இடைக்காடர்
இடைக்காடர் மூல மந்திரம்... "ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
பெயர்
|
:
|
இடைக்காடர்
|
பிறந்த மாதம்
|
:
|
புரட்டாதி
|
பிறந்த நட்சத்திரம்
|
:
|
திருவாதிரை
|
குரு
|
:
|
போகர், கருவூரார்
|
சீடர்கள்
|
:
|
குதம்பை, அழுக்காணி சித்தர்
|
சமாதி
|
:
|
திருவண்ணாமலை (திருவிடைமருதூர் என்று போகர் ஜனன சாகரத்தில் கூறப்பட்டுள்ளது)
|
வாழ்நாள்
|
:
|
600 வருடம் 18 நாட்கள்
|
மரபு
|
:
|
இடையர்
|
இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார். இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து, “மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர், அந்த சித்தரை வணங்கி, பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இவர் சகல சித்துக்களும் பெற்று இடைக்காடர் சித்தர் ஆனார். ( கமலக்கண்ணன் பா 1993 பக்கம் 147) தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார். முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப் பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். (கமலக்கண்ணன் பா 1993 பக்கம் 150 )இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார். இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும். தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்... சிறு வயதிலேயே, 'நான் யார்?' என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியான விடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்... ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக் கொண்டவர். காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன... அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப்பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே...! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர். ஒரு நாள், ஆடு ஒன்று பள்ளத்தில் விழுந்து காயம்பட்டு ரத்தம் பெருக்கி நின்றது. இடைக்காடர் துடிதுடித்துப் போய்விட்டார். அதற்கு மருத்துவம் செய்யத் தெரியாமல் தத்தளித்தார். அந்தக் காடு கொள்ளாதபடி மூலிகைகள். ஆனால், அதில் எதைப் பறித்து அந்த ஆட்டுக்கு இடுவது என்பதில் குழப்பம். அந்தவேளை பார்த்து, போகர் வானவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். கீழே இடைக்காடர் ஓர் ஆட்டின் பொருட்டு படும் அவஸ்தை அவர் மனதை நெகிழ்த்தியது. கீழிறங்கி வந்து உரிய மூலிகையைப் பறித்து ஆட்டுக்கு மருத்துவமும் செய்து அதன் வலியைப் போக்கினார். பதிலுக்கு போகரை உச்சந்தலையில் வைத்து கொண்டாடத் தொடங்கி விட்டார் இடைக்காடர். இத்தனைக்கும், இடைக்காடர் மேனியிலும் சில காயங்கள் இருந்தன. அதற்கு மருந்து போட்டுக் கொள்ளக்கூட அவருக்குத் தோன்றவில்லை. போகருக்கு பாலும் தேனும் தந்து உபசரித்தார். ''அப்பா.. உனக்கு மிக மிக இளகிய