ஆணவம் - வேறு பெயர்கள்

அறியாமையைக் குணமாகக் கொண்ட ஆணவம், பசுத்துவம், பசுநீகாரம், மிருத்தியு, மூர்ச்சை, மலம், அஞ்சனம், அவித்தை, ஆவிருதி ஆகிய காரணப் பெயர்களைப் பெற்று விளங்கும்.

ஆணவத்தின் வேறு பெயர்கள் காரணப் பெயராமாறு

1. பசுத்துவம் : உயிரைப் பசுத்தன்மை அடையச்செய்வது.
2. பசுநீகாரம் : உயிரின் அறிவை மூடுவது.
3. மிருத்தியு : உயிரை சீவிக்கவிடாது தடுப்பது.
4. மூர்ச்சை : உயிரை மயங்கிக் கிடக்கச் செய்வது.
5. மலம் : உயிரை அசுத்தமாக்குவது.
6. அஞ்சனம் : உயிரை இருள் போன்று மறைப்பது.
7. அவிச்சை : உயிருக்கு அறியாமையைச் செய்வது.
8. ஆவிருதி : உயிரின் அறிவாற்றலை மறைப்பது.

மேற்கண்டவற்றிலிருந்து பின்வரும் செய்திகள் உளங்கொளத்தக்கன. ஆணவம்,

1. உயிரின் அறிவை மறைப்பது.
2. இயற்கைக் குற்றமாய் விளங்குவது.
3. இயற்கைக் குற்றமாதலின் தொன்றுதொட்டு இருப்பது.
4. உயிர் அறிவு மறைக்கப்படுதலின், மறைக்கும் தன்மையுடைய ஆணவம் உள்பொருள்.
5. தனித்து நின்றும் பிறவற்றோடு கூடியும் அறிவை மறைப்பது.
6. இது எழுவகைக் காரியங்களாய் தொழிற்படுவது.
7. தனிப் பொருளாய் இருப்பது.
8. உயிர்தோறும் வெவ்வேறு விதமாய் இருப்பது.
9. உயிர்நிலைப் பாகுபாட்டிற்குக் காரணமாய் இருப்பது.
10.உயிரின் அனைத்துத் துன்பங்களுக்கும் மூலமாய் விளங்குவது.
11. தன் செயலால் பல்வகைக் காரணப்
பெயர்களைப் பெற்று விளங்குவது.

எழுவகை காரியங்கள் :
ஆணவத்தின் செயலாற்றல் மோகம், மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் என ஏழுவகைப்படும்.

சிவஞான முனிவர் உரைத்திறன் என்னும் நூலில் இருந்து..
 
Top