கால சம்ஹார வீரட்டேசுவரர் திருக்கோயில் - திருக்கடையூர் (திருக்கடவூர்)

எட்டு வீரட்டத் தலங்களுள் ஒன்று. கால சம்ஹாரம் நடந்த தலம். வீரட்டேஸ்வரர் காலனை மாய்த்த கால காலர், கால சம்ஹார மூர்த்தி. அமுதக் கலசங்கள் லிங்கமான தலங்களில் ஒன்று

வழிபட்டவர்கள்
மார்கண்டேயர், மகா விசுணு, லட்சுமி, அகத்தியர், புலத்தியர், பூமிதேவி, யமன், காமதேனு, அசுவினி குமாரர்கள், சூரியன், பராசக்தி, சரசுவதி, எட்டு திசைக் காவலர்கள், சப்த மாதர்கள், சந்திர பூசண மகா ராசன், அவன் மந்திரி, குங்கிலியக் கலய நாயனார், காரி நாயனார் மற்றும் பலர் திருக்கடையூர் மயிலாடுதுறை மற்றும் சீர்காழிக்கு அருகே உள்ளது. திருக்கடவூர் பெரு வண்டி நிறுத்தம் அருகே கோயில் உள்ளது.

வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் (திருவாசகம்)

என கொடிய ஆலகால விடத்தை உட்கொண்டு அரி அயன் ருத்திரன் சக்தி லட்சுமி சரஸ்வதி உள்ளிட்ட தெய்வம் முதல் தாவரம் வரை அனைவரையும் அனைத்து உலகங்களையும் காத்து அருள் புரிந்த பரமேசுவரனது திருவருளால் பெறப்பட்ட அமுதம் வைக்கப்பட்டிருந்த கடம் (கலசம்) லிங்கம் ஆன ஊர் ஆதலால் கடவூர் என்று பெயர். ஈசன் திருவருளால் மார்கண்டேயர் மரணத்தைக் கடந்த ஊர் ஆதலாலும் கடவூர் எனப்பட்டது. ஈசனுக்கு அமுத கடேசுவரர் அமிர்தேஸ்வரர் என்றும் கால சம்ஹார மூர்த்தி என்றும் திரு நாமம்.

கடவூர்தனுள் வீரட்டத்து எம் அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே

என்று பதிகம் முழுவதும் சுந்தரர் போற்றுகிறார். மிருகண்ட முனிவரின் மகன் மார்கண்டேயர் பதினாறு வயது ஆயுள் காலத்துடன் பிறந்தவர். பதினைந்து வயது முடிந்தபோது பெற்றோர்களின் கவலை அறிந்த மார்கண்டேயர் தல யாத்திரை மேற்கொண்டு சிவாலயங்களை யெல்லாம் வழிபட்டு வந்தார். திருக் கடவூரை அடைந்து அமுத கடேசுவரரை வழிபட்டார்.

ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேலாய தேவர் எல்லாம் வீடுவர் காண் (திருவாசகம்)
என ஈசன் அன்று ஆலகால நஞ்சு உண்ணாமல் இருந்திருந்தால் பிரம்மன் திருமால் உள்ளிட்ட எல்லோருமே இறந்து போயிருப்பர் என்று நஞ்சு உட்கொண்டு எல்லோரையும் மரணத்திலிருந்து காத்து அருளிய அமுத கடேசுவரரின் அளவற்ற கருணையை நினைந்து நெஞ்சம் உருகிக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய மார்கண்டேயர் கடவூரில் தங்கி லிங்கப் பிரதிட்டை செய்து நாள்தோறும் பூசித்தார்.

நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் (சம்பந்தர்)
என சித்தம் ஒன்றி சிவ மயமாக்கி நன்கு மலர்ந்த புதிய பூக்களால் ருக் வேத மந்திரம் சொல்லி சிவபூசை செய்த மார்கண்டேயர் நமச்சிவாய நாமம் ஓதிக் கொண்டிருந்த போது ஆயுள் முடியும் நேரம் வந்ததால் யம தூதர்கள் மார்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்தனர். சிவ நாமம் ஓதிக் கொண்டிருந்த மார்கண்டேயரை நெருங்க முடியாத தூதர்கள் திரும்பிச் சென்றனர். தாட்சாயிணியாகப் பிறந்த பராசக்தியின் உயிரையும் மிகச் சுலபமாகப் பறித்து வந்த யம தூதர்கள் தோல்வியுடன் திரும்பியதால் எங்கும் நடக்காத அதிசயம் நடந்ததைக் கண்ட யமன் வியப்படைந்து தானே வந்தான். கயிற்றை பாலகர் மேல் வீசியபோது அந்தணச் சிறுவர் லிங்க மெய்ப் பொருளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டார். காலத்திற்கு அப்பாற்பட்ட எல்லாம் வல்ல கடவுளுடன் மார்கண்டேயர் உள்ளார் என்பதை உணராத யமன் மீண்டும் பாசத்தை வீசினான். பாசம் லிங்கப் பரம்பொருளின் மேல் பட்ட அளவில் பரமனது வீரக் கழல் அடியால் தூக்கி எறியப்பட்ட யமன் அலறி உருண்டு விழுந்து மாண்டான் . பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட ஈசன் மழுவும் சூலமும் பாசமும் தாங்கிக் கால காலனாக மார்கண்டேயருக்குக் காட்சி தந்தார்.

