முருகன் துதிப்பாடல்கள் படிக்கலாம். அங்காரகன் எனப்படும் செவ்வாயை வணங்கி வழிபட்டால் கடன் தொல்லை, வறுமை, தோல் சம்பந்தமான நோய்கள் போன்றவைநீங்கி சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.
மங்கள்நாத் கோயில்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகர் என்றழைக்கப்படும் உஜ்ஜைனில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, செவ்வாய் கிரகத்தின் தாய் உஜ்ஜைன். தங்களுடைய ஜாதகத்தில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் மற்ற சாதகமற்ற கிரகங்களை இங்கு வழிபட்டு அமைதிபடுத்த வருகின்றனர். நமது நாட்டில் புதனிற்காக பல கோயில்கள் இருந்தாலும், உஜ்ஜைன் அவருடைய பிறந்த இடம் என்பதால் இங்கு அவரை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்தக் கோயில் பல நூற்றாண்டுக்கால பழமை வாய்ந்தது. சிந்தியா அரச குடும்பம் இக்கோயிலை புதுப்பித்தது. மகாகாளீஸ்வரரின் நகரம் என்றும் உஜ்ஜைன் அழைக்கப்படுகிறது. எனவே இங்கு செவ்வாயும் சிவனின் உருவத்திலேயே வழிபடப்படுகிறார்.
காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித் மஹே
விக்ந ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம; ப்ர சோதயாத்
9,18,27 ஆகியவை 9ம் எண்களாகும். இவை செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டியது பவளமாகும்.
செவ்வாய் தோஷம்
நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தெந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய் தான்.
ஒரு ஜாதகத்திலே செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்த மாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.
உதாரணமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும். காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம் வேறு நபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில் இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.
செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது.
செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? :
ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 1,2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால் செவ்வாய்தோஷமாகும். ஆணின் இலக்கனத்திற்கு 2,7ல் செவ்வாய் இருக்கும்போது பெண்ணுக்கு 4,12 ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் அல்லது செவ்வாய் தோஷ நிவர்த்தி:
செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் 2மிடமாகி அது மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷ மில்லை.
செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 8மிடமாகி இது தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்ம் கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷமில்லை
குருவும் செவ்வாய்ம் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
சந்திரனும் செவ்வாய்யும் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,தோஷம் கிடையாது.
இப்படியெல்லாம் பார்க்கையில் 5 சதவீத மக்களுக்குதான் செவ்வாய்தோஷம் இருக்கும் என தெரிகிறது
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
மனதாலும் உடலாலும் முற்பிறவிகளில் நாம் செய்யக்கூடிய பாவ செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனை பாதிக்க கூடிய வகையில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு பின்பு பாப பலனாக வந்து சேர்கிறது. சுயநலமின்றி சமுதாய
நலனுக்காக நாம் செய்யும் சில செயல்கள் கூட தோஷங்களை ஏற்படுத்தலாம்.
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில் மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல், தகாத உறவு, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை, முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,இல்லற வாழ்க்கையின் நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை, தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம் முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்.
பரிகார காலம்:
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள்
செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
செவ்வாய் தோஷ பரிகாரங்கள்:
வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து
தந்து விட வேண்டும்
செவ்வாய் தோஷ நிவர்த்திகள்:
துவரை தானம்: உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
பெயர் | செவ்வாய் (Mars) |
ஜாதி | சத்திரிய ஜாதி |
வேறு பெயர்கள் | செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பௌமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், ஆரல், உதிரன், அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் |