கல்விக்கு சரஸ்வதி பூஜை, பகை வெல்ல வாராஹி வழிபாடு

கல்வியில் மேம்பட சரஸ்வதி தேவியையும் பூமி சம்பந்தமான பிரச்னைகள், பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் ஆகியன நீங்க வாராஹியையும் வழிபட உகந்தது வசந்த பஞ்சமி.

அம்பிகையை முழு முதல்கடவுளாக வழிபடும் மார்க்கத்துக்கு சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் அம்மனை வழிபட ஓர் ஆண்டில் நான்கு நவராத்திரிகளை வகுத்துள்ளனர். அவை, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வாராஹி நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி ஆகியனவாகும்.

இதில் சியாமளா நவராத்திரி என்பது தை மாத வளர்பிறை நாட்களில் கொண்டாடப்படுவது. வட இந்தியாவில் இந்த நவராத்திரியை விசேஷமாகக் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக, சியாமளா நவராத்திரியில் வரும் வசந்த பஞ்சமி மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

வட இந்தியாவில் சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் வசந்த பஞ்சமியையே சரஸ்வதி பூஜையாகக் கருதி வழிபாடு செய்கிறார்கள்.

சரஸ்வதி படத்தையோ, விக்ரகத்தையோ வைத்து அதை மலர்களாலும் சந்தன குங்குமங்களாலும் அலங்கரித்து வழிபாடு செய்வர். மேலும், கல்விக்குரிய பொருள்களையும் பூஜையில் வைப்பர். கல்வியாண்டில் இந்த வசந்த பஞ்சமிக்குப் பின்புதான் முக்கியமான தேர்வுக்காலங்கள் தொடங்குவதால் மாணவர்கள் மிகவும் பக்தியோடு வழிபடுவர்.

அம்மனுக்கு முன்பாகக் கருவிகளைக் கொட்டி வைத்து சிறு குழந்தைகள் அவற்றில் எதை எடுக்கிறார்களோ, அதில் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

இந்த பூஜையை அனைவருமே மேற்கொள்ளலாம். சரஸ்வதியை வெண்ணிற மலர்கள் கொண்டு வழிபடுவது விசேஷம். சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். அன்னைக்கு பால் பாயசம், தேங்காய், பழம் முதலியன நெய்வேதனம் செய்யலாம்.

ஒரு வசந்த பஞ்சமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணன், தன் இளம் வயதில் சாந்தீபனி முனிவரிடம் கல்வியை கற்றுக் கொள்ள குருகுல வாசம் தொடங்கினார். இது ஒரு மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும்.

இந்த வருடம் இந்த வசந்த பஞ்சமி 5-2-2022 இன்று தான் கொண்டாடப்படுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால், அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம், ஞானம் கிடைக்கும்.

நம் உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளி தோன்றி வசந்தம் வீசும்.

பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி ஆகும். பஞ்சமி என்பது மாதந்தோறும், வளர் பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமிக்கு கருட பஞ்சமி என்றும், புரட்டாசியில் வரும் வளர்பிறை பஞ்சமிக்கு ரிஷி பஞ்சமி என்றும் பெயர்.
பொதுவாகவே பஞ்சமி என்பது வாராஹி அம்மனை வழிபட உகந்த திதி. குறிப்பாக, இந்த வசந்த பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ வாராஹி - மன சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் இந்தத் தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்தமாதர்களின் மகிமையை தேவிமஹாத்மியம் முதலான ஞானநூல்கள் விரிவாக விளக்குகின்றன.

இந்த நாளில் விரதமிருந்து மாலை வாராஹி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும். மேலும், பூமி தொடர்பான பிரச்னைகள் தீர வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக, வசந்த பஞ்சமி அன்று வாராஹி வழிபாடு செய்வது மிகவும் சிறப்புவாய்ந்தது.

ஸ்ரீவாராஹிதேவிக்கு , தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து வாராஹியை வழிபட்டால் வரங்கள் கிடைக்கும்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து
 
Top