மனது. ஆட்டிற்கும் மாட்டிற்கும் இரங்குகின்றாயே.. உன்னைக் கண்டு மகிழ்கிறேன்'' என்றார் போகர். ''ஸ்வாமி... உங்களைப் பார்த்தால் பெரிய மருத்துவர் போல தெரிகிறது. எனக்கும் உங்கள் மருத்துவக் கல்வியை பிச்சை போடுங்கள்... எனக்காகக் கேட்கவில்லை. இந்த ஆடு மாடுகளுக்கு வியாதி வந்தால் அதைப் பெரிதாகக் கருத யாருமே இல்லை. இவைகளை உணவாகப் பார்க்கத் தெரிந்த மனிதர்களுக்கு, இவைகளின் ஆரோக்கியம் பெரிதாகத் தெரியவில்லை...'' என்று, போகரின் காலில் விழுந்தார். அந்த நொடி, போகரும் இடைக்காடரை தன் சீடனாக ஏற்றுக்கொண்டார். ''நான் வான்வழி செல்லும்போது உன்னைக் கண்ட நேரம், அமிர்த நாழிகைப் பொழுது. எப்பொழுதுமே எதையும் விருத்தியாக்குவதுதான் அந்தக் கால கதிக்குள்ள சக்தி. அதுதான் உன்னிடமும் தொற்றிக் கொண்டு உன்னால் எனக்கும், என்னால் உனக்கும் ஆதாயத்தை ஏற்படுத்தி உள்ளது..'' என்றார், போகர். போகர் அப்படிச் சொல்லவும், இடைக்காடர் மனதில் காலகதி பற்றிய சிந்தனை பெரிதாக தோன்றத் தொடங்கி விட்டது. ''அது என்ன அமிர்த நாழிகைப் பொழுது?'' இடைக்காடர் கேட்டார். அந்த ஒரு கேள்வி, தனக்குள் ஒரு மாபெரும் ஜோதிட ஞானத்துக்கே காரணமாகப் போவதை அப்போது அவர் அறியவில்லை. ஆரம்பமாயிற்று போகர் மூலமாக ஜோதிடப் பாடம். பஞ்ச அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் என்று தொடங்கி, திதி, யோகம், கரணம் என்று விஸ்வரூபமெடுத்தது அந்த பிரபஞ்சக் கல்வி.... போதுமே...! ஞானிகளுக்குள் ஒரு விதை விழுந்தால், அதை ஓராயிரம் ஆக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியுமே... போகர் ஓரளவு சொல்லிக் கொடுத்துவிட்டு ஞானோபதேசமும் செய்துவிட்டு போய்விட்டார்.இறுகப் பற்றிக் கொண்ட இடைக்காடரும் மெல்ல மெல்ல, ஆட்டிடையன் என்கிற நிலையில் இருந்து, மரியாதைக்குரிய இடைக்காடராக மாறினார். என்று மழைவரும்..? எந்த வேளை ஒரு புதிய செயலைத் தொடங்க நல்லவேளை? உபவாசங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நுட்பமாக ஒவ்வொரு சங்கதியையும் கண்டறிந்தார். கோள்களைப் பற்றியும் அவைகளின் கடப்பாடு, குணப்பாடு, செயல் வேகம் என்று சகலமும் அறிந்தார். போகரின் ஞானோபதேசத்தில் கிடைக்கப்பெற்ற 'கோவிந்த நாமம்', அவருடைய நித்ய மந்திரமானது. செயலாற்றும்போதும், செயலாற்றாப் போதும், உறக்கத்திலும், 'கோவிந்தா... மாதவா' என்று அந்தப் பரந்தாமனை அவர் நினைக்கத் தவறவில்லை. இந்த நிலையில்தான், பூ மருங்கில் ஒரு சோதனையான கால கட்டம், வானில் நிலவும் கோள் சாரத்தால் ஏற்படத் தொடங்கியது. பூமண்டலம் என்பது, பஞ்சபூதங்களால் ஆனது. ஆனால், அந்தப் பஞ்சபூதங்களை மீன்போல வலை வீசிப் பிடித்து தங்கள் பாத்திரங்களில் விட்டுக் கொள்வதில் கோள்கள் வலுமிக்கவையாக விளங்கின... மொத்தத்தில் பசுமையான பூமண்டலம் வறளத் தொடங்கியது. காற்று உஷ்ணமானது. நீரை பூமி மறக்கத் தொடங்கியது. நிலமே இதனால் மாறி வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டது. 