ஆபத்து சகாயேஸ்வரர் திருக் கோயில் - ஆலங்குடி

ஆபத்து சகாயேஸ்வரர் திருக் கோயில்,ஆலங்குடி (திரு இரும்பூளை)

இது பிரதோஷ வரலாற்றுத் தலங்களில் ஒன்று . குரு பகவானுக்கு சம்பந்தம் இல்லை. குருத் தலம் , குரு பரிகாரத் தலம் என்று கூறுவது மகா பாவம்..

பழங்காலத்திலும் தற்காலத்திலும் ஆலங்குடி என்றும் இடையிலே இரும்பூளை என்றும் வழங்கப்பட்ட திருத் தலம் கும்பகோணத்திற்கு அருகே உள்ளது. இரும்பூளைச் செடிகள் நிறைந்த வனப் பகுதியில் லிங்கப் பரம்பொருள் வெளிப்பட்டு இருந்ததால் பரமேஸ்வரனுக்கு இரும்பூளை யீசர் காசி யாரண்யர் என்று திருநாமம்.​

இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
என்று பதிகம் முழுவதும் திருஞான சம்பந்தர் போற்றுகிறார்.
சுழற்றி அடித்து விரட்டிய மிகக் கொடிய ஆலகால நஞ்சினால் மேனி கருப்பாகி அஞ்சி ஓடிய திருமால் பிரம்மன் அம்மன் முதலான தெய்வங்களும் தேவர்களும் வடக்கே உள்ள கயிலை மலையை வலம் வந்து நமச்சிவாய நாமம் ஓதிக் காப்பாற்றுமாறு தொழுதனர். எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட சிவலோக நாதர் சுந்தரர் என்ற சிவ கணத்தை அனுப்பி நஞ்சினை உருண்டையாகத் திரட்டிக் கொண்டு வரப் பணித்தார்.​

சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார் (அப்பர்)

என எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட ஒளிமயமான முக்தி உலகமான சிவ லோகத்தில் திருப் பணி செய்து வாழும் சுந்தர சிவ கணம் ஈசன் நாமம் ஓதி விஷத்தைத் திரட்டிக் கொண்டு வந்தார்.

ஒளி திகழ் மேனி கருகினார் எல்லாம் கை தொழுது ஏத்தக் கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப் பருகினார் (சம்பந்தர்) என எல்லாம் வல்ல ஈசன் விஷத்தை வாங்கி அமுதம் போன்று உட்கொண்டு அருளினார் . விஷத்தின் தாக்குதலிலிருந்து விடுபட்ட அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் பெரிதும் மகிழ்ந்து நிம்மதி அடைந்தனர். ஆயினும் விஷம் எங்கு போயிற்று என்ன ஆயிற்று என்று தெரியாமல் கலங்கினர்.

துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த (சம்பந்தர்) என அச்சம் கொண்டு நிம்மதி இல்லாமல் தவித்த அனைவரும் இரும் பூளைச் செடிகள் நிறைந்த பகுதியில் லிங்கப் பரம்பொருளைப் பூசை செய்து வழிபட்டுத் தங்கள் உயிரைக் காத்தருளிய கோலத்தையும் வகையையும் காட்டி அருளுமாறு வேண்டினர்.​

ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேலாய தேவர் எல்லாம் வீடுவர் காண்

சிற்றுயிர்க்கு இரங்கி காய் சின ஆலம் உண்டாய் (திருவாசகம்) என அரி அயன் ருத்திரன் சக்தி லட்சுமி சரசுவதி உள்ளிட்ட தெய்வம் தேவர்கள் ஆகிய உயிரினங்கள் எல்லாம் இறந்து போகாமல் பாதுகாத்து ஆல கால விஷத்தை உட்கொண்டு அருளிய முழுமுதல் கடவுள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஆலகால நஞ்சினை நீல மணி போன்று கழுத்திலே நிறுத்தி வைத்து வெண்மையான சிவப்பான செம்பவள மேனியும் நீல மணி கண்டமுமாகத் திருக் காட்சி தந்தருளினார் . இதனால் இரும்பூளைத் திருத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. ஈசனுக்கு ஆபத் சகாயேஸ்வரர் என்று அருள் நாமம்.​

ஏரார் இரும்பூளை இடம் கொண்ட ஈசன் காரார் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே
நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே (சம்பந்தர்)
மாறிலாத மாக் கருணை வெள்ளமே (திருவாசகம்)
மாறிலா மேனி உடையார் தாமே (அப்பர்)
காரி உண்டிக் கடவுளது இயற்கையும் (மலைபடுகடாம் சங்க காலக் கவிதை)

என்று ஈசனது எல்லை யில்லாத கருணையையும் எல்லை யில்லாத வல்லமையையும் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய தேவர்கள் அண்ட சராசரங்களையும் காத்த நஞ்சுண்ட நீல கண்டனைப் போற்றித் துதித்து மகிழ்ந்தனர். ஆனந்தக் களிப்போடு அரி அயன் அம்மன் சூரியன் சந்திரன் தேவியர் முதலியோர் பிரதிஷ்டை செய்து பூசித்த லிங்கங்கள் பிரகாரத்தில் உள்ளன. ஆபத்சகாயரைப் பூஜித்த உமையவள் தனிச் சந்நிதியில் திகழ்கிறாள். லட்சுமி பிரகாரத்தில் அமர்ந்துள்ளாள். ஆலங்குடியில் காட்சி அருளிய ஈசனது நீல மணி கண்டத்தின் அழகில் மயங்கி விஷம் என்பதை மறந்து தீண்டிய உமை விஷ வேகத்தால் அழகும் இளைமையும் இழந்து முதியவளாய் விருத்தாம்பிகை ஆனாள். விருத்தாச்சலத்தில் விருத்த கிரீசரை வழிபட்டு ஈசன் அருளால் மீண்டும் இளமை பெற்று பாலாம்பிகை ஆனாள்.

