கர்மவினை என்பது யாது?

ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரை நோக்கி பிறப்பெடுத்த அனைத்து உயிரினங்களும், வாழும் பொழுதும், இறந்த பின்பும் இன்ப, துன்பங்களை அனுபவிப்பது என்பது அந்தந்த ஜீவாத்மாக்களினால் செய்யப்பட்ட நல்வினையும், தீவினையும் முக்கியமான ஒரு காரணமாகும். பிறப்புகளிலேயே மிக உயரிய பிறப்பு என்பது மானுட பிறப்பாகும். ஏனெனில் மற்ற பிறவிகளை காட்டிலும் மானுட பிறப்பு என்பது பகுத்தறிந்து உணரும் தன்மையையும், சிந்தித்து செயலாற்றும் குணத்தையும் கொண்டிருக்கக்கூடியவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு பிறவியிலும் உடலுடன் கூடிய ஜீவாத்மா செய்கின்ற கர்மவினை என்பது அடுத்தடுத்த பிறவிகளிலும் பாவம் மற்றும் இன்ப கர்மாக்களாக நிழல் போல தொடரும். கர்ம வினையானது தன்னை செய்தவர் யார்? என்று அந்த வினையே அவர் எடுக்கும் அடுத்தடுத்த பிறப்புகளில் அந்த வினையின் பலன்களோடு சென்றடையும். கர்மவினை வினையை செய்தவன் யாரென்று எவ்விதம் அறிந்து கொள்கின்றது? என்று கருடாழ்வார் வினவினார்.

ஸ்ரீமந்நாராயணர் கருடனை நோக்கி கர்மவினை என்பது கர்மம் செய்த ஜீவாத்மாவை குறிக்கக்கூடியதாகும். உடல் என்பது அழியக்கூடிய ஒன்றாகும். ஆனால் ஜீவாத்மா என்பது அழிவதில்லை. அழியாத ஜீவாத்மாவிற்கு மாறாக மற்றொரு உடல் மட்டுமே கிடைக்கின்றது. மாறுபட்ட உடலுடன் ஜீவாத்மா இருந்தாலும், ஜீவாத்மாவின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப கர்மவினையும் அந்த ஜீவாத்மாவினை சென்றடைகின்றது. இது எவ்விதம் சாத்தியம்? என்றும் ஐயம் தோன்றலாம். ஆனால் இதுவே சாத்தியமாகும்.

பல பசுக்கள் நிறைந்து இருக்கக்கூடிய கூட்டத்தில் கன்றானது எவ்விதம் தன்னுடைய தாய் பசுவைத் தேடி சென்று தனக்கான பாலை அருந்துகின்றதோ, அதைப்போலவே கர்மவினையை செய்தவனை வினையே தேடிச் சென்று அவன் எடுக்கும் அடுத்தடுத்த பிறவிகளிலும் அந்த வினையின் பலன்களை அவனே அனுபவிக்க வேண்டும். கர்மவினையும் தன்னை செய்தவனை அடையாளம் கண்டுகொள்ளும். வளங்கள் நிறைந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மனிதர்கள் சொற்ப விஷயங்களுக்கும், அற்பத்தனமான எண்ணங்களுக்கும் தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அதாவது தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பது தீர்வல்ல. தற்கொலை செய்து கொள்வதன் மூலம் பாவங்கள் அதிகமாகும்.

செய்த செயலுக்கான வினையின் பலன்களை எடுக்கப்போகின்ற அடுத்த பிறவிகளிலும் வௌ;வேறு விதமான வழிகளில் கர்ம வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். பல பிறவிகளாக பிறப்பெடுத்து பல இன்னல்களை அனுபவித்து இன்னும் கர்ம வினைகள் மிச்சமாக இருக்கும் பட்சத்தில் அந்த கர்ம வினைகளின் பலனாகவே வறுமை கொண்ட குடும்பத்தில் தரித்திரம் உடையவராகவும் அல்லது உடல் பாகங்கள் குறைவுள்ள மூடனாக பிறந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்பொழுதும் சத்தியத்துடன் இருப்பதும், சத்தியமாய் நடந்து கொள்வதுமே பெரிய புண்ணியமாகும். தானங்களில் உயர்ந்த தானம் என்பது நில தானம் ஆகும்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப சத்தியத்தை மறைத்து பொய் உரைப்பதும், மற்றவர்களின் பொருளுக்காக ஆசைப்பட்டு பொய் பத்திரங்கள் எழுதுவதும் பெரும் பாவமாகும். பொய் சொல்லுபவர்களையும், பொய் பத்திரங்களை தயாரிப்பவர்களுக்கும் நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனை யாதெனில் நன்றாக சூடுபடுத்திய நிலையில் அந்த ஜீவாத்மா எண்ணெய் கொப்பரையில் தள்ளி நன்றாக வேக வைக்கப்படுவார்கள். ஒருவருக்கு தானமாக கொடுத்த நிலத்தினை மீண்டும் அவரிடமிருந்து பெறவோ அல்லது அந்த நிலத்தில் விளையும் பொருட்களினால் கிடைக்கும் லாபத்தை அவரை அனுபவிக்கவிடாமல் தடையாக இருக்கக்கூடியவர்கள் நரகத்தில் வீழ்ந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.

