இளம்பிள்ளை ஊர் வரலாறு

இளம்பிள்ளை சித்தர்கோவில் கஞ்சமலை காலங்கிசித்தர்
இளம்பிள்ளை அருகே சித்தர்கோவில் என்னும் ஊரில் திருமூலரின் சீடர் கஞ்சமலை சித்தர் (எ) காலங்கி சித்தர் தனது சிஷ்யர்களுடன் குடில் அமைத்து வாழ்ந்துவந்தார். காலங்கி சித்தர் காயக்கற்ப மூலிகை சம்மந்தமான ஆய்வும் ரசவாத சம்மந்தமான ஆய்வும் செய்துவந்தார். ரசவாதம் என்பது இரும்பை தங்கமாக்கும் வித்தையாகும். (எங்கள் ஊருக்கு அருகே உள்ள ஊரில் ஒருவர் இரும்பை ஏழரை மாத்து தங்கமாக செய்ததால் ஏழுமாத்தானூர் எனும் பெயருடன் வழங்கப்படுகிறது.) காயகற்ப மூலிகை என்பது எப்போதும் இளமையாக வைத்திருக்கும் மூலிகை எனப்பெயர். அவர் அரும்பாடுபட்டு அந்தமூலிகையை தேடிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் தனது சிஷ்யர்களிடம் உணவு சமைக்க சொல்லிவிட்டு மூலிகையை தேட சென்றிருந்தார். அப்போது சிஷ்யர்கள் சமைத்துக் கொண்டிருந்த சாப்பாட்டை அடிபிடிக்காமல் இருக்க பக்கத்தில் கிடந்த மூலிகை குச்சியைக் கொண்டு கிளரினார்கள். என்ன மாயம் சாப்பாடு கருப்பு நிறமாக மாறிவிட்டது (அந்தமூலிகை குச்சி தான் கருனொச்சி). ஆகவே குரு வந்தால் தம்மை கோபிப்பார் என அந்த உணவை சிஷ்யர்கள் உண்டு விட்டானர். என்ன ஆச்சரியம் சிஷ்யர்கள் அனைவரும் இளமை ஆகிவிட்டனர். குரு வந்தார் சிஷ்யர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் யார் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என வினவினார். சிஷ்யர்கள் நடந்ததை குருவிடம் சொன்னார்கள். குரு அந்த மூலிகையை தான் இவ்வளவு நாளாக நான் தேடிக்கொண்டு இருக்கிறேன் ஆகவே குச்சி எங்கே என கேட்டார். அதை எரித்து விட்டோம் என கூறினர். பின் அந்த உணவு இருக்கிறதா என கேட்டார். உணவை உண்டு விட்டோம் என கூறினர். பின் குரு செய்வது அறியாது சிறிது நேரம் சிந்தித்தபின். ஒரு சிஷ்யனின் வயிற்றில் ஓங்கி குத்தினார் அவன் வாந்தி எடுத்தான் அதனை குரு உண்டார் அவரும் இளமை ஆனார். அதனால் தான் இளம்பிள்ளை என பெயர் வந்தது.

இளம்பிள்ளைக்கு அருகே புகழ் பெற்ற (காலங்கி நாதர்) சித்தர்கோயில் உள்ளது. அங்கு வியத்தகு கல்ப மூலிகைகள் இருக்கின்றது. சித்தர்கோவிலில் இருக்கும் மூலிகை கிணற்றில் குளிக்க சகல நோயும் போகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.சித்தரை தரிசித்தால் சகலவித தோசமும் நீங்கி வாழ்வில் நினைத்தது கிட்டும் என்பது ஐதீகம்.
 
Top