பரணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
மேஷ ராசியிலேயே பரணி நட்சத்திரக்காரர்கள் எந்தவொரு விஷயத்திற்கும் உடனடியாக ரீயாக்ட் செய்வார்கள். கோடு போட்டால் ரோடு போடும் குணத்தை பள்ளிப் பருவத்திலேயே காணலாம். இந்த நட்சத்திரத்தை சுக்கிரன் ஆள்கிறார். எனவே எப்போதும் பரபரப்பும் துறுதுறுப்பும் இருக்கும். படிப்பை விட ஆடல், பாடல், கதை என கலைகளில் ஆர்வம் காட்டி ஜெயிக்கவும் செய்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் வாழ்க்கை ரம்யமாகச் செல்லும். ‘‘பையன் படிக்கவே வேணாம். அவன் கிட்ட இருக்கற திறமைக்கு எதிர்காலத்துல பெரிய பாடகராவோ, நடிகராவோ வந்துடுவான்’’ என்று பள்ளிப் பருவத்திலேயே சொல்லி விடுவார்கள். சுக்கிரன் மறைந்தாலோ, அல்லது பலவீனமாக இருந்தாலோ கொஞ்சம் குழம்பியபடி இருப்பார்கள். கூடா பழக்கத்தால் பாதை மாறுவார்கள். குடும்பக் கஷ்டம் தெரியாமல் வளர்வார்கள். விவரம் தெரியாமல் ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வார்கள்.
பரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 19 வயது வரை சுக்கிர தசைதான் நடக்கும். கௌரவமாக மதிப்பெண் எடுப்பார்கள். எப்போதும் நண்பர்களால் சூழப்பட்டு இருப்பார்கள். சின்ன வயதிலேயே பிரபலமாக முயற்சிப்பார்கள். தடங்கல் இல்லாமல் படிப்பு நகரும். பள்ளியில் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் பெயர் இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளத் துடிப்பார்கள். எதையும் மிகைப்படுத்திப் பார்க்கும் குணமும் இருக்கும். 10ம் வகுப்பு படிக்கும்போது நிறைய நண்பர்கள் இருப்பார்கள். பிறகு காதலால் கவனம் சிதறும். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். பெற்றோர் சரியான வழிகாட்ட வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டம்தான் சுக்கிர தசையின் இரண்டாம் பாகமாக இருக்கும். சுக்கிரன் அதீதமாக ஆளுவார். ஹார்மோன்களின் கலாட்டா மிதமிஞ்சியிருக்கும். கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும்போது சூரிய தசை தொடங்கும். கொஞ்சம் நிதானம் பெறுவார்கள். அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவத் துறையில் கண், நரம்பு, முகம் சம்பந்தமான துறை சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர். துறை ஏற்றது. பொறியியல் எனில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.
இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களிடம் சூட்சும புத்தி அதிகம் இருக்கும். சிறிய வயதிலிருந்தே எதிலும் வேகம் காட்டுவார்கள். நாலு பேருக்கு முன்னால் அடித்தாலோ, திட்டினாலோ தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்வார்கள். கணக்கு எப்போதும் சவாலாக இருக்கும். ஆசிரியர் சரியாக சொல்லித் தரவில்லை என அவ்வப்போது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆசிரியரைப் பொறுத்து அந்தந்த பாடங்களில் கவனம் காட்டுவார்கள். யாரேனும் ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு வளர்வார்கள். 12 வயது வரை சுக்கிர தசை நடப்பதால் பள்ளிப்பருவம் மறக்க முடியாததாக இருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கல்வித் தடை வந்து நீங்கும். ஹாஸ்டலா, வீடா என்று வீட்டிலுள்ளோர் குழப்புவார்கள். 13 வயது முதல் சூரிய தசை நடக்கும்போது உலக அனுபவங்களும், ஒரு பெரிய மனுஷத்தனமும் வரத் தொடங்கும். ‘‘விளையாட்டுப் பிள்ளையா இருந்தான். அப்படியே மாறிட்டானே’’ என்று வியப்பார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். அதேபோல கட்டிட திட்ட வரைபடத் தயாரிப்பு, ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்றவையும் வளமான எதிர்காலம் தரும். கலைத்துறை எனில் ஓவியம் மிக நன்று.
மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களிடம் அழகும் அறிவும் சேர்ந்திருக்கும். எல்லோரும் விரும்பும் பிள்ளையாக இருப்பார். பேசுவதே பாடுவது போலிருக்கும். சிறிய வயதிலேயே மேடைகளில் அசத்துவார்கள். வயதுக்கு மீறி பல விஷயங்களைப் பேசுவதால், அதிகப் பிரசங்கி என்று பெயர் வாங்குவார்கள். 4ம் வகுப்பு படிக்கும்போதே சூரிய தசை தொடங்கி விடும். குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் தள்ளாடும். படிப்பும் கொஞ்சம் பாதிக்கும். புத்தகக் கல்வியை விட வாழ்க்கைக் கல்வியைத்தான் நன்றாகப் படிப்பார்கள். ‘‘படித்துதான் பெரிய ஆளாகவேண்டும் என்பதில்லை’’ என்று அடிக்கடி கூறுவார்கள். கலைத்துறை மீது எப்போதும் ஒரு கண் இருக்கும். ஃபேஷன் டெக்னாலஜி, விஸ்காம், டி.எஃப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். இசைப்பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பும் கிடைக்கலாம். இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அரசு வேலையும் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் கோயில், பூங்கா போன்றவை சிறப்பு தரும்.
நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். சராசரியாகத்தான் படிப்பார்கள். பள்ளியில் சேர்த்த உடனேயே சுக்கிர தசை முடிந்து சூரிய தசை ஆரம்பித்து விடும். ‘‘ஸ்கூலுக்கு ஒழுங்கா வர்றான்; போறான். அதுல ஒண்ணும் குறை இல்லை. ஆனா, மார்க் மட்டும் வரமாட்டேங்குது’’ என்பார்கள். நோட்டுக்கு அட்டை போடுவது முதல் வகுப்பறை ஒழுக்க நியதிகள் வரை எதிலுமே குறை கூற முடியாது. பத்தாம் வகுப்பில் மரியாதைக்குரிய மதிப்பெண் பெறுவார்கள். பன்னிரெண்டாம் வகுப்பை விட கல்லூரியில் சிறந்து விளங்குவார்கள். ‘‘இன்னும் பத்து மார்க் கூட எடுத்திருந்தா அந்த கோர்ஸ் கிடைச்சுருக்கும்’’ என்பதுபோல பல விஷயங்கள் இவர்களை விட்டு நழுவும். ஆனாலும் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் எடுத்துப் படிக்கலாம். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற படிப்புகள் ஏற்றதாகும். நிர்வாகம் சார்ந்த இளங்கலை படிப்பு பெரிய பதவி வரை கொண்டு போய் நிறுத்தும். அதனால் கவனமாக தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமை மிகுந்த அம்பாள் சந்நதியோடு, சரஸ்வதி தேவி வீற்றிருக்கும் தலத்திற்குச் சென்று வணங்குவது கல்வித் திறனை பெருக்கும். மேலும், சைவக் குருக்களோ அல்லது ஆச்சார்யர்களோ தரிசித்து பேறு பெற்ற தலமாக இருப்பின் புத்தியின் தீட்சண்யம் இன்னும் கூடும். அப்படிப்பட்ட தலமே வேதாரண்யம் ஆகும். இங்குள்ள ஈசனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு யாழைப்பழித்த மொழியம்மை என்றும் பெயர். இத்தலத்து அம்பாளின் வாக்கானது தன் வீணையின் நாதத்தை விட அழகானதும், ஈடு இணையற்றும் இருப்பதால் சரஸ்வதி இங்கு வீணையில்லாது வீற்றிருக்கிறாள். நாகை மாவட்டத்திலுள்ள இத்தலத்திற்கு சென்று அம்பாளையும், சரஸ்வதியையும் தரிசித்து வாருங்கள். சம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடித் திறந்த திருக்கதவை தரிசியுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு விவேகக் கதவு திறப்பதை உணர்வீர்கள்.
Similar Posts :
பரணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?,
பரணி நட்சத்திர பலன்கள், See Also:
பரணி