ஸாந்த ப்ரும்மம் - ஸந்த் ஏக நாதர் பாகம் - 07

Navaneethakrishnan:

ஏகநாதர் பிரதிஷ்டானபுரத்தில் அவரது ஆஸ்ரமம் என்ற பெயரில் இருந்த அந்த பழைய சிறிய குடிசைக்குப் பின்னாலேயே ஓடும் ஒரு ஆற்றில் தான் தினமும் அவர் ஸ்நானம் செய்வார்.

அன்றும் வழக்கம் போலவே சூர்யோதயத்துக்கு முன்பே ஆற்றங்கரைக்கு வந்துவிட்டார்.

சாவதானமாக, அன்றாடம் செய்யும் மாதா பிதா, குரு தெய்வத்துக்கு எல்லாம் பிரார்த்தனையோடு நித்யானுஷ்டானங்கள் பண்ணி முடிப்பார்.

விட்டலன் மேல் புதிதாக இயற்றிய அபங்கங்களைப் பாடிக்கொண்டே ஆற்றின் குளிர்ந்த நீரிலிருந்து மெதுவாகக் கரை ஏறுவார்.

அன்று விசேஷமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அவர் ஆற்றங்கரைக்கு வரும்போது ஒரு தீண்டத்தகாத பெண்ணை அவளது சிறு குழந்தையோடு பார்த்தார். அவரைப் பார்த்து வணங்கி விட்டு அவள் வழி விட்டாள். அவளையும் குழந்தையையும் வாழ்த்திவிட்டு அவர் ஆற்றில் இறங்கினார்.

கரை ஏறும்போது தான் கவனித்தார். அந்தச் சின்னஞ் சிறு சிசு ஆற்றங்கரையில் மணலில் இன்னும் விளையாடிக் கொண்டு இருந்தது.

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அழுததால் அவரது கவனத்தை ஈர்த்தது.

அதன் தாய், அந்த தாழ்ந்த குலப்பெண்ணை எங்குமே காணோமே. ஆற்றில் பார்வையைவிட்டார் அவள் எங்கும் கண்ணில் படவே இல்லையே. நிறைய பேர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். குழந்தை அருகிலேயே சென்றாலும் ஏனோ அவர்கள் அந்தக் குழந்தையைப் பற்றி சிறிதும் அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை.

ஆஸ்ரமத்தின் அருகிலேயே ஒரு ஒதுக்கப்பட்ட தீண்டத்தகாத தாழ்ந்த குடிமக்கள் வசிக்கும் பகுதி இருந்தது அவருக்கு தெரியும். அவர் தான் அந்தப் பகுதிக்கு அடிக்கடி சென்று அந்த மக்களுக்கு உபதேசம் எல்லாம் செய்வார். பஜனைகளில் பங்கேற்க வைத்து அவர்களோடு ஒற்றுமையாய் வித்யாசமின்றி பழகுவார்.

ஒருவருமே லட்சியம் பண்ணாமல் போனாலும் ஏக்நாத் அருகே சென்று அதை ஆசையாக பாசமாகத் தூக்கிக்கொண்டு அதோடு விளையாடிக் கொஞ்சிக் கொண்டு அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார்.

அங்கு தான் அந்தக் குழந்தையின் தாய் வீடு இருக்க வேண்டும். ஒரு சில வீடுகளில் விசாரித்ததில் அந்தக் குழந்தையின் வீடு கண்டு பிடித்தார்.

அந்தப்பெண் அந்த வீட்டில் கிடந்தாள், உடம்பெல்லாம் காயம், அருகே ரெண்டு மூன்று குடங்களில் நீர், அருகே விசாரித்தார்.

அவள் ஆற்றில் நீர் மொண்டு வர குடங்களோடும் குழந்தையோடும் சென்றாள் அல்லவா? சிறிது நேரத்தில் அவள் கணவன் அங்கு வந்திருக்கிறான்.

அவன் அவளை வீட்டுக்குத் தர தர வென்று இழுத்து வந்திருக்கிறான். குடங்களில் நீரோடு வந்தவள் குழந்தை! குழந்தை! என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை, அவன் ஒரு குடிகாரன்.

அவளை அவன் காரணமில்லாமல் அடிப்பான், துன்புறுத்துவான், சில சமயங்களில் குழந்தையும் அவன் கொடூரத்தில் அடிபடுவது உண்டு.

வீட்டுக்கு வந்தவளை ஏதோ சண்டை போட்டு நன்றாக அடித்துவிட்டு அவள் நகைகளைப் பறித்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

பலத்த அடிபட்ட அந்தப் பெண் அரை மயக்கமாக கிடந்ததால் மீண்டும் ஆற்றங்கரைக்குச் சென்று குழந்தையை அழைத்து வரச் செல்ல முடியவில்லை.