12 ஆண்டுகள் இது தொடரும் ஒருநிலையும் கோள்கதியால் உருவானது. முன்பே கோள்களின் போக்கை வைத்து இதை அனுமானித்த இடைக்காடர், இந்தக் காலகதியை வெல்ல ஒரு வழியையும் கண்டறிந்து வைத்திருந்தார். தன் குடிசையைப் புதுப்பிக்கும் போது, மண் சுவரோடு நெல்லைக் கலந்துவிட்டார். வீட்டைச் சுற்றிலும் நீரில்லாவிட்டாலும் வளரும் எருக்கஞ் செடிகளைப் பயிரிட்டு அதை ஆடுகளுக்குத் தின்னக் கொடுத்துப் பழக்கிவிட்டார். இதனால், வறட்சி வந்து பூமண்டலமே கதறிய போதும் இடைக்காடரோ அவரது ஆடுகளோ துன்புறவில்லை. எருக்கந் தழையை தின்னும் ஆடுகளுக்கு நமைச்சல் ஏற்படும். உடனே மண்குடிசை சுவரில் சென்று உரசும். மண்ணோடு கலந்திருந்த நெல் இதனால் உமி நீங்கி அரிசியாக கீழ் விழும். இடைக்காடர் போகியல்ல, யோகி. அவருக்கு ஒரு கைப்பிடி அரிசி ஒருநாளைக்குப் போதும். அதைக் கொண்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தார். ஆடுகளும் அவரும் அந்த வறண்ட போதிலும் அழகாக தப்பிக் கொண்டே இருந்தனர். இது ஒருவகையில் விதிப்பாட்டையே வெற்றி கொள்ளும் ஒரு செயல். வறட்சிக்கும் உயிர் அழிவுக்கும் காரணமான கோள் சாரம் என்பது, ஒரு தவிர்க்க இயலாத வான்மிசை நிகழ்வு. நான்கு பேர் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு வீட்டிற்குள் உறவுக்காரர்கள் பத்துப் பேர் வந்து விட, தாற்காலிகமாக அங்கே ஏற்படும் இட நெருக்கடியைப் போன்றது இது. இதற்கெல்லாம் பழக வேண்டும். வறட்சி வந்தால்தான் பசுமையின் மதிப்பு உணரப்படும். எல்லாமே நிலைப்பாடு. கோள் கதிகள் உலகுக்கு இந்தப் பாடத்தை தங்கள் போக்கில் நடத்துவது என்பது, பிரபஞ்சம் உருவான நாளிலிருந்து உள்ள ஒன்று. இதனால் கோள்களுக்குள் மெலிதான கர்வமும் உண்டு. ஆனால், அவைகளின் கர்வத்தை எள்ளி நகையாடுவது போல இடைக்காடரும் அவரது ஆடுகளும் மட்டும் எந்தத் துன்பமும் இன்றி வாழ்ந்து வருவது கோள்களை ஆச்சரியப்படுத்தியது. கோள்களின் ஆதிபத்ய உயர் அம்சங்கள், வானவெளியில் தங்கள் இயக்கத்திற்கு நடுவில், காரணத்தை அறிய இடைக்காடரின் குடிசைக்கே வந்து விட்டன. இடைக்காடரும், வந்திருப்பவை கோள்கள்தான் என்பதை தனது சித்த ஞானத்தால் உணர்ந்து கொண்டுவிட்டார். அவருக்கும் கோள்களுக்குமான வாக்குவாதம் தொடங்கியது. ''இடைக்காடரே... எவ்வளவு நாளைக்கு இப்படியே காலம் தள்ளப் போகிறீர்..?'' ''இதைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது கிரகாதிபதிகளே..?'' ''உங்களின் பசியில்லா வாழ்க்கை என்பது எங்களை மீறிய செயல்..'' ''இது, என் சித்த ஞானம் போட்ட பிச்சை. உங்களுக்கு இதில் சம்பந்தமில்லை கோள்களே...'' ''இந்த மண்ணில் மனிதப் பிறப்பெடுத்து ஒரு வாழ்க்கை வாழும் உங்களுக்கு சந்தோஷமோ துக்கமோ நாங்கள்தான் தரமுடியும்...'' ''தன்னையறியா சராசரிகளுக்கும், ஆசைபாசம் என்று மாட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் நீங்கள் சொல்வது