ஈசன் ஆலம் உண்டது தோற்றம் அவதாரம் அம்சம் பிறப்பு உள்ள அரி அயன் ருத்திரன் பராசக்தி லட்சுமி சரசுவதி முதலிய யாரும் செல்ல முடியாத சிவலோகம், பிறப்பு இறப்பு நீங்கி முக்தி பெற்ற ஆத்மாக்கள் சிவ கணமாகித் திருப்பணி புரிகின்ற முக்தி உலகம் ஆதலால் சுருட்டப் பள்ளிக் கதை சிவ நிந்தனை செய்யும் கட்டுக் கதையே, பரமன் மாற்றம் இல்லாதவர், நெருப்பே மேனியானவர் நெருப்பே கண் ஆனவர், தன் விருப்பப்படி யாராலும் பார்க்க முடியாதவர், உருவம் இல்லாமல் எங்கும் நிறைந்து உள்ளவர் என்ற சிவ இயல்பு தெரியாத நாஸ்திகக் கயவர்களால் கட்டப்பட்டதே.

நீல கண்டன், கங்காதரன் என்று திருநாமத்தைச் சொல்லும் போது நீல நிற கழுத்து உடையவன், கங்கையைத் தாங்கியுள்ளவன் என்று பொருள் தெரிந்து வாயால் சொன்னால் போதாது. மாணிக்க வாசகர் கூறுவது போல் அவற்றின் பொருளை உணர்ந்து சொல்ல வேண்டும். அன்று ஈசன் கங்கையைத் தாங்காது இருந்தால் மண்ணுலகம் முற்றும் அழிந்து பாதாளத்தில் அழுந்திப் போயிருக்குமே, விஷம் உண்ணாமல் இருந்திருந்தால் பிரம்மன் திருமால் அம்மன்கள் முதலாக அனைவரும் இறந்து அனைத்து உலகங்களும் அழிந்திருக்குமே இன்றளவும் தெய்வம் முதல் புல் வரை உயிர்களும் உலகங்களும் வாழ்கின்றன என்றால் அதற்குப் பரம சிவனது மாபெரும் கருணையல்லவா காரணம் என்று சிந்தித்துப் பார்க்கும்போதுதான் பரமேசுவரனது எல்லை யில்லாத திருவருளையும் எல்லை யில்லாத சக்தியையும் உள்ளம் உணரும், நெஞ்சம் உருகும், கண்ணில் ஆறு போல் நீர் தானே பெருகும், மெய் சிலிர்க்கும், கடவுள் என்பது என்ன யார் எப்படிப்பட்டவர் என்ற மெய் ஞானம் உண்டாகும். பொய்யப்பன் பொய்யம்மைகளை விடுத்து ஆத்மா ஆத்ம நாதரை நாடித் தன்னை அறியாமல் ஓடும் . இவ்வாறு தலந்தோறும் எல்லாம் வல்ல ஈசனின் அருமை பெருமைகளை உருகி உருகி நினைந்து வழிபட்டு வந்த அகஸ்தியர் ஆலங்குடியில் சிவ பூஜை செய்து தொழுத போது பராபரன் கல்யாண சுந்தரராய்த் திருக் கல்யாணக் காட்சி தந்தருளினார். உமையுடன் விளங்கும் ஈசனை ஒவ்வொரு பாடலிலும் திருஞான சம்பந்தர் போற்றுகிறார். திருஞான சம்பந்தர் பதிகம் முழுவதும் கடவுளின் இயல்புகளையும் திருக் கோலங்களையும் அருட் செயல்களையும் அடியவர்கள் சொல்லியும் கேட்டும் போற்றும் முறையில் அமைந்துள்ளது. அகஸ்தியர் பிரகாரத்தில் உள்ளார்.

ஆலங்குடி திருத்தலத்திற்கும் நவகிரகங்களில் ஒருவரான தேவ குருவாகிய பிரகஸ்பதி எனப்படும் வியாழ பகவானுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆலங்குடியைத் குருத் தலம், குரு பரிகாரத் தலம் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும் . வேதமும் வேதப்பொருளும் உரைத்த ஞான சிவம் தட்சிணா மூர்த்தியை குரு பகவான் என்பது வடிகட்டிய சாக்கடை நாஸ்திகம் மிகக் கொடூர சிவ நிந்தனை . தேவ குருவான பிரகஸ்பதி தஞ்சாவூருக்கு அருகே உள்ள திட்டை எனப்படும் தென் குடித்திட்டை பசுபதீஸ்வரர் (வசிஷ்டேஸ்வரர்) திருக் கோயிலில் சிவ பூஜை செய்து வியாழன் என்னும் கிரகத்திற்கு அதிபதியானார். இவ்வாறே அசுர குருவான சுக்கிராச்சாரியார் சிவ பூஜை செய்து வெள்ளி என்னும் கிரகத்திற்கு அதிபதியானார்.​
 
Top