அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
முதல் பாதத்தை அதன் அதிபதியான சூரியன், இவர்களோடு சேர்ந்து ஆட்சி செய்கிறார். மூவரும் தன்னளவில் அரசர்கள்; ஒன்றையொன்று விஞ்சி செயல்படுவார்கள். ஆறு வயது வரை செவ்வாய் தசை நடக்கும்போது உடல் பலம் அதிகம் இருக்கும். இந்த தசை சாதாரணமாக செல்லும். ஆனால், 7 வயதிலிருந்து 24 வரை ராகு தசை நடக்கும்போதுதான் குடும்பச் சூழ்நிலையால் படிப்பில் கவனம் சிதறும். ராகு பாதி கெடுக்கும்; பாதி கொடுக்கும். 16 வயது வரை கொஞ்சம் சிரமப்படுத்தி அதற்குப் பிறகு கொடுக்கும்.
அதாவது பத்தாம் வகுப்பில் கைவிட்ட ராகு, பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வைப்பார். 24 வயதுக்குள் மற்ற எல்லோரையும் விட முதிர்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். கல்லூரியில் சொல்லி வைத்தாற்போல படிப்பை தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். பொலிட்டிகல் சயின்ஸ், எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., அஸ்ட்ரானமி, பயோ மெடிக்கல் ஜெனிடிக்ஸ், மைக்ரோ பயாலஜி போன்ற படிப்புகள் நல்ல எதிர்காலத்தை தரும். மருத்துவத்தில் தலை, மயக்க மருந்தியல் படிப்புகளில் சிறப்பான எதிர்காலம் உண்டு.
இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களை செவ்வாய், சனி, புதன் கிரகங்கள் ஆள்வதால், சிறிய வயதில் ஏமாளியாக இருந்து பிறகு சமாளித்துக் கொள்வார்கள். 5 வயதிலிருந்து 22 வரை ராகு தசை நடைபெறும்போது வகுப்பில் இவர்களுக்கென்று தனி அடையாளம் இருக்கும். கல்லூரி முடியும் வரை படிப்பு விஷயத்தில் எந்த தொந்தரவும் இருக்காது. புதன் ஆதிக்கம் மிகுந்திருப்பதால், மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவார்கள். 23 வயதிலிருந்து 38 வரை குரு தசை நடைபெறும். ஏழாம் வகுப்பில் படிப்பு கொஞ்சம் தடைபடும்; ஆனால், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.
கிரிமினாலஜி, சைபர் கிரைம் சம்பந்தமாக படிப்பது, இவர்களுக்குள் இருக்கும் சி.ஐ.டியை வெளிக்கொண்டு வரும். ரீடெயில் மார்க்கெட்டிங், அக்கவுன்டன்ஸி, விஸ்காம், பேங்கிங் சம்பந்தமான படிப்புகளும் நல்ல எதிர்காலம் தரும். மருத்துவம் எனில் நரம்பு, வயிறு, கண், செக்ஸ் சார்ந்த மருத்துவம் பெரிய அளவில் புகழ் தரும். எலெக்ட்ரானிக்ஸை விட எலெக்ட்ரிகல் நல்லது. அவிட்டம் மூன்றாம் பாதத்தின் அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இரண்டரை வருடம் வரை செவ்வாய் தசை நடைபெறும். 3 வயது முதல் 20 வரை ராகு தசை இருப்பதால் தாய், தந்தையின் வளர்ச்சி சட்டென்று மேலேறும். ராகு தசையின் ஆரம்பத்தில் ஏனோதானோ என்று இருந்தாலும், பிற்பகுதியில் நன்றாகப் படிப்பார்கள்.
கல்லூரியில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைப்பார்கள். எட்டாம் வகுப்பில் மட்டும் படிப்பில் கொஞ்சம் கவனம் சிதறும். 20 வயதில் ஏராளமான திறமைகளோடு வலம் வருவார்கள். தத்துவம், தாவரவியல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், விஸ்காம், ஆர்க்கிடெக்ட், ஃபேஷன் டெக்னாலஜி, சி.ஏ., எக்னாமிக்ஸ், டி.எப்.டி. போன்ற படிப்புகள் எளிதாக வெற்றி பெறச் செய்யும். சிறந்த சர்க்கரை நோய் நிபுணராகவும், பிளாஸ்டிக் சர்ஜரி, கால்நடை மருத்துவராகவும் வர வாய்ப்புள்ளது.
அவிட்டம் 4ம் பாதத்தின் அதிபதி செவ்வாய். ராசியாதிபதி சனி. நட்சத்திர அதிபதியும் செவ்வாயே வருகிறது. செவ்வாய் இரண்டு மடங்கு சக்தியோடு இருப்பார். ஒரு வயது வரை செவ்வாய் தசை இருக்கும். 2 வயதிலிருந்து 19 வரை ராகு தசை இருக்கும். 4 வயதில் பாலாரிஷ்டம் என்று சொல்வதுபோல் உடம்பு படுத்தும். பொதுவாக ராகுதசை நன்றாகத்தான் இருக்கும். ஓட்டப்பந்தயம், கால்பந்து போன்றவற்றில் மாநில, தேசிய அளவில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமுண்டு. பள்ளிப் பருவத்திலேயே குழு அமைத்து எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பார்கள்.
பள்ளிப் படிப்பை சிலர் கொஞ்சம் தடையோடுதான் முடிப்பார்கள். 20 வயதிலிருந்து 35 வரை குரு தசை நடைபெறும். இரட்டைச் சக்தியோடு விளங்கும் செவ்வாய்க்கு குரு எப்போதும் நண்பர்தான். பள்ளிகளில் கொஞ்சம் தளரவிட்ட படிப்பை கல்லூரியில் பிடித்து விடுவார்கள். பொருளாதாரம், அக்கவுண்டன்ஸி, மைக்ரோ பயாலஜி, கெமிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிகல் போன்றவை வளம் தரும். மருத்துவத்துறையில் ஆர்த்தோ, லேப் டெக்னாலஜி, பிசியோதெரபியை மறக்க வேண்டாம். அதற்கு செவ்வாய் நிச்சயம் உதவுவார்.
இந்த நட்சத்திரக்காரர்கள் சற்று உக்கிரமான பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்படிப்பட்ட தலமான சிங்கப் பெருமாள் கோயிலில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசித்தல் நல்லது. இங்கு நரசிம்மருக்கு ஈசனைப் போன்று நெற்றிக் கண் உண்டு. இவரை தரிசிக்க, கல்வித் திறன் நிச்சயம் கூடும். இக்கோயில் சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிற்கு அருகேயே உள்ளது.
Similar Posts :
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம், See Also:
அவிட்டம்