புருஷா மிருகம்

இடுப்புக்கு மேலே மனித வடிவமும் கீழே புலி வடிவமும் கொண்டது புருஷா மிருகம்.

வேகமாக ஓடக்கூடிய புருஷாமிருகத்தை வெல்வதற்கு அதன் பலவீனத்தை அறிந்துவைத்திருந்தான் பீமன்.
புருஷாமிருகம் மிகச்சிறந்த சிவ பக்தன்.
எங்கேயாவது சிவலிங்கத்தைப் பார்த்து விட்டால் சிவ பூஜையை முடித்துவிட்டுத் தான் அது பயணத்தைத் தொடரும்.
மகாபாரதத்தில் இந்த உத்தியை பீமன் எப்படிக் கையாண்டான் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தர்மர் ராஜசூய யாகம் செய்யத் தொடங்கினார்.
யாக சாலையைத் தூய்மை செய்வதற்காக அவர் பீமனை அழைத்து,
பீமா நீ போய் புருஷாமிருகத்தை அழைத்து வா என உத்தரவிட்டார்.
புருஷாமிருகம் என்பது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு.
புதுமனை புகுவிழாவின்போது பசுவையும் கன்றையும் புதுமனையில் உலாவரச் செய்வதைப்போல
யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வரச்செய்வார்கள். அதை முன்னிட்டே தர்மர் அந்த மிருகத்தை அழைத்து வருமாறு பீமனிடம் சொன்னார். பீமனும் சென்று புருஷாமிருகத்தை அழைத்தான்.
அது வருவதற்கு ஒப்புக்கொண்டது.
என்றாலும் ஒரு நிபந்தனை விதித்தது

பீமா நான் உன் பின்னால் வருகிறேன்.
ஆனால் உனக்கும் எனக்கும் எப்போதும் நான்கு காத தூரம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி குறைந்தால் நான் உன்னைப் பிடித்துக் கொன்று தின்றுவிடுவேன் இதற்கு நீ ஒப்புக்கொண்டால் உன்னுடன் வருகிறேன் என்றது. பீமன் ஒப்புக் கொண்டான். புருஷாமிருகம் அப்படியென்றால் சரி நீ முன்னால் ஓடு
நீ நான்கு காத தூரம் தாண்டியதும் நான் இங்கிருந்து புறப்படுவேன்’ என்றது.
மிருகமாக இருந்தாலும் என்னவொரு நீதி நியாயம் ஓட்டம் துவங்கியது.
வேக வேகமாக ஓடிய பீமனைப் பின்தொடர்ந்து ஓடிய புருஷாமிருகம் ஒரு கட்டத்தில் பீமனை நெருங்கிவிட்டது.
உடனே பீமன் புருஷாமிருகத்தின் பார்வையில் படும்படியாக ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு மேலே ஓடினான்.

புருஷாமிருகம் சிவலிங்கத்தைப் பார்த்ததும் தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு
மீண்டும் ஓட்டத்தைத் தொடங்கியது.
அதற்குள் பீமன் வெகு தூரம் ஓடிவிட்டான். எனினும் சற்று நேரத்துக்குள்ளாகவே புருஷாமிருகம் பீமனை நெருங்கிவிட்டது. பீமன் மீண்டும் ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, ஓட்டமாய் ஓடினான். புருஷாமிருகமும் சிவ பூஜையை முடித்துவிட்டு பிறகு ஓட்டத்தைத் தொடர்ந்தது. இதே உத்தியைக் கையாண்டு வேக வேகமாக ஓடிய பீமன் தனது எல்லைக்குள் ஒரு காலை வைத்தான்.அடுத்த கால் எல்லைக்கு வெளியே இருந்தது.
புருஷாமிருகம் பீமனின் அந்தக் காலைப் பிடித்துக்கொண்டு பீமா உன்னைப் பிடித்துவிட்டேன். இனி நீ எனக்கு உணவாக வேண்டிதுயதான் என்றது.

