விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
ஞான சொரூபனான குருவின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரங்களிலேயே விசாகத்தார்தான் கொஞ்சம் அப்பாவியாக இருப்பார்கள். ‘‘நல்லாதான் படிச்சாரு. ஆனா, அதுமட்டும் போதுமா. சாமர்த்தியமா வேலை தேட வேண்டாமா. இவன் கூட படிச்சு கம்மியான மார்க் எடுத்தவனெல்லாம் இன்னிக்கு எங்கயோ இருக்கானே’’ என்று சொல்லும்படியாக இருக்கும். விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், நான்காம் பாதம் மட்டும் விருச்சிக ராசியில் இடம் பெறும். முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதியாக குருவும், ராசியாதிபதியாக சுக்கிரனும், முதல் பாதத்தின் அதிபதியாக செவ்வாயும் வருகிறார்கள். ஏறக்குறைய 14 வயது வரை குரு தசை இருக்கும். குருவும் செவ்வாயும் நண்பர்களாக இருப்பதால் பரபரப்பாக இருப்பார்கள். நன்றாகவும் படிப்பார்கள். எட்டாம் வகுப்பு வரை நன்றாகப் போகும் பள்ளி வாழ்க்கை, அதன்பின் சரிவை சந்திக்கும். ஏனெனில், 15 வயதிலிருந்து 32 வரை சனி தசை நடக்கும். இந்த ராசிக்கே சனி யோககாரகன்தான். அப்படியிருந்தும் பாதகாதிபதியாக முதல் பாதத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், திடீரென்று படிப்பில் கவனம் சிதறும். இந்த சமயங்களில் சிவாலய பிரதோஷ வழிபாடு பலன் தரும். பள்ளியிலிருந்தே காவல்துறை, ராணுவம், விமானப்படை என்று பல்வேறு விதமான துறைகளை சுட்டிக் காட்டி ஈடுபாடு கொள்ளச் செய்யுங்கள். இதுதவிர எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், பி.பார்ம் போன்ற படிப்புகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஜெனிடிக் எஞ்சினியரிங் படிப்புகளை ஆர்வத்தோடு படிப்பார்கள். மருத்துவத்தில் ரேடியோலஜி, ஆர்த்தோ படிக்கலாம்.
இரண்டாம் பாதத்தை சுக்கிரன் ஆள்கிறார். இரண்டு சுக்கிர சக்திகள் வருவதால், படிக்கிறார் களோ இல்லை யோ... எல்லோரையும் கவர்ந்து நல்ல பெயர் வாங்குவார்கள். கூடவே நட்சத்திர அதிபதியாக குருவும் வருவதால், சுற்று வட்டாரம் அவ்வப்போது அடக்கி வைக்கும். ஏறக்குறைய 10 வருடம் குரு தசை நடக்கும். குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை இருந்தால் உடனடியாக சரி செய்து விடவேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும் அதற்குப்பிறகு வேறு பள்ளியிலும் படிக்க நேரும். 11 வயதிலிருந்து 29 வரை சனி தசை. சனி இவர்கள் ராசிக்கு 4, 5க்கு உரியவராக வருவதாலும், சுக்கிரனுக்கு நட்பாக இருப்பதாலும் முன்பை விட நன்றாகவே படிப்பார்கள். பள்ளியில் நடைபெறும் எல்லா போட்டிகளுக்கும் கைதூக்குவார்கள். என்னதான் சனி இவர்களுக்கு நல்லது செய்தாலும் வாலிபத்தில் பாதை மாற்றி படிப்பை கெடுப்பார், எச்சரிக்கை! பத்தாம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் வாங்கிவிட்டு பிளஸ் 2வில் கோட்டை விட்டுவிடக் கூடாது. விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் போன்றவை சிறந்தது. இசை படித்தால் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவத்தில் சரும நோய், புற்றுநோய் மருத்துவர் ஆகும் வாய்ப்பு உண்டு.
மூன்றாம் பாதத்தின் அதிபதியாக புதன் வருகிறார். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் புலம்பித் தள்ளுவார்கள். ‘‘ராத்திரியும் பகலுமா படிச்சாக் கூட மார்க் எழுவதை தாண்ட மாட்டேங்குது’’ என்பார்கள். மறதி அதிகமாக இருக்கும். முதல் எட்டு வருடங்கள் குரு தசையில் மயக்கம் வந்து நீங்கும். பயப்பட வேண்டாம். 8 வயதிலிருந்து 20 வரை சனி தசை நடக்கும்போது உடம்பு தேறும். கிட்டத்தட்ட நான்காம் வகுப்பிலிருந்து கல்வியின் பக்கம் கொஞ்சம் திரும்புவார்கள். படிப்பைவிட கவிதையில் ஈர்ப்பு இருக்கும். எல்லா சப்ஜெக்டிலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க மாட்டார்கள். ஏதேனும் ஒன்றிரண்டில் பள்ளியின் முதல் மாணவராக வருவார்கள். புள்ளியியல், சட்டம், அக்கவுண்ட்ஸ், பொலிடிகல் சயின்ஸ், சி.ஏ. போன்ற படிப்புகள் சிறந்தது. ஆர்க்கிடெக்ட், கம்ப்யூட்டர் அனிமேஷன், கேட்டரிங் டெக்னாலஜியும் படிக்கலாம்.
துலாம் ராசியில் இடம்பெறும் விசாகத்தின் மற்ற மூன்று பாதங்களைக் காட்டிலும் விருச்சி கத்தில் வரும் நான்காம் பாதம் வேறானது. இந்த பாதத்தில் பிறந்த குழந்தையின் 8வது மாதத்திலிருந்து 3 வயது முடியும் வரை உடல்நலக் கோளாறுகள் வந்து நீங்கும். அதன்பிறகு 4 வயதிலிருந்து 22 வரை நடைபெறும் சனி தசையில் நரம்புக் கோளாறு, ஒவ்வாமை தொந்தரவுகள் இருக்கும். ஆனால், படிப்பில் அசத்துவார்கள். ஆசிரியரையே குறுக்குக் கேள்வி கேட்டு திகைக்க வைப்பார்கள். கிட்டத்தட்ட 4 வயதிலிருந்து 13 வரை சிலர் விடுதியில் தங்கிப் படிக்க நேரும். அதன்பின் 22 வயது வரை எல்லா விஷயங்களிலும் ஆர்வம் செலுத்துவார்கள். முதல் பகுதியைவிட இரண்டாம் பகுதிதான் சிறப்பாகத் தொடரும். மரைன் எஞ்சினியரிங், ஐ.டி., மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்ற துறைகளில் நிச்சயம் ஏற்றம் உண்டு. ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. படிப்பில் பைனான்ஸ் போன்றவை ஏற்றது. தமிழ் இலக்கியம் படித்தால், சமூக அங்கீகாரம் கிடைக்கும்.
விசாகம் குருவின் நட்சத்திரமாக வருவதாலும், செவ்வாயும், புதனும் கொஞ்சம் திணறடிப்பதாக இருப்பதாலும் ஞானியரின் ஜீவ சமாதியை வணங்கினால் கல்வி சிறக்கும். சென்னையை அடுத்த திருவொற்றியூரின் கடலோரத்தில் அருள்பரப்பியிருக்கும் பட்டினத்தாரின் ஜீவ சமாதியை தரிசித்தால் கல்வியிலும் வேலையிலும் ஜெயிக்கலாம்.
Similar Posts :
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
விசாகம்