கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சூரியனின் முழுசக்தியும் வெளிப்படும். செவ்வாய், மற்றும் சுக்கிரனின் சக்தியும் இணைந்து வருவதால், மிடுக்கும் வசீகரமும் கலந்தே இருக்கும். பத்தாம் வகுப்பிலேயே கல்லூரி முடித்த தெளிவோடு இருப்பார்கள். எல்லா விஷயங்களையும் எளிதாகவும், திட்டமிட்டும் செய்வார்கள். பள்ளிப் பருவத்திலேயே இவர்களைச் சார்ந்து நாலு பிள்ளைகள் இருப்பார்களே தவிர, இன்னொருவரை சார்ந்து இவர்கள் இருக்க மாட்டார்கள். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் ஓரிருவரைத்தான் அருகில் சேர்ப்பார்கள். படிப்பை விட ஒழுக்கத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். அதேசமயம் படிக்கவும் செய்வார்கள். தலைவலி, பார்வைக் கோளாறு, பல்வலி போன்றவை சிறிய வயதிலேயே வந்து நீங்கும்.
முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பளிச் தோற்றத்துடன், மெலிந்து, உயரமாக இருப்பார்கள். சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டியிருக்கும். பள்ளியில் படிக்கும்போதே வகுப்புத் தலைவர் முதல் பள்ளித் தலைவர் வரை பதவிகள் வரும். நல்ல கல்வி நிறுவனத்தில் தந்தை சேர்ப்பார். மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமாராகத்தான் படிப்பார்கள். ஆனால், எல்லா வகுப்பிலும் குறிப்பிட்ட ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அதன்பிறகு கல்லூரி முடிக்கும் வரை எல்லாவற்றிலும் முதலிடம்தான். கல்லூரியில் என்ன படிக்கிறார்களோ அதுதான் வாழ்க்கையை நிர்ணயிப்பதாக இருக்கும். நிர்வாகம், அரசியல், சிவில் எஞ்சினியரிங், எலெக்ட்ரிகல், விண்வெளி ஆராய்ச்சி குறித்த படிப்புகள் வளமான எதிர்காலம் தரும்.
இரண்டாம் பாதம் மற்றும் மூன்றாம் பாதத்துக்கு பலன்களில் மிகச் சிறிய வித்தியாசம்தான். மூன்றாம் பாதம் கொஞ்சம் மெதுவாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால், விவேகத்தைப் பொறுத்தவரை இருவரும் ஒன்றுதான். பள்ளியில் ஆங்கிலத்தில் சிறப்பான ஈடுபாடு காட்டுவார்கள். தனக்கென்று தனிக் கூட்டத்தை உருவாக்குவார்கள். இங்குதான் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுக்காக சில தியாகங்கள் செய்வார்கள். இதனால் பள்ளிப் படிப்பையே கோட்டை விடும் ஆபத்து உள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு தாண்டி விட்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதன்பின் கல்லூரி முடியும் வரை செவ்வாய் தசை இருப்பதால் கெமிக்கல், சிவில், எம்.பி.ஏ. போன்றவை மிகச் சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தரும். பொறியியல் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் சிறந்தது. கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை ஆர்வமிகுதியால் படித்து விட்டு, பிறகு தொழிலுக்காக வேறு படிப்பையும் படிப்பார்கள். கேட்டரிங் டெக்னாலஜி தேர்ந்தெடுத்தால் ஒரு ஓட்டலுக்கே அதிபராகலாம்.
நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் பரம்பரையில் யார் யார் என்னென்ன படித்தார்கள் என்று பார்த்து வைப்பார்கள். பதினோரு வயது வரை தாய்வழி சொந்தங்கள் இவர்களின் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். சிறு வயதிலேயே பெரிய லட்சியத்தோடு வளர்க்கப்படுவார்கள். பள்ளியிறுதியிலேயே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு வகுப்புகளுக்குக்கூட செல்வார்கள். கல்வியில் முக்கிய கட்டமான எட்டாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை படிப்பில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள். அரசு வேலைக்குத் தகுந்த மாதிரி படிப்பார்கள். சிலருக்கு வேலையும் கிடைத்து விடும். ஐ.ஏ.எஸ். இவர்களுக்கு வெற்றி தரும். மருத்துவத்துறையில் வயிறு, இ.என்.டி. போன்ற படிப்புகளில் சிறப்பாக செயல்படுவார்கள். படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக வரும் வாய்ப்பு அதிகம் உண்டு. அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் அமர்ந்திருப்போரின் செயல்பாடுகளை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். சொந்த ஜாதகத்தில் சூரியனும், குருவும் பலவீனமாக இருந்தால் கல்வித் தடை ஏற்பட்டு சிரமப்படுவார்கள். ஆனால், பொதுவாக கல்வி விஷயத்தில் சிறந்தே விளங்குவார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தை சூரியன் ஆட்சி செய்கிறது. எனவே, சூரியன் பூஜித்த தலங்களை வணங்கினால், கல்வித்தடைகள் நீக்கும். அப்படிப்பட்ட தலமே திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் ஆலயமாகும். இங்கு பிரம்மாவுக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. அவருடன் சரஸ்வதி தேவியும் அருள்புரிகிறார். இவ்வாறு படைப்புக் கடவுளும், கல்விக் கடவுளும் தம்பதியாக அருள் புரிவது அரிதான ஒன்று. கூடவே சூரியனும் பேறு பெற்ற இடம் என்பதால், இத்தலத்தை வணங்க கல்விச் செல்வம் பெருகும். இத்தலம் தஞ்சாவூர் - திருவையாறு பாதையில் அமைந்துள்ளது.
Similar Posts :
கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
கார்த்திகை