அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
நட்சத்திரத்தை செவ்வாயும், சனியும் சேர்ந்து ஆட்சி செய்கின்றனர். இது முரண்பாட்டை உருவாக்கும் அமைப்பாகும். இதனால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்கிய வண்ணம் இருக்கும். மனோகாரகனான சந்திரன் நட்சத்திரத்தில் நீச்சமாகிறான். இதனால் ஒரு முடிவை எடுத்தபிறகு, ‘இது தவறா... சரியா...’ என்று யோசித்தபடி இருப்பார்கள். அடுத்தவர் விஷயங்களை எளிதில் தீர்த்தாலும் தன் விஷயத்தில் தடுமாற்றம் இருக்கும்.
முதல் பாதத்தில் பிறந்தவர்களை சூரியன் ஆள்கிறார். நட்சத்திர அதிபதியாக சனி வருவதாலும், அவர் சூரியனுக்குக் கொஞ்சம் பகைவராக இருப்பதாலும் 17 வயது வரை கடினமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும். உடல்நலக் கோளாறுகளும் வறுத்தெடுக்கும். பத்தாம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், நினைத்த மதிப்பெண்கள் எடுக்க முடியாது. கிட்டத்தட்ட பிளஸ் 2 வரை கடனே என்றுதான் பள்ளி செல்வார்கள். 18 வயதிலிருந்து 34 வரை புதன் தசை நடைபெறும். இந்த தசையில்தான் உருப்படியாகப் படிப்பார்கள். சனி தசையைவிட இது நன்றாக இருக்கும். அலைய வைத்து ஆதாயம் தரும் தசையாக இருக்கும். யாருமே எளிதில் விரும்பாத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வெற்றி பெறுவார்கள். ஆங்கில இலக்கியம், பொலிடிகல் சயின்ஸ், வரலாறு என தேர்ந்தெடுத்தால், பேராசிரியர்களாக அமரும் வாய்ப்புண்டு. ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், மருத்துவத்தில் கண், கால், தலை அறுவை சிகிச்சை நிபுணராக வாய்ப்புண்டு. எம்.பி.ஏ. படிக்கும்போது ஹெச்.ஆர். துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது நல்லது.
இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் களை புதன் ஆள்கிறார். 13 வயது வரை சனி தசை இருக்கும். பள்ளியில் நன்றாகப் படிப்பார்கள். ஆசிரியர் போர்டில் கணக்கை எழுதும்போதே விடையை நோட்டில் போடுவார்கள். 14 வயதிலிருந்து 30 வரை புதன் தசை நடக்கும்போது பெற்றோருக்கு கண்டம் வரும். எதையும் சிந்திக்காமல், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கௌரவமான மதிப்பெண்கள் பெறலாம். இவர்களில் பலர் வேலைக்குப் போய்க்கொண்டே படிப்பவராக இருப்பார்கள். திடீரென்று ஒரு நட்பு உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும். படிப்பைவிட இன்டோர் கேம்ஸில் ஈடுபாடு காட்டுவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சி.ஏ., ஐ.சி.டபிள்யு., ஏ.சி.எஸ் எனப் போகலாம். பி.இ கெமிக்கல், புள்ளியியல் படிப்பில் நிபுணத்துவம் என்று சிறப்படைவார்கள். மரைன் எஞ்சினியரிங் படிப்பிற்கு முயற்சிக்கலாம்.
மூன்றாம் பாதத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். கிட்டத்தட்ட 8 வயது வரை சனி தசை நடைபெறும். சிறிய வயதிலிருந்தே எல்லோரையும் கவர்வார்கள். 3 வயது முதல் 5 வரை வீசிங், ஈஸ்னோபீலியா தொந்தரவுகள் வந்து நீங்கும். படிப்பில் நன்றாக இருந்தாலும் கலைத் துறையில்தான் ஆர்வம் செலுத்துவார்கள். 9 வயதிலிருந்து 25 வரை புதன் தசை நன்றாக இருக்கும். எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவையும் கற்றுக் கொள்வார்கள். நிறையப் பேர் மெரிட்டில் பாஸ் செய்வார்கள். சகல கலைகளையும் கற்றுக் கொள்ளத் துடிப்பார்கள். ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, பிறகு தொழில் சார்ந்த கல்வியைக் கற்பார்கள். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம் போன்ற படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை. மேலும், சமஸ்கிருத படிப்பில் ஆவல் காட்டுவார்கள். ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்று படித்தால் நல்லது.
நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவார்கள். கோபக்காரர்களாக இருப்பார்கள். 4 வயது வரை சனி தசை நடைபெறும். 5 வயதிலிருந்து 21 வரை புதன் தசை நடைபெறும்போது அடிப்பது, அடிவாங்குவது என்று திரிந்து கொண்டிருப்பார்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்களிடம் நண்பர்கள் போல பெற்றோர் பழகிப் படிக்கச் சொல்ல வேண்டும். இல்லையெனில் கேட்க மாட்டார்கள். கொஞ்சம் எமோஷனலாக அலைவார்கள். காட்டாற்று வெள்ளம் போல சக்தியைக் கொண்டிருப்பார்கள். அதனால் எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதை உறுதிப்படுத்திவிட்டு படிக்க வையுங்கள். 22 வயதிலிருந்து 28 வரை நடைபெறும் கேது தசையில் 24 வயதில்தான் கொஞ்சம் விழிப்புணர்வு வரும். பள்ளியில் சாதாரணமாகப் படித்தாலும், கல்லூரி என்று வரும்போது கெமிஸ்ட்ரி, புவியியல், மண்ணியல், விலங்கியல் போன்ற படிப்புகள் சாதகமாக இருக்கும். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், ஐ.டி. என்று படித்தால் வெற்றி பெறுவார்கள். பெரும்பாலும் ராணுவம் அல்லது காவல்துறை வேலைக்குச் செல்வார்கள்.
ராசியாதிபதியாக செவ்வாயும், கல்வியைத் தருபவராக குருவும் வருவதால், குருவும் செவ்வாயும் சேர்ந்த அம்சமான ஐயன் சுவாமிமலை முருகனை தரிசிப்பது நல்லது. தந்தைக்கு உபதேசம் செய்த தலமான, கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை தரிசிக்க, இவர்களின் கல்வித் திறன் உயரும்.
Similar Posts :
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
அனுஷம்