காலன் ஆருயிர் கொண்ட பூங் கழலாய் (திருவாசகம்)
காலனை உதைத்தவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர,
காலன் தன் உயிர் வீட்டு கழலடி (சம்பந்தர்)
ஆரா அமுதே அருளே போற்றி (திருவாசகம்)

என்று கால சம்ஹார மூர்த்தியாகக் காட்சி தந்த அமிர்தேஸ்வரரைப் போற்றித் துதித்து வணங்கிய மார்கண்டேயர் மரணமும் மீண்டும் பிறப்பும் இல்லாத பேரின்பப் பெருநிலை அடைந்து என்றென்றும் பதினாறாக ஈசனுடன் சிவ கணமாய் நிலை பெற்றார். கர்ப கிருகம் உயரமாக உள்ள மாடக் கோயிலான கடவூர் கால சம்ஹார வீரட்டேசுவரர் திருக் கோயிலில் அமுத லிங்கப் பரம் பொருளுக்கு வலது புறம் எதிரே தனி நுழை வாசல் கொண்டு விமானத்துடன் கூடிய அழகிய பெரிய சந்நிதியில் தெற்கு நோக்கி மிக அழகிய கால காலர் காட்சி தருகிறார். தீபாராதனையின் போது திருவடிக் கீழ் உள்ள யமன் உருவம் திறந்து காட்டப்படுகிறது. மற்ற நேரங்களில் பக்கமாக நகர்ந்து செல்லும் சிறு கதவினால் மூடப்பட்டுள்ளது. கால சம்ஹார மூர்த்திக்கு மேலே வலது புறம் யந்திரம் உள்ளது. மார்கண்டேயரின் வரலாறு காட்டும் சிற்பங்கள் ஞானேசுவரனாகிய தட்சிணா மூர்த்தி சந்நிதிக்கு மேலே உள்ளன. மார்கண்டேயருக்கு அருளிய கால சம்ஹாரரை ஒரு பதிகம் முழுவதும் திருநாவுக்கரசர் போற்றுகிறார். கால சம்ஹார மூர்த்தியின் திருக்காட்சி கண்டு அவரோடு நிலை பெற்ற ஒரே ஒருவர் மார்கண்டேயர் மட்டுமே.

பதியினைச் சென்று அணுகா பசு பாசம் (திருமந்திரம்)

என பிறப்பு உள்ள யாராலும் தூய சிவத்தை நெருங்க முடியாது, நிர்மல ஈசனோடு இருக்க முடியாது என்ற அடிப்படை சைவ ஞானமும் இல்லாத, சிவ இயல்பு தெரியாத சிவ விரோத ஆலய நிர்வாகம் காம தகனரான தனிப்பெரும் கால சம்ஹார மூர்த்தி அருகே பாலாம்பாள் என்று ஒரு கற்பனைப் பெண்ணை வைத்து வீரட்டேசுவரரை இழிவுபடுத்துகிறது. காலனை மாய்த்த கால சம் ஹார மூர்த்திக்கு மனம் போனபடி யெல்லாம் அலங்காரம் செய்யப்படுகிறது.