பொருந்தலாம். நான் பற்றற்றவன். பரதேசி! நீங்கள் எனக்கு எதையும் தரவும் முடியாது. நானும் அதனைப் பெறவும் வழியில்லை.'' ''பார்க்கலாமா அதையும்..?'' ''பார்க்கும் முன், எனது சிறு விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பலப்பரிட்சையை வைத்துக் கொள்ளலாம்...'' இடைக்காடர் அப்படிச் சொல்லவும், கோள்களும் அவர் எங்கிருந்து அரிசி எடுத்து எப்படி உணவு சமைக்கிறார் என்று பார்க்கும் ஆவலுடன் மௌனமாயிருக்க, முதல் காரியமாக ஆடுகளுக்கு எருக்கிலையை தின்னக் கொடுத்தார். அப்படியே கோள்களைப் பார்த்து, ''வறட்சியிலும் வாழத் தெரிந்த பயிர் இது.. என்னைப் போல். குளிரும் நீரும்தான் இதற்கு ஆகாது. இதை நீங்கள் அழிக்கவேண்டுமானால் பெருவெள்ளம் வந்தாக வேண்டும். சீதோஷ்ண நிலையே மாற வேண்டும்'' என்றார். அப்படியே உண்ட ஆடுகள் அரிப்பெடுத்து சுவர்களில் உரச, நெல்லின் கூடுகள் உடைபட்டு உமியும் அரிசியும் பிரிந்து விழுந்தன. அதை எடுத்து கஞ்சி காய்ச்சியவர், கோள்களுக்கும் அதை வழங்கினார். அவர் செயலைப் பார்த்து கோள்கள் சற்று கூசிப் போயின. வறுமை, இல்லாமை போன்ற நிலையிலும் இடைக்காடரின் விருந்தோம்பும் பண்பு, அவர்கள் மனதில் அவர்பால் இருந்த எதிர்மறையான எண்ணங்களை அப்படியே மறையச் செய்தது. ஒன்பது கோள்களுக்குள்ளும் இடைக்காடரிடம் மோதுவதில் குழப்பமான எண்ணங்கள் ஏற்பட்டன. அப்படியே அமர்ந்துவிட்டனர். அப்படி அமரும்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காதபடி அமர்ந்து சிந்தித்தவர்கள், உண்ட களைப்பில் அயர்ந்து உறங்கியும் விட்டனர். அவர்கள் கண்விழித்தபோது பெரிய அளவில் மழை பெய்து இடைக்காட்டூர் மலையாற்றில் வெள்ளம் புரண்டு கொண்டிருந்தது.விழித்தெழுந்த கிரகங்கள், முன்பு அமர்ந்திருந்த நிலையில் தங்களில் சிலர் இடம் மாறி புதிய திசை நோக்கி அமர்ந்திருப்பதைக் கண்டனர்.அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் இடைக்காடரைப் பார்த்து நின்றனர். இடைக்காடர் சிரித்தார். ''என்னை அறிய வந்தவர்கள் நீங்கள். நானோ, உங்களை முன்பே அறிந்தவன். எங்களை விடவா நீ பெரியவன் என்பது உங்கள் எண்ணம். என்னை விட எல்லாமே பெரியது என்பதே என் எண்ணம். அதனாலேயே உலகம் உவந்து வாழ உங்களில் சிலரின் நிலைப்பாட்டை அதாவது சஞ்சாரத்தை மாற்றியமைத்தேன். பிறர் வாழ நினைக்கும் சன்யாசிகள் மனது வைத்தால் அவர்கள் வாழும் நாட்களை மட்டுமல்ல, கோள்களையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்பதை, இதோ கொட்டும் மழையைக் கொண்டு உலகுக்கு உணர்த்தி விட்டேன். கோள்களால், கர்மவினைகளுக்கு உட்பட்டவர்களையே ஆட்டிப் படைக்க முடியும். அதை வென்று வாழ முற்படுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்பதை, இனிவரும் காலம் உணரட்டும். என் கிரகத்தில் இப்போது அமைந்த உங்கள் ஒன்பது பேரின் நிலைப்பாடே வணக்கத்திற்குஉரியது. உங்கள் செயலாக்கத்திற்கும் ஏற்றது.