திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் இடம் பெறுகின்றன. திருவோணத்தின் அதிபதி சந்திரன். எனவே இவர்களுக்கு இளம் வயதிலிருந்தே அநாயாசமான கற்பனைத்திறன் இருக்கும். அடுக்கடுக்கான யோசனைகள் வந்து கொண்டே இருக்கும். ‘ஓணத்தில் பிறந்தவர் கோணத்தை ஆள்வார்’ என்கிற பழமொழி வேறு இருக்கிறது.
திருவோணத்தின் முதல் பாதத்தை மேஷச் செவ்வாய் ஆள்கிறார். ஏறக்குறைய 9 வயது வரை சந்திர தசை இருக்கும். சிறிய வயதிலேயே திறமைகள் வெளிப்படத் தொடங்கும். 10 வயதிலிருந்து 16 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது கொஞ்சம் எச்சரிக்கை தேவை. ராசிநாதனான சனிக்கு செவ்வாய் பகையாக வருவதால், பள்ளி மாற்றம், அலைச்சல் என வாழ்க்கை நகரும். இப்படி பல காரணங்களால் சரியாகப் படிக்காமல் இருப்பார்கள். ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில்தான் ஆர்வம் அதிகமிருக்கும். பத்தாம் வகுப்பில் மரியாதையான மதிப்பெண்கள் எடுப்பதே பெரிய விஷயம்.
17 வயதிலிருந்து 35 வயது வரை ராகு தசை நடைபெறும். பிளஸ் 2வில் அறிவியல் படித்து விட்டு, ‘‘என்னை பி.பி.ஏ. சேர்த்து விடுங்கள்’’ என்பார்கள். ஏதேனும் குறுகிய கால கோர்ஸ் படிப்பார்கள். அதுதான் அவர்களுக்கு உதவும்படியாக அமையும். ராகு தசையில் பல மொழிகளில் வல்லமை வரும். கெமிக்கல், எலெக்ட்ரிகல், விவசாயம், சிவில் என்று சேர்வது நல்லது. மருத்துவத்தில் எலும்பு, பல் சம்பந்தமான துறை கிடைத்தால் உடனே சேரலாம். இவர்களிடம் மிதமிஞ்சிய நிர்வாகத்திறன் இருப்பதால் மார்க்கெட்டிங் மேலாண்மை, செகரட்டரியல், வங்கி மேலாண்மை எனவும் முயற்சிக்கலாம்.
இரண்டாம் பாதத்தை ரிஷபச் சுக்கிரன் ஆள்கிறார். யானை பலத்தோடு இருப்பார்கள். பொதுவாகவே திடீர் அதிர்ஷ்டம் இருக்கும். ஏறக்குறைய 6 வயது வரை சந்திர தசை நடக்கும். 7 வயதிலிருந்து 13 வரை நடக்கும் செவ்வாய் தசையில் இவர்களின் அதிர்ஷ்டக்காற்று பெற்றோர் மீது வீசும். சிறிய வயதிலேயே ஓவியப் போட்டி, மாற்றுடைப் போட்டி, மேடை நாடகம் என்று ஈடுபடுவார்கள். சுக்கிரன் பாதத்தின் அதிபதியாக இருப்பதால், கஷ்டப்பட்டெல்லாம் படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். குறை சொல்ல முடியாத அளவுக்கு மதிப்பெண்கள் எடுப்பார்கள். இதற்கடுத்து வரும் ராகு தசையும் நன்மை தரக் கூடியதாகவே இருக்கும். பாதத்தின் அதிபதியான சுக்கிரன் பிரபல யோகாதிபதியாக வருவதால், எது நடந்தாலும் அது நல்லதில் முடியும்.
14 வயதிலிருந்து 31 வரை ராகு தசை நடைபெறும். சந்திரனுடைய நட்சத்திரத்தில் ராகு தசை வருகிறது. புத்தியில் ஆழமும், அகலமும் இருக்கும். ஆனால், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘எப்போது பள்ளி வாழ்க்கை முடியும்’ என்கிற அளவுக்கு பிரச்னைகளில் சிக்குவார்கள். புற்றுள்ள அம்மனை வேண்டினால் பிரச்னை கரையும். 12ம் வகுப்பில் பொறுப்பு வந்துவிடும். இவையெல்லாமே அவரவர் சொந்த ஜாதகத்தில் ராகுவின் நிலையை வைத்தும் நடக்கும். எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிகல், விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, பிரின்டிங் டெக்னாலஜி, சோஷியாலஜி, சைக்காலஜி போன்றவற்றில் நல்ல எதிர்காலம் உண்டு. மருத்துவத் துறையில் நியூராலஜிஸ்ட், முதுகுத் தண்டுவடம் சார்ந்த துறைகளில் வெகு எளிதாக நிபுணராகும் வாய்ப்பு உண்டு.
