தனுசு ராசியின் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே ஜாலியாக இருக்க விரும்புவார்கள். அதேசமயம் ‘பூராடம் போராடும்’ என்ற கூற்றுக்கு ஏற்ப, எப்பாடுபட்டேனும் நினைத்ததைப் படித்து விடுவார்கள். ‘‘எல்லாரும் படிச்சுத்தான் பெரிய ஆளா ஆகுறாங்களா’’ என்பதுதான் இவர்கள் எல்லோரிடமும் கேட்கும் அடிப்படையான கேள்வி. எது பிடிக்கறதோ, அதில் தயக்கமில்லாமல் இறங்குவார்கள்.
இவர்களின் ராசியாதிபதி குரு. பூராட நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். முதல் பாதத்தின் அதிபதியாக சூரியன் வருகிறார். பூராடத்திற்கு சுக்கிர தசையில் வாழ்க்கை துவங்கும். பிறந்ததிலிருந்து 18 வருடங்கள் சுக்கிர தசை நடக்கும். இதை துடுக்குச் சுக்கிரன் என்று சொல்லலாம். பாதத்தின் அதிபதியான சூரியன் யோகாதிபதியாகவும் பாக்யாதிபதியாகவும் வருவதால், இவர்கள் பிறக்கும்போதே தந்தையின் வெற்றிக் கணக்கு துவங்கிவிடும். பொதுவாகவே சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் கல்வியை விட கலைக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் சமூகத்தில் எந்த படிப்பிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதைத்தான் படிப்பார்கள். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கவனச் சிதறல் அதிகம் இருக்கும். 19 வயதிலிருந்து 24 வரை பாதத்தின் அதிபதியான சூரியனின் தசையே நடைபெறும். சுக்கிர தசையை விடவும் இது நன்றாக இருக்கும். கல்லூரி வாழ்க்கை மற்றும் வேலையைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை. எதில் ஈடுபட்டாலும் வெற்றிதான். அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகள் நல்லது. மருத்துவத் துறையில் கண், மூளை, முகம் சம்பந்தமான துறைகள் சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., மற்றும் சோஷியாலஜி துறை ஏற்றது. எஞ்சினியரிங்கில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.
இரண்டாம் பாதத்தை அதன் அதிபதியான கன்னி புதனும், குருவும், சுக்கிரனும் சேர்ந்தே ஆள்வர். எல்லாம் தெரிந்து வைத்திருந்தும் மார்க் மட்டும் திருப்தியாக வராது. ‘‘இவங்க கேட்கற சின்ன கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்பார்கள் ஆசிரியர்கள். 14 வயது வரை சுக்கிர தசை இருப்பதால், புதன் அந்த வயதிலேயே நுணுக்கமாக யோசிக்க வைப்பார். தூக்கத்தில் அதிகமாகப் பேசுவது, நடப்பது, சிறுநீர்த் தொந்தரவுகள் ஐந்து வரை இருக்கும். 15 வயதிலிருந்து 20 வரை நடைபெறும் சூரிய தசையில் சமூகத்தோடு எதிலும் ஒட்டாமல் இருப்பார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியை மாற்றும் சூழல் வந்துபோகும். கொஞ்சம் குழப்பமான காலகட்டமாக அது அமையும். சொந்த ஜாதகத்தில் புதன் அதீத பலத்தோடு இருந்தால் கணக்கில் புலியாக வருவார்கள். 21 வயதிலிருந்து 30 வரை சந்திர தசை நடைபெறும் காலகட்டத்தில்தான் பணம் குறித்தும், வாழ்க்கையை குறித்தும் யோசிக்கவே தொடங்குவார்கள். புத்திசாலித்தனத்தை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவார்கள். சைக்காலஜி, தத்துவம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் படிப்புகள் ஏற்றம் தரும். அதேபோல கட்டிடத் திட்ட வரைபடம், ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்ற படிப்புகள் எதிர்காலத்தை வளப்படுத்தும். இவர்களில் நிறையப் பேர் சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. என்று படிப்பார்கள்.
