மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் தனது முழுத்திறனையும் செலுத்தி ஆட்சி செய்கிறார். பொதுவாக செவ்வாயை சீற்றமுள்ள கிரகமாகத்தான் சொல்வார்கள் ஆனால் ராசியாதிபதியாக சுக்கிரனாக வருவதால், சீற்றத்தை ஆக்க வழியில் இவர்கள் உபயோகப்படுத்துவார்கள். பள்ளியில் வகுப்புத் தலைவராவது முதல் கல்லூரி மாணவத் தலைவராவது வரை எல்லாவற்றிலும் ஈடுபாடு காட்டுவார்கள். அறிவியல் ஈடுபாடும், கண்டுபிடிப்பு ஆர்வமும் பள்ளிப் பருவத்திலேயே வெளிப்படும். புவியியலில் சிறப்பு கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் விஞ்ஞானியாகும் வாய்ப்பு இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு. வனத்துறை சார்ந்த வேலைகளுக்கும் அதிக வாய்ப்புண்டு.
மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தை ராசியாதிபதி சுக்கிரனும், நட்சத்திர அதிபதியான செவ்வாயும், முதல் பாதத்தின் அதிபதியான சூரியனும் ஆட்சி செய்கின்றனர். ஆறு வயது வரை செவ்வாய் தசை நடக்கும்போது உடல் பருமனாக இருக்கும். 7லிருந்து 24 வயது வரை ராகு தசை நடக்கும்போது திடீரென்று பள்ளியை மாற்றும்படியான சூழல் உருவாகும். கிட்டத்தட்ட பள்ளியின் தொடக்க காலத்திலிருந்து கல்லூரி முடியும் வரையிலும் ராகு தசை நடைபெறுவதால், பள்ளிப் படிப்போடு சேர்த்து வாழ்வின் அனுபவத்தையும் படிப்பார்கள். நண்பர்கள் வட்டம் அதிகமாவதால், படிப்பில் கவனம் சிதறும். ஒரு வகுப்பில் படிப்பதுபோல அடுத்த வகுப்பில் படிக்க முடியாமல் போகும். 12ம் வகுப்பிற்குப் பிறகுதான் கல்வியைப் பற்றிய தெளிவு கிடைக்கும். அதுவரையிலுமே சுமார்தான். கல்லூரியில் சொல்லி வைத்தாற்போல படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பார்கள். ஏனெனில், ராகு தசையின் இரண்டாம் பாகத்திற்குள் வந்து விடுவதால் ராகுவின் வீர்யம் குறையும். அதனால் கல்லூரியில் எந்தப் பாடத்தை எடுக்கிறார்களோ, அதில் டாக்டரேட் செய்து முடிப்பார்கள். பொலிட்டிகல் சயின்ஸ், எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., அஸ்ட்ரோனமி போன்ற படிப்புகள் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும். மருத்துவத் துறையில் நரம்பியல், மயக்க மருந்தியல் போன்ற படிப்புகளில் சிறப்பான எதிர்காலம் உண்டு.
அடுத்ததாக வரும் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களை செவ்வாய், சுக்கிரன், புதன் கிரகங்கள் ஆளுவதால், இளம் வயதிலேயே கொஞ்சம் ஏமாளியாக இருப்பார்கள். சாதாரண பள்ளியில் சேர்த்து, பெரிய அளவில் மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென்று நெருக்கடி கொடுப்பார்கள். பால பருவத்திலேயே சுய கௌரவம் அதிகமிருக்கும். நாலரை வயதில் செவ்வாய் தசை நடைபெறும்போது இ.என்.டி. டாக்டரிடம் போக வேண்டியிருக்கும். காதில் பிரச்னை இருக்கும். 5லிருந்து 22 வயது வரை ராகு தசை நடைபெறுவதால் வகுப்பறையில் தனித்துவம் மிக்க மாணவனாக சுடர்விடும் அறிவோடு விளங்குவார்கள். புதன் ஆதிக்கம் மிகுந்திருப்பதால், பள்ளிப் பருவத்திலேயே தங்களை சிந்தனாவாதியாக நிலை நிறுத்துவார்கள். ஆசிரியரின் அறிவுரையும், ஊக்கமும் இருந்தால் அந்த சப்ஜெக்ட்டில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். எட்டாம் வகுப்பில் படிப்பு கொஞ்சம் தடைபடும். ஆனால், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். அக்கவுன்டன்ஸி, விஸ்காம், பேங்கிங் சம்பந்தமான படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். மருத்துவம் எனில் நரம்பு, வயிறு, கண் சம்பந்தமாக படித்தால் பெரிய அளவில் புகழ் பெறலாம். எலெக்ட்ரானிக்ஸை விட எலெக்ட்ரிகல் நல்லது.
