ரோகிணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
இருபத்தேழு நட்சத்திரங்களில் பதிமூன்றாவது ஒளிமிகுந்த நட்சத்திரம் ரோகிணி. சந்திரன் முழுக்க முழுக்க இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்வதால், கனவுகளும் கற்பனைகளும் மிகுந்திருக்கும். படிப்பை விட வகுப்பறை ஒழுக்கத்திற்கும், நோட்டுப் புத்தக அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் தருவார்கள். இளம் வயதிலிருந்தே உணர்ச்சிவசப்படும் குணம் இருக்கும். ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன்.
ரோகிணியின் முதல் பாதத்தை செவ்வாய் ஆளுகிறார். இந்த நட்சத்திரத்திலேயே மிகுந்த தைரியம் மிக்க குழந்தைகளாக விளங்குவார்கள். விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டுவார்கள். ஏறக்குறைய 9 வயது வரை சந்திர தசை இருக்கும். துறுதுறுப்பும் குறுகுறுப்பும் அதிகமிருக்கும். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியில் நடத்தும் நாடகங்களில் கலந்து கொள்வார்கள். தயிர் சாதம் விரும்பிச் சாப்பிடுவார்கள். பத்திலிருந்து 16 வயது வரை செவ்வாய் தசை வரும்போது திடீரென்று வேறு பள்ளிக்கு மாறும் சூழல் வரும்.
ஏழாம் வகுப்பிலேயே என்.சி.சி. போன்ற தேசிய மாணவர் படை திட்டங்களில் சேருவார்கள். காவல்துறை, ராணுவம் போன்றவற்றின் மீது ஒரு கண் வைத்திருப்பார்கள். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 17 வயதிலிருந்து 35 வயது வரை ராகு தசை. 17 வயது என்பது பள்ளியிலிருந்து கல்லூரிக்கு நகரும் தருணம். பிளஸ் 2வில் அறிவியல் படித்து விட்டு, ''என்னை பி.பி.ஏ. சேர்த்து விடுங்கள்’’ என்பார்கள். சம்பந்தமில்லாது படிக்க வேண்டி வரும். ஏதேனும் ஷார்ட் டைம் கோர்ஸில் படித்து ஜெயிப்பார்கள். அதுதான் வாழ்க்கைக்கு உதவும்படியாக அமையும். ராகு தசையில் பல மொழிகளில் வல்லமை வரும். ஆனாலும் கல்லூரி என்று வரும்போது கெமிக்கல், எலெக்ட்ரிகல், விவசாயம், சிவில் என்று சேர்வது நல்லது. மருத்துவத்தில் எலும்பு, பல் சம்பந்தமான துறை கிடைத்தால் உடனே சேரலாம். வெற்றி நிச்சயம்.
ரோகிணியின் இரண்டாம் பாதத்திற்கு அதிபதி சுக்கிரன். ஏறக்குறைய 6 வயது வரை சந்திர தசை நடக்கும். 7லிருந்து 13 வயது வரை நடக்கும் செவ்வாய் தசையில் அதிர்ஷ்டக்காற்று பெற்றோர் மீது வீசும். படிப்பு சுமாராக இருந்தாலும் ஓவியம், உடையலங்காரப் போட்டி என்று வெளுத்து வாங்குவார்கள். 14 வயதிலிருந்து 31 வரை ராகு தசை நடைபெறும். அப்போது மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு கெட்ட பழக்கங்கள் தோன்றி மறையும் காலம் இது.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ‘எப்போது பள்ளி வாழ்க்கை முடியும்’ என நினைப்பது போல பிரச்னைகளால் சூழப்படலாம். அருகிலிருக்கும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். 12ம் வகுப்பு படிக்கும்போது பொறுப்பு வந்துவிடும். இவையெல்லாமே அவரவர் சொந்த ஜாதகத்தில் ராகுவின் நிலையை வைத்தும் நடக்கும். ஆனாலும் பொதுவாகவே ராகு தசை எனில் இந்த வயதுப் பிள்ளைகள் கொஞ்சம் பேலன்ஸ் செய்துதான் செல்ல வேண்டும். கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிகல், விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, பிரின்டிங் டெக்னாலஜி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். மருத்துவத்துறையில் நியூராலஜிஸ்ட், முதுகுத் தண்டுவடம் சார்ந்த துறைகளில் வெகு எளிதாக நிபுணராகும் வாய்ப்பு உண்டு.