மூன்றாம் பாதத்தை மிதுன புதன் ஆள்வதால் புத்தியில் தீட்சண்யம் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட 4 வயது வரைதான் சந்திர தசை நடக்கும். 5 வயதிலிருந்து 11 வரை செவ்வாய் தசை இருப்பதால் தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். பிறரோடு ஒப்பிட்டு இவர்களைப் பேசக்கூடாது. ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டில்தான் கவனம் செலுத்துவார்கள். சிலர் அடிக்கடி பள்ளி மாறிக் கொண்டேயிருப்பார்கள். 12 வயதிலிருந்து 29 வரை ராகு தசை நடக்கும்போது, அபரிமிதமான படைப்பாற்றல் வெளிப்படும். கல்லூரியில் இவர்கள் ஆராய்ச்சி படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
30 வயதிலிருந்து 45 வரை குருவின் அருளால் புத்தியில் தெளிவும் செம்மையும் கூடும். பாதத்திற்கு அதிபதியாக புதன் வருவதால் புள்ளியியல், சி.ஏ, சட்டம், எம்.பி.ஏ. கம்பெனி நிர்வாகம் சார்ந்த படிப்புகள் எல்லாமுமே ஏற்றவை. உளவியலும் சிறந்ததாகும். மருத்துவத்தில் இ.என்.டி, நரம்பு, வயிறு, ஜெனிடிக்ஸ் துறைகளில் தனித்துவம் பெற முடியும். நான்காம் பாதத்தில் பிறந்தவர்களை சந்திரன் ஆள்கிறார். நட்சத்திர அதிபதியும் சந்திரனாக வருவதால் சந்திரனின் இரட்டிப்புத் திறன் இவர்களிடம் செயல்படும். சந்திரன் அழகைத் தருவார்; அதேநேரம் உணர்ச்சிப் பிழம்பாகவும் இருப்பார்கள். 1 வயதிலிருந்து 8 வரை செவ்வாய் தசை நடக்கும். சிறிய வயதில் பெற்றோர்களுக்கும் சரி, இவர்களுக்கும் பெரிய கஷ்டமெல்லாம் இருக்காது.
9 வயதிலிருந்து 24 வரை ராகு தசை நடக்கும். பாதத்தின் அதிபதியான சந்திரனை ராகு கவ்வும். அதனால் சிறிய விஷயத்திற்கும் பெரிதாகக் குழம்புவார்கள். கொஞ்சம் தடுமாறி நிமிர்வார்கள். ராகு தசை நடைபெறுவதால் திடீரென்று 90 மார்க் எடுப்பார்; அடுத்த தடவை நாற்பதுதான் வரும். இப்படி ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டில் எப்போதுமே முதல் மாணவராக வருவார்கள். ஓரளவு நல்ல மதிப்பெண்களை எடுத்து 12ம் வகுப்பில் தேறுவார்கள். மாஸ் கம்யூனிகேஷன், மெரைன், ஆங்கில இலக்கியம், சட்டம், ஃபேஷன் டெக்னாலஜி என்று திட்டமிட்டு படித்தால் போதும். மருத்துவத்துறையில் பிளாஸ்டிக் சர்ஜரி படிக்க, நிபுணத்துவம் நிச்சயம்.
திருவோணக்காரர்களின் வாக்குக்கு அதிபதியாக சனி வருகிறது. எனவே பெருமாளை வணங்கினால் போதுமானது. அதிலும் ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கிருஷ்ணரை வணங்க, கல்வித் திறன் மேம்படும். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும், 3, 4 பாதங்கள் கும்ப ராசியிலும் இடம்பெறுகின்றன. ‘தவிட்டுப்பானையும் தங்கமாகும்’ அளவிற்கு கைராசி உள்ளவர்கள். அவிட்டம் நட்சத்திரத்தின் ராசியாதிபதி சனி; நட்சத்திர அதிபதி செவ்வாய்.
Similar Posts :
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
திருவோணம்