பஞ்சகிருத்தியங்களை அநாதி என்றல் எவ்வாறு?

பஞ்சகிருத்தியஞ் செய்யும் பதியும், அப்பஞ்சகிருத்தி யங்களில் அகப்படும் பசுவும், அநாதியாமாதலாலும், அனாதியாகிய பதி சிலகாலம் வாளாவிருந்து பின்னர்ப் பஞ்சகிருத்தியஞ் செய்யத் தொடங்கினரெனில், அவரை நிருவிகாரியென்றல் கூடாமையானும், ஒருவனிடத்தினின்றும் உயிர்ப்புண்டாயொடுங்குதல் சிலகாலஞ் சென்றபின்னர்த் தோன்றுதலின்றி ஓயாது எக்காலத்தும் வருதல் போல, பதியினின்றும் உண்டாகும் பஞ்ச கிருத்தியங்களும் சிலகாலத்துக்குப் பின்னர்த் தோன்றுதலின்றி ஓயாது எக்காலத்தும் வருமாதலாலும், பதி பஞ்சகிருத்தியம் அநாதியென்பதே சித்தம்.

இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் எப்பொழுது முத்தியடையும்?

பல சென்மங்களிலே நிஷ்காமியமாகச் செய்த புண்ணியங்களினாலே, மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நான்கு சத்திநிபாதங்களும் கிரமமாக வரும். அப்பொழுது கருணாநிதியாகிய சிவபெருமான் ஆசாரியமூர்த்தியை அதிட்டித்து, சிவதீக்ஷை செய்து, முறையே சரியை கிரியை , யோகம் ஞானங்களிலே நிறுத்துவர். இந்நான்கு பாதங்களின் வழிநின்றவர்கள் முறையே சாலோக சாமீப சாரூப சாயுச்சியங்களைப் பெறுவார்கள். இவைகளெல்லாம் சைவாகமங்களைக் குருமுகமாக வாசிக்கில், தெளிவாக விளங்கும்.

சைவதூஷண பரிகாரம் என்னும் நூலில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவர்கள்...
 
Top