அந்த வீட்டில் வெகுநேரம் இருந்து அந்த பெண்ணுக்கு சிச்ருஷை செய்து அவள் எழுந்து உட்கார்ந்தவுடன் நடந்ததைச் சொல்லி குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு ஆஸ்ரமம் திரும்பினார் ஏக்நாத்.

பிரதிஷ்டானபுர பிராமணர்கள் ஆரவாரம் செய்தனர். ஆற்றங்கரையில் ஒரு ஹரிஜனக் குழந்தையை எவ்வாறு அவர் தொட்டு தூக்கலாம்? எவ்வாறு அவர்கள் வாழும் பகுதிக்குள் சென்றதோடல்லாமல் அவள் குடிசையில் இருந்துகொண்டு அவளுக்கு கஞ்சி ஆகாரம் செய்துகொடுத்து குழந்தையோடு கொஞ்சி ஆசாரத்துக்கு விரோதமாக நடக்கலாம்?.

அவரை வணங்கக்கூடாது, அவரது ஆஸ்ரமத்துக்கு யாரும் போகக்கூடாது அவர் உடனே பிராயச்சித்தம் பண்ணவேண்டும், தீட்டுகளையப்பட வேண்டும், பிராமணர்களுக்கு தக்ஷிணை தானங்கள் கொடுக்கவேண்டும்.

கங்கைநீரைக் கொண்டுவந்து அவருக்கு ஸ்நான மந்திரங்கள் சொல்லி அவர் பாவம் கழுவப்படவேண்டும். பிறகே அவர் சமூகத்தில் எற்றுக் கொள்ளப்படுவார்.

மகான் பானுதாசர் குலத்தில், குடும்பத்தில் பிறந்து இப்படிப்பட்ட கெட்ட பேரைப் பெற்றுவிட்டாரே, இந்த மனிதர் இவர் ஒரு மகாபாவி என்று பிராமணர்கள் கொதித்தனர்.

ஏக்நாத் துளிக்கூட வருந்தவில்லை..

பிரதிஷ்டானபுர பிராமணர்கள் தன்னை பிரஷ்டம் பண்ணினாலும், ஹரிஜன் குடும்பத்திற்கு உதவியதற்காக பிராயச்சித்த பரிகாரஸ்நானம் செய்ய வைத்தாலும், தான தர்மங்கள் தட்சிணைகள் கொடுக்க வைத்தாலும் அதற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.

"உங்கள் திருப்திக்கு" என்று அவர்கள் செய்யச் சொன்னதற் கெல்லாம் சம்மதித்தார் ஏக்நாத்.

அவரை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்றார்கள் பிராமணர்கள், மந்திரம் ஓதினார்கள், என்னென்ன தானம் செய்யவேண்டுமோ அந்த பொருள்களை எல்லாம் கொண்டு வரச் சொன்னார்கள்.

புண்ய நதித் தீர்த்தங்கள் எல்லாம் ப்ரோக்ஷணத்துக்கு வந்து சேர்ந்தது.

அவரை பணத்தாலும், மனத்தாலும் எவ்வளவு கஷ்டப்படுத்தமுடியுமோ அவ்வளவுக்கும் ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் அவற்றை நடத்த ஆரம்பிக்கும் போது தான் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

பிரதிஷ்டானபுரத்துக்கு ஒரு வயதான சாஸ்திரங்கள் படித்த ஒரு பிராமண பண்டிதர் வந்தார்.

அவருக்கு உடல் முழுதும் கருத்து தோலெல்லாம் உதிர்ந்து கடும் தொழுநோய் கொடுமையால் வாடிக்கொண்டிருந்தார். பல க்ஷேத்ரங்களுக்குச் சென்று வேண்டியும் நோன்பிருந்தும் பயனில்லை.

மருந்துகள் ஒன்றும் குணப்படுத்தவில்லை ஒரு மகானிடம் சென்றார், அவர் நீ ஏக்நாத்திடம் செல், அவர் சமீபத்தில் செய்த புண்யபலனை உனக்கு தாரை வார்த்துக்கொடுத்தால் உனக்கு குணமாகலாம். அந்த வயதான பிராமணர் சிறந்த பண்டிதர், ஞானஸ்தர் என்று பிரதிஷ்டானபுர பிராமணர்களால் போற்றப்பட்டவர். அவரது சம்ச்க்ரித்த ஞானம் பிரமிக்க வைத்தது அவர்களை.

ஆற்றங்கரைக்கு அந்த வயதானவர் வந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. இவர் எதற்கு இங்கு வந்திருக்கிறார். ஒருவேளை ஏக்நாத்தின் பிராயச்சித்த கார்யங்களில் பங்கேற்று தனக்கும் தான தர்ம தஷிணை பெறுவதற்கோ?

