சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
துலாம் ராசியிலேயே அதிக ஒளிமிக்க இளமையான நட்சத்திரம் சுவாதி. இளம் வயதிலிருந்தே எதையும் சீக்கிரம் புரிந்து கொள்பவராகவும், கூர்மையாக ஆராய்ந்து கேள்விகளால் துளைத்தெடுப்பவராகவும் இருப்பார்கள்.
சுவாதி முதல் பாதத்தில் பிறந்தவர்களை, துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரனும், நட்சத்திர ஆட்சியாளர் ராகுவும், முதல் பாதத்தின் அதிபதியான குருவும் சரிசமமாக வழிநடத்துவார்கள். ஏறக்குறைய 15 வயது வரை ராகு தசை நடக்கும். சிறுவயதிலிருந்தே இவர்களின் குறுக்குக் கேள்விகளுக்கு பதில் சொல்லி மீள முடியாது. மேஜிக், மாயாஜாலம் என்று ஆர்வம் காட்டுவார்கள். வெவ்வேறு யோசனைகள் குறுக்கிடுவதால், மதிப்பெண்கள் சற்று ஏற்றஇறக்கமாகத்தான் இருக்கும். 16 வயதிலிருந்து 31 வரை குரு தசை வரும்போது எல்லா விஷயங்களிலும் தீவிரமாக இருப்பார்கள். ராகு தசையில் நடந்த சிறுசிறு தவறுகள் இங்கு சரியாகும். மார்க் குறைந்து அசிங்கப்பட்டதெல்லாம் மாறும். குரு ஆறாம் வீட்டுக்கு அதிபதியாக இருப்பதால், கெட்ட நண்பர்களின் சகவாசம் வரும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்லூரிப் பருவத்தில் சரியாகப் படித்து மேலே வருவார்கள். ராகுவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், ஆராய்ச்சிக் கல்வியை விரும்புவார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும், இவர்களில் சிலர் வேலை வேண்டாம் என்று படிப்பைத் தொடர்வார்கள். வழக்கறிஞர், ஆசிரியர், ஆடிட்டர் என்று போனால் சிறப்பாக வருவார்கள். அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவையும் ஏற்றம் தரும்.
இரண்டாம் பாதத்தை மகரச் சனி ஆட்சி செய்கிறார். ஏறக்குறைய 12 வயது வரை ராகு தசை நடைபெறும். 4 வயது வரை தோல் பாதிப்புகள் அவஸ்தைப்படுத்தும். பெரும்பாலும் விளையாட்டில்தான் ஆர்வம் காட்டுவார்கள். மகரச்சனி என்பதால் எதிலும் பரபரப்பு இருக்கும். எது செய்தாலும் நான்கு பேருக்கு உபயோகப்படும்படி செய்வார்கள். 13 வயதிலிருந்து 28 வரை குரு தசை நடைபெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும்போதே ஸ்பேஸ்கிராப்ட், பைலட் ஆவது பற்றிய விஷயங்களை காதில் போட்டு வையுங்கள். கனிம வளங்கள், மண்ணியல், புவியியல் சம்பந்தமான படிப்புகள் சிறப்பு தரும். மருத்துவத்தில் எலும்பு, சரும நோய் துறைகளில் மிகச் சிறந்த நிபுணராக விளங்குவார்கள்.
மூன்றாம் பாத அன்பர்களின் அதிபதியாக கும்பச் சனி வருகிறார். எனவே சமயோசித புத்தி அதிகமாக இருக்கும். ஏறக்குறைய 7 வயது வரை ராகு தசை நடக்கும். ஓவியம், கீ போர்ட், இசை என்றுதான் பள்ளி வாழ்க்கையின்போது இறங்குவார்கள். படிப்பில் அவ்வளவு ஆவல் இருக்காது. 8 வயதிலிருந்து 23 வரை குரு தசை நடக்கும். ராசிநாதனுக்கு குரு பகைவராக இருந்தாலும், நல்லதுதான் செய்வார். ஏனெனில், கும்பச் சனிக்கு தனம், லாபாதிபதியாக குரு வருகிறார். இதனால் கல்லூரி வரை ஸ்காலர்ஷிப்பிலேயே படிப்பார்கள். பதக்கமும், பாராட்டும் பெறுவார்கள். சிறிய வயதிலேயே சட்டென்று பெரிய வேலை கிடைக்கும். ரயில்வே தேர்வு எழுதி செலக்ட் ஆவார்கள். 24 வயதிலிருந்து 42 வரை சனி தசை, யோக தசையாக மாறும். இந்தப் பாதத்தில் பிறந்த பலர் தொழிற்சாலை வைக்குமளவுக்கு பெரிய ஆளாவார்கள். இவர்களின் நட்பு வட்டத்தை மென்மையாக கண்காணித்தல் நல்லது. கால்நடை மருத்துவம், விலங்கியல், தாவரவியல் போன்ற துறைகள் சிறப்பு தரும். மருத்துவத்தில் எலும்பு, மயக்க மருந்து நிபுணர் போன்றவை எனில் நல்லது. சி.ஏ. தேர்வில் எளிதாக வெற்றி பெறுவார்கள்.
ஒன்றாம் பாதத்திற்கும், 4ம் பாதத்திற்கும் அதிபதியாக குருவே வருகிறார். ஆனால் 4ம் பாதத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். சுக்கிரன், ராகு, மீன குரு மூவரும் இணையும்போது வேகமும், விவேகமும் இருக்கும். 4 வயது வரை ராகு தசை நடக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். 5 வயதிலிருந்து 19 வரை குரு தசை வரும்போது கற்பூர புத்தியாக இருப்பார்கள். கவிதை, கட்டுரை என்று வகுப்பில் எல்லாவற்றுக்கும் கை தூக்குவார்கள். 20 வயதிலிருந்து 38 வரை சனி தசை நடக்கும்போது முதல் பாதி சறுக்கும்; அதாவது 30 வயது வரை தடுமாறுவார்கள். ‘‘கஷ்டப்பட்டு படிச்சோம். ஆனா, திருப்தியான வேலை கிடைக்கலையே’’ என மனம் வெதும்புவார்கள். மனதுக்குப் பிடித்த வேலையைத் தேடி அலைந்துவிட்டு கிடைத்த வேலையில் அமர்வார்கள். பத்தாம் வகுப்பு தாண்டும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றி காதில் போட்டு வையுங்கள். நிர்வாகம் சார்ந்த படிப்புகள் சிறப்பு தரும். எஞ்சினியரிங்கில் ஐ.டி., கெமிக்கல் போன்றவை ஏற்றதாகும். மருத்துவத்தில் இரப்பை, சிறுநீரகம் தொடர்பான நிபுணராக விளங்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பூரண ஆதிக்கம் இருப்பதால் தத்துவம், உளவியல் படிக்கும்போது சமூகத்தில் நல்ல அடையாளம் கிடைக்கும்.
சுவாதியில் பிறந்தவர்கள் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள அம்மன்குடி அஷ்டபுஜ துர்க்கையை தரிசிக்க வேண்டும். மிகப்பழமையான ஆலயத்தில் தனி சந்நதியில் துர்க்கை அருள்பாலிக்கிறாள். சிம்ம வாகனத்தில் எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் இந்த தேவியின் பாதம் பணிந்தால் கல்வியில் சிறக்கலாம்.
Similar Posts :
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
சுவாதி