பீமனோ அதை மறுத்தான். இல்லை இல்லை என் எல்லைக்குள் நான் காலை வைத்துவிட்டேன் என்று வாதாடினான்.
முடிவாக தர்மரிடம் போய்ச் சொல்லலாம்.
தர்மம் தவறாத அவர் என்ன தீர்ப்பு சொல்கிறாரோ அதன்படி செய்யலாம்
என்று ஏகமனதாக முடிவானது. பீமனும் புருஷாமிருகமும் தர்மரிடம் போய் நடந்ததைச் சொன்னார்கள். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்மர் பீமா உன்னுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லையில் இருக்கும்போது அது உன்னைப் பிடித்துவிட்டதால் உன் உடலில் சரிபாதியை புருஷாமிருகத்திடம் கொடுத்து விடுவதுதான் நியாயம் என்று தீர்ப்பு வழங்கினார். சொந்தத் தம்பியாக இருந்தாலும் அவனுக்குச் சாதகமாக பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்காமல்
தர்ம நெறிப்படி நடந்துகொண்ட தர்மரை அனைவரும் பாராட்டினார்கள். புருஷா மிருகமும் தர்மரைப் பாராட்டி விட்டு மறைந்தது.

தர்மரின் நடுநிலை தவறாத தன்மை, பீமனின் உயிரைக் காத்தது. தந்திரத்தோடு இயங்குவதற்கு பீமனும் தந்திரம் தோற்கும்போது நியாயமே வெல்லும் என்பதற்கு தர்மரும் உதாரணமாகிறார்கள். சிவ பக்தரான வியாக்ரபாத மகரிஷியே புருஷா மிருகமாக ஆனதாக வரலாறு உண்டு.
புருஷா மிருகம் விஷ்ணு நாமத்தை கேட்க விரும்பாத ஒரு வினோத ஜந்து.
தர்மர் நடத்திய ராஜசூய யாகத்திற்கு புருஷமிருகத்தின் பால் தேவைப்பட்டது.
அதை எடுத்து வர பீமனுக்கு தர்மர் உத்தரவிட்டார். பீமரிடம் 12 ருத்ராட்ச கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும் படி ஸ்ரீகிருஷ்ணன் கூறினார்.
அவர் கொடுத்த ருத்ராட்ச கொட்டையுடன் காட்டிற்கு சென்றான் பீமர்.

புருஷாமிருகம் திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த பீமன் கோவிந்தா, கோபால என்று உரக்க கூறினார்.
தவம் கலைந்த புருஷா மிருகம் பீமனை துரத்தியது. அப்போது பீமன் ஒரு ருத்ராட்சத்தை தூக்கி எறிந்தான். அது சிவ லிங்கமாக மாறியது. உடனே புருஷாமிருகம் சிவனை பூஜிக்க தொடங்கியது. மீண்டும் பீமன் கோவிந்தா, கோபாலா என உரக்கக் கூறினார். மீண்டும் தவம் கலைந்த புருஷாமிருகம் பீமரை துரத்தியது.
மீண்டும் ருத்ராட்ச கொட்டையை எறிந்தான். அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம் பூஜித்தது.
இப்படி 11 ருத்ராட்ச கொட்டைகளை எறிந்து அவை சிவலிங்கமாக மாறிய பின் அதை புருஷாமிருகம் பூஜிப்பதும் பின்னர் துரத்துவதுமாக இருந்தது.
12வது இடத்தில் திருநட்டாலத்தில் ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷா மிருகம் பிடித்து பீமரை தாக்க முற்பட்டது.
அப்போது அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணன் பீமருக்கும் புருஷா மிருகத்திற்கும் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தினார்.
வைணவ வழி தோன்றலான பீமரும் சைவ வழி தோன்றலான புருஷா மிருகமும் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர்.
தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம். இதை உணர்த்தும் வகையில் சைவ வைணவ ஒற்றுமையை உணர்த்தும் கோவிந்தா கோபாலா கோஷத்துடன் மாசி மாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று மாலை யணிந்து சிவபக்தர்கள் கையில் விபூதியுடன் கூடிய மஞ்சள் பை மற்றும் பனை ஓலை விசிறியுடன் 12 சிவ ஆலயங்களுக்கும் ஓடி வருகின்றனர்.
🌹🙏💐ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏💐
 
Top