உயிர்களை வழி நடத்தும் கடமைகொண்ட உங்களுக்குள் ஒருபோதும் கர்வம் கூடாது, பாரபட்சமும் கூடாது. இதுவே நான் உங்களிடம் வேண்டுவது'' என்று கூறி, கோள்களை வழியனுப்பி வைத்தார்.இப்படி மாமழையைத் தருவித்து வறட்சியைப் போக்கியதால், பூஉலகம் இடைக்காடரைக் கொண்டாட ஆரம்பித்தது. இடைக்காடரோ, ''என்னை ஏன் கொண்டாடுகிறீர்கள். இடையன் வழி நடங்கள் (அதாவது இடையனான கண்ணனின் கீதைவழி); ஏழையாக இருங்கள் (அதாவது ராஜ்யமிருந்தும் உதறிவிட்டுச் சென்ற ராமனைப் போல); இளிச்சவாயனையும் மறந்து விடாதீர்கள் (அதாவது வாய் பிளந்த கோலத்தில் காட்சிதரும் நரசிம்மம் போல அதர்மத்தை அழிப்பவராக இருங்கள்). இப்படி இந்த மூன்று பேரையும் பார்த்து அவர்களைப் போலவும், அவர்களைப் பின்பற்றியும், அவர்கள் மேல் பக்தி செய்தும் வாழ்ந்தாலே போதுமானது'' என்று, தன் காலம் உள்ளவரை வலியுறுத்தினார். இவரது காலத்தில் திருக்குறளை பெரிதும் தாங்கிப் பிடித்தவராகவும் திகழ்ந்தார். திருக்குறளுக்கு முதலில் உரிய மதிப்பைத் தராத தமிழ்ச் சங்கத்தையும் அதன் புலவர்களையும் சபித்தவர் இவர் என்றும் கூறுவர்.இன்று ஆலயங்களில் நாம் வணங்கும் நவகிரகங்களின் நிற்கும் கோலம், இவரது கிரகத்தில் (குடிசையில்) நவகிரகங்களை இவர் மாற்றி அமைத்த கோலம்தான் என்றும் நம்பப்படுகிறது. இன்றும் ராமநாதபுரம் செல்லும் வழியில் திருப்பாச்சேத்திக்கு அருகேயுள்ள இடைக்காட்டூரில் இவரது திருவுருவ தரிசனம் காணக் கிடைக்கிறது. இடைக்காடரின் தன்னடக்கத்தையும் நுண்ணறிவும் ஒரு சமயம் விஷ்ணுவை வழிபடுகிறவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் வணங்கத்தக்கவை எவை என்று எழவே இடைக்காட்டுச் சித்தரிடம் கேட்டனர். இடைக்காடரோ ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். தங்களுக்குப் பதில் சொல்லச் சங்கடப்பட்டு தன்னைத் தாழ்த்திக் கொண்டு சென்றுவிட்டாரோ, என்று அவரது தன்னடகத்தை எண்ணிய அவர்கள் பின்னர் அவர் கூறியதை மறுபடியும் எண்ணிய போது அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையும் புலப்பட்டது. # ஏழை - சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த இராமன் அவதாரம். # இடையன் - கிருஷ்ணாவதாரம் # இளிச்சவாயன் - நரசிம்மர் இதனால் தெளிவு பெற்றவர்கள் இடைக்காடரின் தன்னடக்கத்தையும் நுண்ணறிவையும் புகழ்ந்தனர். இடைக்காடர் தன்னுடைய ஞானசூத்திரம் 70 என்ற நூலின் காப்புப் காப்புப் பாடலில் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) போகரே தன்னுடைய குருநாதர் என்று கூறுகிறார். காப்பு முதல் காட்சி என்று கடைசியில் நின்று கடைச் சரக்கைக் கண்டுகொள்ளக் காப்பிற் பாடி காப்பு முதல் முதற்சேர்த்து நடுவில் நின்று கணபதி தாளிறு சரணம் காப்பாம் என்று காப்பு முதல் மூலர் கோரக்க நாதர் கமலமுனி போகரிஷி பாதங் காப்பு
Similar Posts :
தன்வந்தரி,
சித்தர்கள்,
இடைக்காடர்,
திண்டுக்கல் ஓதி சுவாமிங்கள், See Also:
இடைக்காடர் சித்தர்கள்