மிதுன ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, மூன்றாம் பாதத்தின் அதிபதியாக சுக்கிரன் வருகிறார். பிறந்த இரண்டரை வருடம் வரை செவ்வாய் தசை நடைபெறும். வயிற்றோட்டமும், செவ்வாயின் உஷ்ணத்தால் அடிக்கடி ஜுரம் போலவும் வந்து நீங்கும். 3 வயது முதல் 20 வரை ராகு தசை இருப்பதால் தாய், தந்தையின் வளர்ச்சி இன்னும் மேம்படும். கிட்டத்தட்ட ஒன்பதாம் வகுப்பு வரை சுமாராக படித்தவர்கள், பத்தாம் வகுப்பில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைப்பார்கள். கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இருந்தாலும், நல்ல மதிப்பெண்கள் எடுத்து வியக்க வைப்பார்கள். 20வது வயதில் ஏராளமான திறமைகளோடு வலம் வருவார்கள். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், விஸ்காம், ஆர்க்கிடெக்ட், ஃபேஷன் டெக்னாலஜி, சி.ஏ., எகனாமிக்ஸ் போன்ற படிப்புகள் எளிதாக வெற்றி பெறச் செய்யும். மருத்துவத்தில் சர்க்கரை நோய் நிபுணராக வரவும் வாய்ப்புள்ளது.
மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி செவ்வாய், ராசியாதிபதி புதன். நான்காம் பாதத்தின் அதிபதியாக திரும்பவும் செவ்வாயே வருகிறது. செவ்வாய் இரண்டு மடங்கு சக்தியோடு இருப்பார். ஒரு வயது வரை செவ்வாய் தசை இருக்கும். 2லிருந்து 19 வயது வரை ராகு தசை இருக்கும். 4 வயதில் பாலாரிஷ்டம் என்று சொல்வதுபோல் உடம்பு படுத்தும். ராகு தசையின்போது புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வர, உடல்நலம் சீராகும். பெரும்பாலும் இந்த பாதத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த விளையாட்டு வீரராகும் வாய்ப்பு உண்டு. எப்போதும் பள்ளி மைதானத்தில் பந்தை துரத்தியபடியும், ஓடியபடியும் இருப்பார்கள். மாவட்ட அளவிலாவது சிறந்த வீரராக வருவார்கள். பள்ளியில் படிக்கும்போதே பொருளாதாரம், அக்கவுன்டன்ஸி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து, கல்லூரி வரை தொடர்வது நல்லது. ஆனாலும், மைக்ரோ பயாலஜி, கெமிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிகல் போன்ற படிப்புகளை எளிதாக படித்துத் தாண்டலாம். அதற்கு செவ்வாய் நிச்சயம் உதவுவார்.
மிருகசீரிஷம் நட்சத்திரத்தை செவ்வாய் ஆட்சி செய்கிறது. பொதுவாகவே முருகன் மூலவராக வீற்றிருக்கும் ஆலயங்களை தரிசிப்பது கல்வியில் வேகம் கூட்டும். அதுமட்டுமல்லாது முதலிரண்டு பாதங்களும் சுக்கிரனின் ராசிக்குள் வருவதால், வள்ளிக்கென்று தனித்த சந்நதியுள்ள கோயிலை தரிசிப்பது விசேஷம். இப்படிப்பட்ட தலமே வள்ளியூர். இங்கு மூலவராக வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். நெல்லை மற்றும் நாகர்கோவிலிலிருந்து வள்ளியூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு.
Similar Posts :
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
மிருகசீரிஷம்