பாவம் செய்வதினால் ஏற்படும் இன்பம் என்பது பூமியில் எவ்வளவு அதிக அளவில் இருக்கின்றது? என்பதைவிட பன்மடங்கு செய்த பாவத்தின் விளைவாக உண்டான தண்டனையை உடல் இல்லாத ஜீவாத்மா பல காலங்கள் நரகத்தில் இன்பத்தை விட மேலான நரக வேதனையை அனுபவிக்கும். பிழைப்பிற்காக மற்றொருவர் செய்து கொண்டிருக்கும் தொழிலை எடுத்து அவரை வறுமையில் வாட செய்யக்கூடிய மானுடர்கள் ஆயிரம் பசுவை கொன்றதற்கான பாவத்தை அடைவார்கள்.

பாவம் செய்தவன் இறந்த பின்பு மல ஜலம் கலந்த வைதரணி நதியின் கரையை கடக்க உதவிக்கு துணையில்லாமல் ஜீவாத்மா பலவிதமான இன்னல்களை அவ்விடத்தில் அனுபவிக்கும். ஒருவரை வாழ வைப்பதற்காக அவருக்கு தேவையான உத்தியோகத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து பெறப்படும் உழைப்புக்கு உண்டான ஊதியத்தை வழங்கக்கூடியவர்கள் ஒரு லட்சம் கோதானம் செய்த பலன்களை அடைவார்கள்.

உத்தியோகத்தை மற்றவர்களுக்கு கொடுத்து அந்த உத்தியோகத்தில் அவர்களின் உடல் உழைப்பை சுரண்டி குறைந்த அளவு ஊதியத்தை கொடுக்கக்கூடியவர்கள் நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள். செய்த வினையானது அவர்களின் பரம்பரையை பாதிக்கக்கூடிய வண்ணமாக இருக்கும். ஏனெனில் உழைப்பு என்பது ஒருவரின

் மனம், ரத்தம் சார்ந்ததாகும். பசுக்களுக்கு துன்பத்தை இழைக்கக்கூடியவர்களும், பசுக்களை கொல்லக்கூடியவர்களும் மாபெரும் பாவம் செய்தவர்கள் ஆவார்கள். செய்த பாவத்தை அவர்களால் எந்த நிலையிலும் குறைக்க இயலாது.

ஒரு பசுவை கொன்றதற்காக ஒருவன் 100 பசுக்களை தானமாக கொடுத்தாலும் பசுவை கொன்ற பாவம் அவரை விட்டு அகன்று செல்லாது. ஒருவன் நல்ல ஒழுக்கத்தோடு வாழ்ந்து வேதங்கள் மற்றும் ஞான மார்க்கங்களில் இருக்கக்கூடிய சிறந்த சான்றோர்களை வழிபட்டு அவர்களுடைய யாக, தர்ப்பண பூஜைகளுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் வாழ்வாராயின் அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைகின்றார். நல்ல பண்பும், குணமும் உள்ள உத்தமன் ஒருவருக்கு தானமாக கொடுத்த பொருளை எந்த நிலையிலும், எந்த காரணத்தை கொண்டும் அவரிடமிருந்து அபகரிக்கக்கூடாது.

மனதில் வஞ்சனை கொண்டு தானமாக கொடுத்த பொருளை அவரிடமிருந்து மீண்டும் அபகரிப்பவர்கள் ஆண்டாண்டு காலத்திற்கும் மலப்புழுவாய் நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள். சான்றோருடைய பொருட்களை அவர்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக அபகரிப்பு செய்தவர்கள் காலாகாலத்திற்கும் நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள். கடவுளுடைய சொத்துக்களை ஆக்கிரமித்து அல்லது கோவில் சொத்துக்களையும், இடங்களையும் தங்களது வம்சாவழியில் மாற்றிக் கொண்டாலும், அறிவில் சிறந்த சான்றோர்களையும், பெரியோர்களையும் அவமதிப்பவர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் விரைவில் தாழ்ந்த நிலைக்கு வருவார்கள்.

கோவில் சொத்துக்களை தன்னுடையதாக மாற்றி கொண்டவரை மட்டுமல்லாமல் அவர்களுடைய குலமும் சேர்ந்து அழிந்துவிடும். தானத்தை கொடுப்பவர்களும், தானத்தை பெறுபவர்களும் நல்ல குணங்களையும், பண்புகளையும் கொண்டிருப்பது தானத்தின் பலனை பன்மடங்கு அதிகரிக்கும். புண்ணிய காலங்களில் தானங்கள் செய்வது தானத்தின் பலனை விருத்தி செய்யும். தை மாத பிறப்பன்று தானம் செய்வதினால் தானம் செய்தவர்கள் சூரிய லோகத்தில் வாசம் செய்வார்கள். கருடாழ்வாருக்கு ஒருவர் தானம் பெறுவதினால் ஏதாவது தோஷம் உண்டாகுமா? என்று ஐயம் தோன்ற அதை நாராயணனிடம் வினவினார்.

தானமாக பெறுகின்ற எந்தவொரு பொருளுக்கும் தோஷம் என்பது இல்லை. ஆனால் தானமாக பெற்ற பொருளை தவறான வழிகளில் பயன்படுத்தினால் தோஷத்தின் வீரியம் அதிகமாகும். தானம் பெற்றவர் காயத்ரி ஜெபம் செய்வதாலும், புண்ணிய ஷேத்திரங்களில் தீர்த்தமாடுவதாலும் தானம் பெற்றதினால் ஏற்பட்ட தோஷத்தினை குறைத்து கொள்ள முடியும்.
 
Top