திருக் கடையூர் வீரட்டேசுவரரை மகா விசுணு, லட்சுமி, அகஸ்தியர், புலஸ்தியர், பூமிதேவி, யமன், காமதேனு, அசுவினி குமாரர்கள், சூரியன், பராசக்தி, சரசுவதி, எட்டு திசைக் காவலர்கள், சப்த மாதர்கள், சந்திர பூசண மகா ராசன், அவன் மந்திரி, குங்கிலியக் கலய நாயனார், காரி நாயனார் மற்றும் பலர் வழிபட்டு வளம் பெற்றுள்ளனர். மகா விசுணு திருக் கடையூரில் ஈசனை வழிபட்ட பின் வில்வ மரத்தடியில் லிங்கப் பிரதிட்டை செய்து பூசித்து நலம் பெற்றார். இந்த வில்வ வன லிங்கம் பெரிய தனிச் சந்நிதியில் உள்ளது. யானை லட்சுமி தனிச் சந்நிதியில் உள்ளாள். அகஸ்தியர் பூசித்த லிங்கம் கால சம்ஹார மூர்த்தி சந்நிதியில் அமைந்துள்ளது. உயிர் பறிக்கும் யமன் உயிர் இழந்து சவம் ஆனதால் பாரம் தாங்க முடியாமல் தவித்த பூமி தேவி அமிர்த லிங்கத்தையும் கால சம்ஹார மூர்த்தியையும் பூஜித்து வழிபட்டாள். புவனேசுவரன் யமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைத்தார். பூமி நாதர் அருளால் மீண்டும் உயிர் பெற்று எழுந்த யமன் குற்றம் பொறுக்கும் கயிலை நாதரின் பேரருளுக்கு மகிழ்ந்து போற்றி லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வணங்கினான். யம தர்ம ராஜன் பிரகாரத்தில் கால சம்ஹாரருக்கு நேர் எதிரே நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களுடன் உள்ளான். பூமி தேவி யமன் அசுவினி தேவர்கள் பிரதிஷ்டை செய்து பூசித்த லிங்கங்கள் பிரகாரத்தில் வரிசையாக உள்ளன. வீரட்டேசுவரரை வழிபட்ட காமதேனு சிவ பூசை செய்யும் காட்சி இரண்டாம் கோபுர வாசலில் சிற்பமாக உள்ளது. கால சம்ஹார வீரட்டேசுவரரான அமுத லிங்கப் பரம் பொருளைப் பூஜித்த இந்திரன் ஈசானன் வாயு வருணன் அக்கினி குபேரன் யமன் நிருதி ஆகிய எட்டு திசைக் காவலர் உருவங்கள் பிரகாரத்தில் எட்டு திசையிலும் காணப்படுகின்றன. வீரட்டேசுவரரை வழிபட்ட சப்த மாதர் உருவங்கள் தனித் தனியாகப் பிரகாரத்தில் வீர பத்திரரை அடுத்து உள்ளன. லட்சுமி சரசுவதி சக்தி ஆகிய மூன்று அம்மன்கள் பூசித்து வழிபட்ட லிங்கங்கள் பிரகாரத்தில் ஆலிங்கன மூர்த்தியை அடுத்து உள்ளன. திருக் கடையூர் அமுத லிங்கப் பரம்பொருளையும் கால சம்ஹார அழகரையும் வழிபட்ட பரா சக்திக்குப் பூவும் ருத்திராட்சமும் தாங்கி நந்தி வாகனத்துடன் தனியே கொடி மரம், மண்டபம் கொண்டு எதிர் திசையில் அமுதேசரை நோக்கிப் பெரிய தனிச் சந்நிதி பிற்காலத்தில் கட்டப்பட்டது. தனியே எந்த வாகனமும் இல்லாத அம்மனுக்கு கோபுரத்திற்கு வெளியே உள்ள இந்தச் சந்நிதியும் சீதை அருகே என்று பொருள் தரும் அபிராமி என்ற கற்பனைப் பெயரும் பிற்காலத்தவை. பழங்காலத்தில் அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. இஷ்ட தெய்வத்தின் மேல் பக்திப் பாடல்கள் பாடிய அபிராமி சந்நிதி அர்ச்சகரான அபிராமி பட்டர் பற்றிக் கூறப்படும் கதை பொது அறிவும் இல்லாதவர்களின் நாடகக் கற்பனைக் கட்டுக் கதையே என்பது இவர் மனம் போனபடி பாடிய ஆசைப் பாடல்களாகவும் ஆன்மீகச் சிதைவுகளாகவும் விளங்கும் அபிராமி அந்தாதியால் தெரிய வருகிறது.

நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் (சங்கப் பாடல்) என உமை நிறம் கருமை அல்லது நீலம். சிவப்பு வெள்ளை பொன்னிறம் அல்ல. ஆதலால் அம்பாள் முகம் பூரண நிலவு போல் இருக்க முடியாது . தோடு செயற்கை பொருள். அது கடவுள் படைத்த இயற்கையான நிலவாக முடியாது. ஈசனது முக்கண்ணில் ஒரு கண்ணாக இருக்கும் சந்திரனுக்கு ஒளி வழங்குவது சிவ பரம்பொருள் . தானே இயங்க முடியாத ஜடப் பொருளான கதவைப் பார்த்து தாள் திறவாய் மணிக் கதவே என்று பாடும் அர்த்தமற்ற குடிகாரத் திரைப்படப் பாடல் போன்றதே அபிராமி பட்டர் கதையும் அர்த்தம் அற்ற நாடகக் கற்பனையே
 
Top