வாருங்கள் தீட்சிதரே, என்ன விசேஷமாக இங்கு வந்தீர்கள்?

" பிராமணர்களே நான் இங்கு வந்ததே ஒரு மகானின் அறிவுரைப்படியே தான் என்றார்.

எனக்கு தீராத இந்த வியாதி வாட்டி வதைப்பது உங்களுக்கு தெரியும், பல வருஷங்களாக அலைந்து திரிந்து பல க்ஷேத்ரங்களுக்கு சென்று மருந்துகள் உண்டும் குணமாகவில்லை. நேற்று கனவிலே ஒரு மகான் தோன்றினார், யார் அவர்? என்று உங்களுக்கு தெரிய வேண்டுமானால் அவர் ஆலண்டியில் ஜீவ சமாதியான ஞானேஸ்வர்தான்.

"உனக்கு வியாதி குணமாக ஒரு வழி நீ ஏக்நாத்திடம் யாசகம் கேட்பதுதான் ."

"என்ன யாசகம்" என்று நான் கேட்டேன்

"அவர் கடைசியாக செய்த நல்ல காரியத்தின் புண்ய பலனை அவரிடம் யாசகமாக கேள், அவர் அதை உனக்கு அளித்தால் உன் வியாதி குணமாகும்" என்றார் அந்த மகான்.

ஏக்நாத் இங்கு இருப்பதாக அறிந்து உடனே வந்தேன் என்றார் முதியவர்.

"தீட்சிதரே இந்த ஏக்நாத் கடைசியாக செய்த நல்ல கார்யம் என்ன தெரியுமா?

ஹரிஜன் வீட்டில் புகுந்து அவர்களோடு பழகி அவர்களைத் தொட்டு அங்கே உண்டது தான்" என்று பிராமணர்கள் கேலி செய்து சிரித்தனர்.

"அப்படியா! எதற்கு அவ்வாறு செய்தார்? நீங்களே சொல்லுங்கள் ஏக்நாத், ஏன் அவ்வாறு செய்தீர்கள்"

"நிராதரவாக இருந்த ஒரு ஏழைக் குழந்தைக்கு உதவினேன், அதன் தாயிடம் கொண்டு சேர்த்தேன், உதவியின்றி மயங்கிக்கிடந்த அந்த இளம் தாய்க்கு கஞ்சி வைத்து கொடுத்தேன், பசித்த குழந்தைக்கும் கஞ்சி புகட்டினேன் அவர்கள் அனைவரும் ஹரிஜன் பகுதியில் வாழ்பவர்கள்.

விட்டலன் படைத்துக்காக்கும் உயிர்களில் வித்யாசமே கிடையாதே.

நாமாக உண்டாக்கும் வித்தியாசங்களுக்குத்தான் நான் ஒரு குற்றவாளியாக, நான் செய்த பாவத்துக்கு பிராயச்சித்த பரிகாரஸ்நானம், புண்யாஹவாசனம் எனக்கு இங்கு நடக்கிறது.

நான் கடைசியாக ஒரு நல்ல புண்யகாரியம் செய்யவில்லையே இந்த பாவத்தைத் தவிர” என்றார்.

"ஏக்நாத், பிராமணர்கள் உண்டாக்கிய சில சாஸ்திர சம்பிரதாயங்களில் பரிகாரம் செய்யப்பட்டாலும், எனக்கென்னவோ நீங்கள் கடைசியாக செய்தது புன்யபலனையே அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக்கு உங்கள் புண்ய பலனை தானமாகத் தருவீர்களா இப்போது"என்றார்.

பிராமணர்கள் முன்னிலையில் ஆற்று ஜலத்தை கையிலேந்தி இரு கைகளையும் அந்த வயதான முதிய தீட்சிதரின் கைகள் மேல் வைத்து “நான் அந்த ஹரிஜன் குடும்பத்துக்கு செய்தது புண்யகாரியமாக இருந்தால் அதன் பலன் முழுதும் இந்த பிராமணருக்கு போகட்டும்" என்று விட்டலனை வேண்டி தாரை வார்த்துக்கொடுத்தார்.

என்ன ஆச்சர்யம்! அந்த முதியவர் ஆற்றில் முழ்கி எழுந்தபோது அவர் மேனி பொன்னாக ஜொலித்தது .

சாஷ்டாங்கமாக ஏக்நாத்தின் காலில் விழுந்து வணங்கினார் தீட்சிதர்.

பிராமணர்களும் அவ்வாறே செய்தனர் என்பது சொல்லாமலே உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மீண்டும் நாளை சம்பவம் தொடரும்..

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி
 
Top