மூன்றாம் பாதத்தை புதன் ஆளுவதால் புத்தியில் தீட்சண்யம் அதிகமாக இருக்கும். 5லிருந்து 11 வயது வரை செவ்வாய் தசை இருப்பதால் அடிக்கடி விழுந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் எதிரே பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிள்ளைகள் ஹாஸ்டலை அதிகம் விரும்புவார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும்போது கல்வியில் சிறிய தடை ஏற்பட்டு விலகும். அதற்குப்பிறகு 12லிருந்து 29 வயது வரை ராகு தசை இருப்பதால் படிப்பைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் கூடுதலாகவே இருக்கும். கணக்கு எப்போதுமே சவாலாக இருக்கும். பொதுவாகவே சந்திரனுடைய நட்சத்திரத்தில் சிறிய வயதில் ராகு தசை வரும்போது சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். இது ஒரு கிரகண அமைப்பாகும். ஏதேனும் ஒரு குழப்பமான மனோநிலை நிலவத்தான் செய்யும். மூன்றாம் பாதத்திற்கு அதிபதியாக புதன் வருவதால் புள்ளியியல், சி.ஏ, சட்டம், எம்.பி.ஏ, கம்பெனி நிர்வாகம் சார்ந்த படிப்புகள் எல்லாமுமே ஏற்றவை. மருத்துவத் துறையில் இ.என்.டி, நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட படிப்புகளில் தனித்துவம் பெற முடியும்.
நான்காம் பாதத்தில் பிறந்தவர்களை சந்திரன் ஆளுகிறார். நட்சத்திர அதிபதியும் சந்திரனாக வருவதால், சந்திரனின் இரட்டிப்புத் திறன் இவர்களிடத்தில் செயல்படும். ராசியாதிபதி சுக்கிரன் சந்திரனை கூடவே ஜொலிக்க வைப்பார். 9லிருந்து ராகு தசை தொடங்கும்போதே, இவர்களது பாதத்தின் அதிபதியான சந்திரனை ராகு கவ்வும். இந்தப் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுத்தான் பிடிக்க வேண்டும். கொஞ்சம் அதீத பிடிவாத குணத்தோடு இருப்பார்கள். மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குவார்கள். ராகு தசை நடைபெறுவதால் திடீரென்று தொண்ணூறு மார்க் எடுப்பார்கள். அடுத்த தடவை நாற்பதுதான் வரும். இப்படி ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். தியரியை விட பிராக்டிகலில் வெளுத்து வாங்குவார்கள். ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டில் எப்போதுமே முதல் மாணவராக வருவார்கள். ஓரளவு நல்ல மதிப்பெண்களை எடுத்து 12ம் வகுப்பில் தேறுவார்கள். கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன், மரைன் எஞ்சினியரிங், ஆங்கில இலக்கியம், சட்டம் என்று திட்டமிட்டுப் படித்தால் போதும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்வியை அருள்பவராக புதன்தான் முக்கியமாக வருகிறார். மேலும், புதனும் வித்யை அருளும் அம்பாளும் ஒரே தலத்தில் இருந்தால் அது இன்னும் நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஓர் தலமே திருவெண்காடு ஆகும். இத்தலத்தில் புதன் பகவானுக்கு தனி சந்நதி உண்டு. மேலும் இத்தல அம்பாளின் திருநாமமே பிரம்ம வித்யாம்பிகை என்பதாகும். அம்பாளின் திருப்பெயரிலேயே கல்வி அருளும் நிரம்பியுள்ளது. இந்த அம்பாளை தரிசிக்க, கல்வி கைகூடும். திருவெண்காடு எனும் இத்தலம் சீர்காழியிலிருந்து பதினைந்து கி.மீ. தொலைவில்
உள்ளது.
Similar Posts :
ரோகிணி நட்சத்திர பலன்கள்,
ரோகிணியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?, See Also:
ரோகிணி