மூன்றாம் பாதத்தை துலாச் சுக்கிரன் ஆட்சி செய்கிறார். கிட்டத்தட்ட 8 வருடம் சுக்கிர தசை நடைபெறும்போது சுகமாக வலம் வருவார்கள். 9 வயதிலிருந்து 14 வரை நடைபெறும் சூரிய தசையில் தலைவலி வந்து நீங்கும். மூன்றாம் பாதத்தில் பிறந்த இவர்கள் சுக்கிரனின் இரட்டைச் சக்தியோடு இருப்பதால் குடும்பத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். ஏதேனும் ஒரு கலையை பயின்று விடுவார்கள். பின்னாளில் கலைத்துறையில் சாதிக்கும் வாய்ப்புகள் அதிகமுண்டு. 15 வயதிலிருந்து 24 வரை சந்திர தசை நடக்கும்போது, எப்படியேனும் கலைத்துறையில் அங்கீகாரம் பெற வேண்டுமென்று அலைவீர்கள். 25 வயதிலிருந்து 31 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது கூடுதல் அதிகாரம் வந்து சேரும். ஃபேஷன் டெக்னாலஜியை மறக்க வேண்டாம். விஸ்காம், டி.எஃப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். இசைப்பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பும் உண்டு. இந்து அறநிலையத்துறை சார்ந்த அரசு வேலையும் கிடைக்கும்.
நான்காம் பாத அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருவதால், முதல் நான்கு வருட சுக்கிர தசை சுகவீனங்களைத் தரும். ஆனால் 5 வயதிலிருந்து 10 வரையிலான சூரிய தசையில், பிறர் வியக்குமளவுக்கு புத்திக் கூர்மை அதிகரிக்கும். குருவும் செவ்வாயும் நண்பர்கள் என்பதால் எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும். 11 வயதிலிருந்து 20 வரையிலும் சந்திர தசை நடைபெறும்போது கொஞ்சம் சறுக்கும். ஆனால், பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. மேற்படிப்புக்கு போராடித்தான் சீட் வாங்க வேண்டியிருக்கும். சந்திரன் வலிமையாக இல்லாவிடில், இக்கட்டான தருணங்களில் மறதியைத் தருவார். சிறிய துரதிர்ஷ்டம் துரத்துவதாக எண்ணச் செய்வார். 21 வயதிலிருந்து 27 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது வாழ்க்கை அப்படியே மாறும். விட்டதையெல்லாம் பிடித்து விடுவார்கள். நிர்வாகம் சார்ந்த படிப்பை எடுத்தால் நிச்சயம் வெற்றிதான். எஞ்சினியரிங்கில் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் எடுத்துப் படிக்கலாம். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி படிப்புகள் நல்ல எதிர்காலம் தரும். நிர்வாகம் சார்ந்த இளங்கலை படிப்பு பெரிய பதவி வரை கொண்டு போய் நிறுத்தும்.
பூராடத்தில் பிறந்தவர்களுக்கு வாக்காதிபதி எனும் கல்விக்கு அதிபதியாக மகரச் சனி வருகிறது. எனவே பள்ளி கொண்ட பெருமாளை வழிபட்டாலே போதும்; கல்வியில் சிறக்கலாம். ஆதிதிருவரங்கம் தலத்தில், நின்று பார்த்தாலே ஒரே சமயத்தில் பார்க்க முடியாத அளவுக்கு நீளமான கோலத்தில் காட்சி தருகிறான் அரங்கன். இத்தலம், திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை வழியாக 32 கி.மீ தூரத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரிலிருந்து மணலூர்பேட்டை வழியாக 20 கி.மீ சென்றாலும் ஆதிதிருவரங்கத்தை அடையலாம்.