ஏழரை சனியில் துன்பப்படுபவர்கள் இந்த சுயம்பு சனிபகவானை தரிசித்தால் அனைத்துவிதநன்மைகள் வந்தடையும்

சனீஸ்வர பகவான் தலநாயகனாக, முதல் மூர்த்தியாக தனித்தெய்வமாக இங்கே கோவில் கொண்டிருக்கிறார். தேனி பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஓடும் குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சில தலங்களில் தனியாக இருந்தாலும் அங்கு உபசன்னிதியாகவே உள்ளது. ஆகையால் சனீஸ்வர பகவானுக்குக் குச்சனூரான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. செண்பக நல்லூர் என்று அழைக்கப்பட்ட பழைமையான இவ்வூர் சிறந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது.

சுயம்புவாகத் தோன்றிய சனி

சுயம்புவாகத் தோன்றிய சனி பகவானுக்குக் கோயில் கூரையைக் குச்சுப்புல்லால் வேய்ந்ததால் சனி பகவானைக் குச்சன் என்றும் அழைத்தனர். குச்சன் (சனி பகவான்) குடி கொண்டுள்ள ஊர் நாளடைவில் குச்சனூர் என வழங்கலாயிற்று. இன்றும் சனி பகவானைக் குச்சனூரான் என்று அழைப்பதைக் காணலாம்.

ஆலயத்தின் சிறப்புகள்

மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூலவர் சுயம்புவாக விடத்தலை மரத்தின் கீழே தோன்றியவர். லிங்க வடிவில் சற்று அகன்றுள்ள இவரது தோற்றம் காண்போர் மனதைக் கவரும் தன்மையுடையது. சனி பகவானுக்குரிய கருமையும் அழகும் கொண்டது. மூலவருக்கு அருகில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ளார். ஆண்டுக்கொரு முறை பவனி வருபவர் உற்சவ மூர்த்தியேயாவார்.

சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஒரே இடம் குச்சனூர்தான். சனீஸ்வர பகவான் இரகுவம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றில் திருநாமம் தரித்தும், பட்டை அணிந்தும் காணப்படுகிறார். முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியமாகி இருப்பதால் மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன.

சனீஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் இது. இங்கு சனி பகவானின் லிங்கம் சுயம்புவாக வளர்ந்துகொண்டே இருப்பதாகவும், மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஐதீகம். சனி தோஷம் உள்ளவர்கள் தங்கள் குறைகளை உணர்ந்து இங்கு வந்து வேண்டிக்கொண்டால் சனீஸ்வர பகவான் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மை அளிப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

உப சன்னிதிகள்

சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ள மண்டபத்தையொட்டி வலப்புறம் சுப்பிரமணியர் சன்னிதியும், அதனையடுத்து விநாயகரும், இடப்புறம் லாட சன்னியாசியின் கோயிலும் அமைந்துள்ளன. சனி பகவான் கோயிலுக்குச் சற்று தூரத்தில் வாய்க்கால் கரையில் சோணைக் கருப்பண சுவாமியின் ஆலயமும், அதன் பக்கத்தில் கன்னிமார் கோயிலும், நாகர் கோயிலும் உள்ளன. தல விருட்சமாக விடத்தலை மரம் அமைந்துள்ளது.

💥🪔🙏

காகத்துக்குத் தளிகை

விடியற்காலம், உச்சிகாலம், சாயங்காலம் ஆகிய மூன்று வேளைகளிலும் நாள்தோறும் தவறாமல் பூஜை நடைபெறும். ஆகம முறைப்படி தூப தீப தளிகைகளுடன் அர்ச்சனை முதலியனவும் நடைபெறும். உச்சிகால பூஜை முடிந்தவுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாகிய காகத்துக்குத் தளிகை அளித்த பின்னரே பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும்.

சில சமயங்களில் காகம் தளிகை ஏற்காவிடில் அப்படியே அன்றைய நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்து பக்தர்களும், பூசாரிமார்களும் மன்னிப்புக் கேட்பார்கள். பின்னர் காகம் தளிகை ஏற்க வரும் என்கிறார்கள். இது இன்றும் நடைபெறும் அதிசயங்களுக்குள் ஒன்று எனப் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். பகவானுக்குப் பிரியமான எள் என்பதால் ஏனைய பொங்கலுடன் எள் பொங்கல் படைப்பதைப் பெரும்பாலும் காணலாம்.

திருவிழாக்கள்

ஒவ்வொரு வருடமும், ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகள் திருவிழா நடைபெறுகிறது. இதில் மூன்றாம் சனிக்கிழமை மிகவும் விஷேசமானது. ஆடிமாதம் முதல் சனிக்கிழமை கலிப்பணம் கழித்து சுத்த நீர் தெளித்து காகம் பொறித்த கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

மூன்றாவது சனிக்கிழமை அன்று பகவான் திருக்கல்யாணமும், அடுத்தநாள் அதாவது மூன்றாம் சனிக்கிழமை இரவு சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாற்றுதல் ஆகிய முக்கிய விசேஷங்கள் நடைபெறு கின்றன. மறுநாள் உற்சவர் சர்வ அலங்காரத்தோடு ரதத்தில் பவனி வருகிறார். ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும் இடைக் காலத்தில் திருவிழா நடைபெறும். பெயர்ச்சி நேரத்தில் விசேட அலங்காரத்தோடு பகவானுக்குப் பூஜை நடத்தப்படுகிறது.

தோஷங்கள் விலகும்

சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவான் கோயிலுக்குச் சென்று கோயிலை வலம்வந்து அர்ச்சனை செய்து பூஜித்து விரதமிருக்க சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். வலம் வரும்போது ‘ஓம் மந்தாய நம’ என்று சொல்லிக்கொண்டு வருவது நலம் பயக்கும். இத்திருத்தலத்தில் சுயம்பு சனீஸ்வர பகவானைத் தரிக்க வரும் பக்தர்கள் தேங்காய், பழம், எள், நவதானியம், பூசணி, நெல், நல்லெண்ணெய் போன்ற பொருட்களை வைத்து பூஜிக்கலாம். அன்னதானமும், ஏழைகளுக்கு ஆடைகளைத் தானமாகவும் வழங்கலாம்.

பூஜித்த தேங்காய், பழம், பொங்கல் போன்ற பிரசாதங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம். இத்திருத்தலத்துக்கு வேண்டும்போதெல்லாம் வந்து தரிசிக்கலாம். தரிசித்த பின்பு திரும்பிப் பார்க்கலாம். திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது தவறான நம்பிக்கையாகும். திரும்பத் திரும்பப் பார்ப்பதால் தோஷத்தின் வேகம் குறைகிறது.

மற்ற தெய்வ படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதுபோல் சனீஸ்வர பகவானையும் வழிபடலாம். குச்சனூரில் சுயம்புவாகத் தோன்றிய சனீஸ்வர பகவானை மட்டும் வழிபட்டால் போதும். இதுவே சிறந்த பரிகாரம். நாமும் சனீஸ்வர பகவானை வழிபட்டுத் துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பம் பெறுவோம்.
 
Top